Tuesday, May 13, 2008

நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க விடமாட்டேன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பிள்ளையான் தட்டிப்பறிக்க ஒரு போதுமே இடமளிக்கப்படாதென தெரிவித்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாளை புதன்கிழமை தான் முதலமைச்சராக பதவியேற்பது உறுதியென உறுதிபடத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்ததாவது;

கிழக்குத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவாரென ஜனாதிபதி கூறியிருந்தார். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுடன் இதுபற்றிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 8 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 6 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர். முஸ்லிம் சமூகம் அதிக பிரதிநிதிகளை பெற்றிருக்கும் நிலையில், நானே முதலமைச்சராக வரவேண்டும். முஸ்லிம்கள் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் ஹிஸ்புல்லாவே முதலமைச்சரெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், எவ்வாறு முதலமைச்சர் பதவியை பிள்ளையான் கோரமுடியும்? முதலமைச்சர் பதவியைக்கோர அவருக்கு எந்தவொரு அருகதையும், உரிமையும் கிடையாது.

அவர் முதலமைச்சர் பதவியை தட்டிப்பறிக்க முயல்கிறார். இதனை நாம் ஒருபோதுமே அனுமதிக்கமாட்டோம்.

கிழக்கு மாகாணத் தேர்தலில் 6 தமிழ் சகோதரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை பிள்ளையான் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். நாளை நான் முதலமைச்சராக பதவியேற்பேன். இதனை அவரினால் தடுக்கமுடியாது.

பிள்ளையானுக்காக எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு நான் தயாரில்லை. நானும், முஸ்லிம் அமைச்சர்களும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாகவும், வீதிகளில் பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி, வாகனப்பேரணி சென்று தமது ஆதரவை ஹிஸ்புல்லாவுக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: