Tuesday, May 13, 2008

15 வயதில் தந்தையானார்

ராஜஸ்தானை சேர்ந்த 15 வயது சிறுவன், ஒரு குழந்தைக்கு தந்தை ஆகியுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நிகழ்வது வழக்கம். இதை தடுக்க, மாநில அரசு, சமீபகாலமாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, கிராமப் பகுதிகளில், குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோல் நடந்த ஒரு திருமணத்தின் விளைவாக, 15 வயது சிறுவன் ஒருவன், ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளான்.



அதுகுறித்த தகவல்கள் வருமாறு: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம், சனாவதா. இங்குள்ள ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கியாராம். பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நான்காண்டுகளுக்கு முன், (கியாராமுக்கு, 11 வயது நடந்து கொண்டிருந்தபோது) கியாராமின் பெற்றோர், அவனுக்கு திருமணம் செய்வது, என முடிவு செய்தனர். அதே கிராமத்தை சேர்ந்த, தேவி என்ற சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். (தேவி, கியாராமை விட, இரண்டு வயது பெரியவள்)கியாராமின், பள்ளித் தோழர்களும், திருமணத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், கியாராமின் மனைவி தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தான், அப்பாவான விஷயத்தை பற்றி, கியாராம், பள்ளியில் மூச்சுக் கூட விடவில்லை. குழந்தை பிறந்தது தெரிந்தால், கேலி செய்வார்களோ என்ற பயமே, இதற்கு காரணம். இருந்தாலும், சில நாட்களுக்கு முன், இந்த விஷயம் வெளியில் கசிந்து விட்டது. பள்ளியிலும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதுபற்றி, ஆசிரியர்கள், கியாராமிடம் விசாரித்தபோது, வழக்கம்போல் மவுனமாகவே இருந்தான்.



இதுபற்றி கியாராமின் தலைமை ஆசிரியர் கோவிந்த் ராம் கூறுகையில்,"இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும்,ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தேன். உலகத்திலேயே, மிக குறைந்த வயதில் அப்பாவான நபர், கியாராமாகத்தான் இருக்கும். கியாராம் மட்டுமல்ல. பள்ளியில் படிக்கும், 12க்கும் அதிகமான மாணவர்களுக்கு, ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதா, இல்லையா என்பது, ஊருக்குள் சென்று விசாரித்தால் தான் தெரியும்'என்றார். இதே பார்மர் மாவட்டத்தில், இன்னும் ஒரு அதிசயமும் அரங்கேறியுள்ளது. கடந்தாண்டு, இந்த மாவட்டத்தை சேர்ந்த பீர்மா ராம் ஜாட் என்ற முதியவர், தனது 88 வயதில், ஒரு குழந்தைக்கு தந்தையானார். உலகிலேயே, அதிகமான வயதில் தந்தையானவர் இவர் தான், என, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பீர்மா ராம், 88 வயதில் தந்தையானதற்கு, அவர் குடித்த ஒட்டகப் பால் தான் காரணம் என, அவரே ஒப்புக் கொண்டார். ஆனால், கியாராம், 15 வயதில் தந்தையானதற்கு, ஏதாவது விசித்திரமான காரணம் உள்ளதா என, இனிமேல் தான் தெரிய வரும்.

No comments: