மடுமாதா ஆலயத்தின் நிர்வாகத்தை ஏற்குமாறு இலங்கை இராணுவம் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும், இது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள குருமார்களின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அத்தோடு இராணுவத்தின் இணையத்தளம் கூறுவது போல தாங்கள் இன்னும் ஆலயத்தின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆலயத்தை பொறுப்பேற்பதும், மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு ஆலயத்தில் நிறுவுவது ஆகியவை இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலயத்தை பொறுப்பேற்பது மட்டுமே ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், ஆலய வளாகத்திற்குள் சீருடையில் ஆயுதம் தாங்கிய துருப்புகளின் நடமாட்டத்தை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க இராணுவம் முயற்சி எடுத்தால் அதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அனுராதபுரம் மற்றும் காலி ஆயர்களுடன் தாம் விடுதலைப் புலிகளை சந்தித்து மடுமாதா ஆலயத்தில் மீண்டும் மாதாவின் திருச்சொரூபத்தை நிறுவுவது தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் எந்த வழியாக எடுத்து வருவது என்பது இருதரப்பாரின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment