Tuesday, May 13, 2008

நீரோவையும் விஞ்சிய கொடூரக்காரர்கள்

மியன்மாரில் 10 நாட்களுக்கு முன்னர் வீசிய படுமோசமான சூறாவளியினால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியிருக்கிறார்கள். சுமார் 15 இலட்சம் மக்கள் வீடுவாசல்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியிருக்கிறார்கள். 1991 ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்த சூறாவளிக்குப் பிறகு ஆசியப் பிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரச் சூறாவளியாக மியன்மாரைத் தாக்கிய நர்கீஸ் என்றழைக்கப்படும் இச்சூறாவளியே கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அமைப்புகளின் பிந்திய மதிப்பீட்டின்படி தற்போது மியன்மாரின் 12 இலட்சத்துக்கும் 19 இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் அவசர உணவு நிவாரணமோ மருத்துவ உதவிகளோ இன்றி அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை மனித அவலங்களுக்கு மத்தியிலும் கடந்த சனிக்கிழமை அந்த நாட்டில் புதிய அரசியலமைப்பு வரைவு ஒன்றுக்கு மக்களின் அங்கீகாரத்தைக் கோருவதற்கான சர்வஜனவாக்கெடுப்பை இராணுவ ஆட்சியாளர்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். ரோமாபுரி எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அந்த நீரோவையும் விஞ்சிவிட்டார்கள்.
இயற்கை அனர்த்தத்தின் விளைவாக தங்களது நாட்டுக்கு நேர்ந்த கதி குறித்து முழுமனிதகுலமுமே வெறுக்கத்தக்க அளவுக்கு அலட்சியமனோபாவத்துடன் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் நடந்துகொண்டிருக்கின்றார்கள். சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதால் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடையக்கூடிய கவலைக்குரிய சூழ்நிலையிலே மீட்புப்பணிகளிலோ புனர்வாழ்வுப்பணிகளிலோ கவனம் செலுத்துவதை விடுத்து கடந்த வாரம் முழுவதும் இராணுவ ஜெனரல்கள் புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பான சர்வஜனவாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்தியிருந்தனர். அவசர நிவாரண உதவிகளையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்குமாறு உலகம் பூராவுமிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள்களையெல்லாம் அலட்சியம் செய்த இராணுவ ஆட்சியாளர்கள் நிவாரணப் பணிகளை தாங்களே கையாளுவதற்கு விரும்புகிறார்கள். பெரிய அயல் நாடுகளான இந்தியாவும் சீனாவும் அனுப்புகின்ற நிவாரண உதவிகளை ஏற்றுக் கொண்டிருக்கும் இராணுவ ஆட்சியாளர்கள் மேற்குலகின் உதவிகளையும் உதவிப் பணியாளர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். நிகழ்ந்திருக்கும் பேரனர்த்தத்தை நோக்கும் போது அதன் விளைவாகத் தோன்றியிருக்கும் மனிதாபிமான நெருக்கடியை கையாளக்கூடிய தகுதி கொண்டதாக மியன்மார் நிருவாகத்தைக் கருதமுடியாது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் நேரக்கூடிய மனித அவலங்களைப் பற்றி எந்தவிதமான கவலையோ அக்கறையோ இல்லாதவர்களாக இராணுவ ஆட்சியாளர்கள் காணப்படுகின்றார்கள்.

வெளியுலகிற்கோ அல்லது சொந்த மக்களுக்கோ பதில் கூற வேண்டிய கடப்பாட்டைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத தலைமைத்துவங்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளினால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக உணர்த்துவதாக மியன்மாரின் தற்போதைய நிலைவரம் அமைந்திருக்கின்றது. நாடு எதிர் நோக்கியிருக்கின்ற பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியைச் சமாளித்து மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக சாத்தியமானளவு கூடுதல் வெளிநாடுகளின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகளைச் சிந்தனைக்கு எடுக்கத்தயாரில்லாத அளவுக்கு மியன்மார் நிருவாகம் அதிகார வெறியும் கொடூரத்தன்மையும் கொண்டதாக காணப்படுகின்றது. நோபல் பரிசு பெற்ற எதிரணித் தலைவியும் ஜனநாயகப் போராளியுமான ஆங் சான் சூ கீய் தேர்தல்களில் போட்டியிடுவதை அல்லது பொதுப் பதவிகளை வகிப்பதை த்தடுப்பதையும் 2010 ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலில் தெரிவு செய்யப்படக் கூடிய பாராளுமன்றத்தில் ஆயுதப் படைகளுக்கு கூடுதலான முக்கியத்துவத்தைக் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட மே 10 சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி முடிப்பதிலேயே இராணுவ ஆட்சியாளர்கள் குறியாக இருந்தார்கள். சர்வஜன வாக்கெடுப்பின் போலித்தன்மையை வெளியுலகம் கண்டு விடும் என்பதற்காகவே சொந்தமக்கள் முன்னென்றுமில்லாத மனிதாபிமான நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தருணத்தில் கூட அவர்களுக்கு உதவுவதற்கு வெளிநாட்டு உதவிப் பணியாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்க இராணுவ ஆட்சியாளர்கள் மறுத்து வந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி மேலும் பல இலட்சம் மக்கள் வீடுவாசல்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகிய நிலையிலும் கூட கடுமையான அழிவுகளுக்குள்ளான பகுதிகளைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருக்கிறது.

அரசியலில் இராணுவத்துக்கு இருக்கும் ஆதிக்கத்தை சட்டபூர்வமானதாக்கி தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரே நோக்கத்தினால் உந்தப்பட்ட ஜெனரல்கள் நாட்டுமக்கள் உணவோ மருந்தோ கிடைக்காமல் சாவதைப்பற்றி சற்றேனும் மனம் இரங்கவில்லை. அதிகாரவெறியர்களுக்கு எந்த மனிதாபிமான நெருக்கடியுமே ஒரு பொருட்டல்ல. இத்தகைய கொடூரத்தனமான இராணுவ கும்பலிடம் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளுக்கான உதவிகளை எந்த நம்பிக்கையுடன் சர்வதேச சமூகம் கையளிக்கமுடியும்?

No comments: