Wednesday, May 14, 2008

புலிகள் இறுதி யுத்தத்திற்கு பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்த கடும் முயற்சி

புலிகள் இயக்கத்தை அழித்து ஒழிப்பதற்காக அரச படையினர் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் புலிகள் நிலைகொண்டிருக்கும் பிரதேசங்களில் தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் அரசபடையினரின் தாக்குதல்கள் மும்முரமடைந்து வருவதால் அவற்றுக்கு நேரடியாக முகம்கொடுக்க முடியாமல் புலிகள் இயக்கத்தினர் பின்னடைந்து வருவதால் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் எதிர்தாக்குதல்களை மேற்கொள்வதற்காக அங்கு வாழும் மக்களையும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு கடும் முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.
அதிலும் குறிப்பாக பாடசாலை ஆசிரிய, மாணவ சமூகத்தையும் யுத்தத்தில் நேரடியாகவோ பக்கபலமாகவோ ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கம் யுத்தத்திற்காக மாணவ சமூகத்தினரை பலாத்காரமாக கூட்டிச் செல்லும் போக்கை நேரடியாகவே வெளிப்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தின் அரசியற் பிரிவுத் தலைவர் நடேசன் மற்றும் உயர்மட்டத் தலைவரும் பிரபாகரனின் சிரேஷ்ட ஆலோசர்களுமாகிய பாலகுமார் ஆகியோரின் அண்மைக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மேற்படி இரண்டு முக்கிய தலைவர்களும் இந்த நாட்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய முக்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்குச் சென்று இறுதி யுத்தத்திற்காக மாணவ சமூகத்தின் உச்ச பங்களிப்பை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் அவ்வாறே அதற்காக ஆசிரிய சமூகமும் மக்களும் தீவிரமாகச் செயற்பட வேண்டுமெனவும் அறிவித்து வருகின்றன.

அவ்வாறே பாடசாலை ஆசிரியர்களும் மக்களும் புலிகள் இயக்கத்தினருக்கு முக்கியமாக இயக்கத்தின் ஆயுதப்படையினருக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் பாவனைப் பொருட்களை சேகரித்துக் கொடுக்கவே வேண்டுமெனவும் புலிகள் இயக்கம் வற்புறுத்தியுள்ளது. இதற்கேற்ப ஆசிரிய, மாணவ சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் புலிகள் இயக்கத்தின் வற்புறுத்தலுக்கு அஞ்சி கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் புலிகளுக்காக உணவுப் பொருட்களையும் ஏனைய பாவனைப் பொருட்களையும் சேகரித்து வருகின்றனர்.

அரச படையினரின் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளினால் கிழக்கு மாகாணப் பிரதேசங்களை முற்றாக இழந்துவிட்ட நிலையில் தற்போது அவர்களின் வசம் எஞ்சியிருக்கும் வன்னிப் பிரதேசத்தையாவது பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகள் இயக்கம் அதன் உச்ச ஆட்பலம், ஆயுதபலத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே இறுதி யுத்தம் என்று கூறி மாணவ, ஆசிரிய சமூகம் உட்பட அப்பிரதேசங்களில் வாழும் அனைத்து மக்களையும் யுத்த நடவடிக்கைகளில் இழுத்துவிடுவதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் அரசியற் பிரிவுத் தலைவர் நடேசனும், சிரேஷ்ட ஆலோசகர் பாலகுமாரும் இதற்காகப் பாடசாலைகளுக்குச் சென்று பகிரங்கமாகவே பேசியிருப்பது தொடர்ந்து மாணவ சமூகத்தினரை புலிகள் இயக்கத்தினர் பலாத்காரமாகவேனும் கடத்திச் சென்று யுத்தப் பயிற்சி அளித்து இயக்கத்தின் இறுதி யுத்தத்திற்காக அவர்களைப் பலியிடப்போவதையே எடுத்துக்காட்டுவதாக வன்னி மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

லங்காதீப விமர்சனம்: 11/05/2008

No comments: