Friday, May 2, 2008

சிக்கியது ஆயுத கப்பலா?

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்ற கடலோரப் பகுதியில் 2 மர்ம இழுவை கப்பல்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு இழுவை கப்பல் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதால் மீனவர்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங் களை கடத்தி செல்ல இந்த இழுவை கப்பல்கள் பயன்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பச்சைக்காடு என்ற இடம் உள்ளது. இது வெட்டாறு கடலோடு கலக்கும் முகத்துவாரமாகும்.
மேலும் தோகை வாய்க்கால் என்ற சிற்றாறும் கடலில் கலக்கும் பகுதியாகும்.
இதனால் இங்கு அலையாத்தி காடுகள் என்று சொல்லப்படும் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. மீனவர்கள் இங்கு கடலுக்கு செல்ல முடியாது. ஏனெனில் இங்கு ஆழம் குறை வாகவும், சேறு மண்டியும் காணப்படும்.

முத்துப்பேட்டை பகுதியே மீனவர்களின் முக்கிய மீன்பிடிப்பு பகுதியாகவும், சிறிய துறைமுகப் பகுதியாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு பச்சைக்காடு பகுதியில் முகத்துவாரம் அருகே 2 மர்ம கப்பல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினரும், திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஒதுங்கியிருந்த 2 கப்பல்களை போலீசார் கைப்பற்றினர். அந்த கப்பல்கள் பெரிய கப்பல்களுக்கு பின்புறம் சரக்குகளை ஏற்றியபடி இன்ஜின் இல்லாமல் செல்லும் இழுவை படகுகளாகும். அவற்றில் 5 டன் வரை சரக்குகளை ஏற்ற முடியும். கைப்பற்றப்பட்ட கப்பல் 150 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும், 5 மீட்டர் உயரமும் கொண்டவையாக இருந்தன.

ஆனால் இந்த இழுவை கப்பல் களில் எவ்வித சரக்குகளும் காணப்படவில்லை.
ஒரு கப்பலில் எஸ்எச்பி1005 என்றும் மற்றொரு கப்பலில் எஸ்எச்பி710 என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. எனவே இவை இரண்டும் ஒரே குழுவைச் சேர்ந்த 2 கப்பல்களாக இருக்கும் என்று தெரிகிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புலிகளுக்கு ஆயுதங்களையும், இன்னபிற தளவாடங்களையும் கடத்தி செல்ல இந்த கப்பல்கள் பயன்பட்டி ருக்கலாம் என்றும், சமீபத்தில் வீசிய நர்கீஸ் புயலால் இவை கடலில் மிதந்து வந்து முத்துப்பேட்டையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்று மூன்றாவது கப்பல் ஒன்று முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் போலீசிடம் தெரிவித் துள்ளனர். அந்த கப்பலையும் கைப்பற்றி விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

No comments: