வீட்டு உரிமையாளருக்கும் எனக்கும் இடையே ஒரு பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக ஒருநாள் பிரபல ரவுடி ஒருவரை அழைத்து வந்து என்னை மிரட்டினார். அதன் பிறகே எனது மனைவி கடத்தப்பட்டுள்ளார் என மோகனதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு அசரப்பா வீதியில் கணவருடன் நடந்துசென்றுகொண்டிருந்தபோது விஜயராணி (34) என்ற இளம் பெண் சிவில் உடையில் வெள்ளை வானில் வந்தோரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது கணவரான மோகனதாஸ் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடமும் தெரிவித்த புகாரிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மோகனதாஸ் தனது புகாரில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்திய வம்சாவளியான நான் யாழ்ப்பாணப் பெண்ணாகிய விஜயராணியை மணமுடித்து கடந்த 18 வருடங்களாக நீர்கொழும்பில் வசித்து வருகிறேன். நான் கூலி செலுத்தி வாடகைக்கு இருக்கும் இடத்தின் உரிமையாளர் என்னை வெளியேற்றுவதற்கு முயற்சித்ததால் நான் பொலிஸில் முறைப்பாடு செய்தேன். பொலிஸாரின் விசாரணைக்குப் பிறகு பத்தாயிரம் ரூபா (10,000/=) கூலி செலுத்தும்படி கேட்டுக்கொண்ட உரிமையாளருக்கு அந்தத் தொகையை செலுத்துவதாக பொலிஸ் நிலையத்தில் ஒப்புக்கொண்டேன்.
இதற்கிடையில் பிரபல ரவுடி என்று கூறப்படும் `பொடிகுமார்' என்பவரை அழைத்து வந்து உரிமையாளரான ஆர்.ஏ.கொன்ஸடாட் பெரேரா என்னை மிரட்டினார். இந்த நிலையில் சம்பவதினம் நானும், எனது மனைவியும் அசரப்பா வீதியில் நடந்துகொண்டிருந்தபோது, இனந்தெரியாத வெள்ளை வானில் வந்தவர்கள் எங்களைக் கடத்திச் செல்ல முற்பட்டனர். நாங்கள் கூக்குரல் எழுப்பியதும் இருதய நோயாளியான எனது மனைவியை பலவந்தமாக இழுத்து வானில் ஏற்றிக்கொண்டு துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி விட்டுச் சென்றனர்.
நான் அங்கு வந்த முச்சக்கரவண்டியில் அவர்களைத் துரத்திச் சென்றபோது துப்பாக்கியைக் காட்டியதும் நான் பயத்தினால் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரங்களைத் தெரிவித்துப் புகார் செய்தேன். தமிழர் என்ற காரணத்தினால் எங்களை இம்சிக்கும் காணி உரிமையாளர் மீதே எனக்கு சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்தபோதும் எனது மனைவி இன்னும் திரும்பிவரவில்லை. எங்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிப்பதற்கு தற்போது முயற்சிக்கப்படுகிறது. நானும் கடத்தப்படலாம் என அஞ்சுகிறேன். பொலிஸாரோ அக்கறையுடன் நடந்துகொள்வதாகத் தெரியவில்லை. பயங்கரவாத பிரிவுக்கு மொட்டைக் கடிதம் போட்டு எனது மனைவியைக் கடத்தினார்களா? அல்லது எங்களை காணியை விட்டு வெளியேற்றுவதற்கு இந்தக் கடத்தலை நடத்தினார்களா? என்று எனக்குப் புரியவில்லை. எனது மனைவியை ஒப்படைத்தால் காணியை விட்டு ஒதுங்கிக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment