Wednesday, May 14, 2008

ஜோசப் நவரெட்ணம் ஜெய்நேசன் கடத்தப்பட்டார்

கடல்கோள் அனர்த்தத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்த இளம் குடும்பஸ்தரொருவர் கதிரானவத்தை கராஜில் வைத்து இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் கடத்தப்பட்டவரின் மாமனார் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் முல்லைத்தீவு வற்றாப்பளையை பிறப்பிடமாகக் கொண்டவரும் மட்டக்குளியில் கடந்த 5 வருடங்களாக வசித்து வந்தவருமான ஜோசப் நவரெட்ணம் ஜெய்நேசன் (26 வயது) என்பவரே கடத்தப்பட்டதாக அவரது மாமா நீக்கிலாம்பிள்ளை அஞ்சலோ ஜீவரட்னம் பிரதி அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"கடத்தப்பட்ட எனது மருமகன் திருமணம் முடித்தவர். முல்லைத்தீவில் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தில் மனைவியையும் குழந்தையும் பறிகொடுத்த அவர் கடந்த 5 வருடமாக கொழும்பில் மாமியுடன் வசித்துவந்தார். கதிரானவத்தை கராஜில் தொழில் புரிந்த அவரை கடந்த 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலக்கத்தகடு இல்லாத வெள்ளைவானில் ஆயுதங்களுடன் வந்த ஆறுபேர் பலவந்தமாக ஏற்றி சென்றனர். எனது மருமகன் எதுவிதமான தீய தொடர்புகளும் அற்றவர். மனைவி,பிள்ளையை பறிகொடுத்த கவலையில் இருந்த அவரை எதற்காக? யார்? கடத்தினார்கள் என்று புரியவில்லை.

இவர் கடத்தப்பட்டமை தொடர்பாக மோதரை பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் செஞ்சிலுவை சங்கத்திலும் புகார் செய்துள்ளனர். இது குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என். இலங்கக்கோனிடம் பிரதி அமைச்சர் புகார் செய்துள்ளார்.

No comments: