Tuesday, May 13, 2008

ஏமாந்த பட்டதாரி பெண்கள்


டுபாக்கூர் சாப்ட்வேர் நிறுவனத்தில், வேலைக்காக பணத்தை கட்டி, பட்டதாரி பெண்களும் அதிகளவில் ஏமாந்துள்ளனர். அண்ணாநகர் போலீசார் விசாரித்த மோசடி வழக்கு, மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தலைமறைவான சாப்ட்வேர் நிறுவன நிர்வாகிகளுள் ஒருவர், ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் நிறுவன நிர்வாகிகளை தேடி ஆந்திரா சென்ற தனிப்படை போலீசார் வெறுங்கையுடன் திரும்பினர்.



சென்னை அண்ணா நகர் 2வது அவென்யூ, ப்ளு ஸ்டார், திருமங்கலம் வசந்தம் காலனி, நெற்குன்றம் உட்பட 5 இடங்களில் "விஸ்ப்ரோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் "டுபாக்கூர்' சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டது. அந்நிறுவனத்தினர், "ஜாவா ப்ரோகிராமர்' வேலை தருவதாக கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தனர். இது குறித்து, சிவகாசியை சேர்ந்த ராஜேஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். டுபாக்கூர் நிறுவனத்தினரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு தனிப்படை போலீசார், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புராஜெக்ட் மேலாளர் ஸ்ரீகணேஷ்(62), கம்ப்யூட்டர் கல்வி மேலாளர் சார்லஸ்(36), கம்ப்யூட்டர் சப்ளையர் கிரண் அகர்வால்(32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், நிறுவனத் தலைவரான ஆந்திராவை சேர்ந்த சிவக்குமார், மேலாண்மை இயக்குனர் செந்தில், பொதுமேலாளர் "கேப்டன்' வெங்கடேஷ் ஆகியோரை தேடி மற்ற இரண்டு தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் பெங்களூரு விரைந்தனர்.



ஆந்திரா சென்ற தனிப்படையினர், விஜயவாடா மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவக்குமாரின் வீடுகளுக்கு சென்றனர். அவரது வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. ஆந்திரா போலீசார் உதவியுடன், அங்குள்ளவர்களிடம் தனிப்படையினர் விசாரித்தனர். விசாரணையில் விஜயவாடா வீட்டை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும், மசூலிப்பட்டின வீட்டை கடந்த பத்து நாட்களுக்கு முன்பும் சிவக்குமார் காலி செய்தது தெரிய வந்தது. பட்டப்படிப்பு படித்த சிவக்குமார், கம்ப்யூட்டர் சம்பந்தமான எந்த படிப்பும் படிக்காமலேயே "நுனிநாக்கு' ஆங்கிலத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு, ஊர் ஊராக சென்று இதுபோன்று மோசடி செய்வதையே தொழிலாக கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாரின் கையில் சிவக்குமார் சிக்கவில்லை.



சிவக்குமாரின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும், அவரின் உறவினர்கள் சிலர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், சிவக்குமார் விரைவில் சிக்குவார் என்று கருதப்படுகிறது. இதே போல், தலைமறைவாக உள்ள சிவக்குமாரின் வலதுகரமாக செயல்பட்ட ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடேசன் என்பவரும் சிக்குவார் என தெரிகிறது. பெங்களூரு சென்ற தனிப்படையினர் வெறுங்கையுடன் தமிழகம் திரும்பியுள்ளனர்.சிவக்குமாரை பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். திருமங்கலம் போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்ட மோசடி தொகையை நேற்றிரவு கணக்கிட்டனர். அதில், ரூ.50 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது.புகார்தாரர்களை நேரில் அழைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெற, வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் கம்ப்யூட்டர் வசதியுடன் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வருபவர் கூறுவதை வாக்குமூலமாக பத்து வரிகளில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. ஆயிரக்கணக்கில் புகார்தாரர்கள் உள்ளதால், அவர்களை மீண்டும் அழைத்து விசாரிக்க முடியாத காரணத்தால் இந்த ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.



புகார் கொடுக்க 3 ஆவணம் தேவை : சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற கனவில் பணத்தை செலுத்தி ஏமாந்தவர்கள், கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்க வருபவர்கள், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணம் செலுத்தியற்கான ரசீது, சாப்ட்வேர் நிறுவனம் வேலைக்கு சேரும் போது கொடுத்த கடிதம் மற்றும் அந்நிறுவனம் கொடுத்த அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.



தலைமறைவு நபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் : தங்க காசு மோசடியில் முக்கிய நபரான பெரோஸ் கான் மற்றும் பியூட்டி பார்லர் நடத்திய பெண் பத்மா ஆகியோரிடம் மோசடி பணம் கோடிக்கணக்கில் உள்ளது. அவர்களுடன் நிறுவனத்திற்கு விசுவாசமான சிலரும் தலைமறைவாகி விட்டனர். எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் முருகானந்தத்திடம், உதவி கமிஷனர் ராஜாராம், "தங்க காசு மோசடி வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களுக்கு பரிந்து பேசிய பியூட்டி பார்லர் நடத்தி வந்த பத்மா, தங்க காசு திட்டம் குறித்து விரிவான விளக்கங்களுடன் "சிடி' தயாரித்து வெளியிட்ட பெரோஸ் கான் ஆகியோரிடம் மக்கள் ஏமாந்த பணம் கோடிக்கணக்கில் உள்ளது' என கூறினார்.

No comments: