''எங்கள் சகோதரி மஹேஸ்வரி எங்கள் குடும்பத்தினர் கண்முன் படுகொலை செய்யப்பட்டார்''
13.05.08ல் யாழ்ப்பாணம், கரவெட்டியில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட மனித உரிமைவாதியும், சட்டத்தரணியும் சமூக நல அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஆலோசகருமானயுமான மஹேஸ்வரி வேலாயுதததின் கடைசித் தம்பி கணேஷ் வேலாயுதத்தின் வாக்கு மூலம்:
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -21.05.08.
''கடந்த வாரம், எங்கள் தாயாருக்குமிகவும் சுகவீனமாயிருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட எங்கள் குடும்பத்தினர் லண்டனிலிருந்தும், கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணம் போயிருந்தோம். நாங்கள் மொத்தமாகப் பத்துச் சகோதர சகோதரிகள். எங்களில் இருவர் இறந்து விட்டார்கள். லண்டனில் ஐந்துபேர் இருக்கிறோம். மூவர்தான் இலங்கைக்குப் போனோம் மற்ற இருவருக்கும் விசா சரியான நேரத்தில் வராதபடியால் எங்களுடன் வரமுடியவில்லை. மற்ற இருவரும் கொழும்பில் வாழ்கிறார்கள். நாங்கள் எல்லோரும் மஹேஸ்வரி அக்காவுடன் கடந்த சனிக்கிழமை 10ம் திகதி பகல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றோம். அரச பாதுகாப்பு என்ற ஆரவாரத்துடன் போய்ச் சேர்ந்தால் தனது குடும்பத்துக்கு ஏதும் ஆபத்து வரலாம் என்பதால் எனது சகோதரி எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை என்றும், அம்மாவைப் பார்த்துவிட்டு உடனடியாகத் திரும்பும் யோசனையுடனும் எங்களுடன் வந்தார்''.
'' நாங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் அன்று பின்னேரம் , எங்கள் வீட்டில் எப்போதாவது இருந்து விட்டு வந்து தொட்டாட்டு வேலை செய்யும் ஒரு பெண்மணி கல்லோலை என்ற பக்கத்துக் கிராமத்திலிருந்து வந்திருந்தார். அவர், ஏவு பார்க்க வந்தவர் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. அடுத்த நாள் வந்தவர்களைப்பார்க்க (புதினம் பார்க்க- புலனாய்வு பார்க்க?) என்று ஒரு பெண்மணி வந்திருந்தார். .அந்த மனுஷியின் மகன் வன்னியில் புலிகளுடன் இருக்கிறான் என்பது தெரியவந்தது.
''அதே நேரம், எங்கள் தாயின் கடைசி ஆசையான எங்கள் குலதெய்வமான வைரவர் தெய்வத்துக்குக் கும்பாபிஷேகம் செய்யக் கோயிலைத் துப்பரவு செய்து வெள்ளையடிக்கக் கல்லோலைக் கிராமத்திலிருந்து வந்து சில இளம் ஆண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிலரும் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்துபோவோரைக் கண்காணித்தும் விசாரித்துக் கொண்டிருந்ததும் பின்னர் தெரிய வந்தது. அடுத்த நாள், பின்னேரம் எனது மைத்துனர் ஒருத்தர் கடைக்குப்போகும் வழியில், சிலவீடுகள் தள்ளியிருக்கும் ஒரு பெண்மணி 'உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் ஆட்களைப்பற்றி, விசேடமாக மஹேஸ் அக்காவைப்பற்றி விசாரிக்கினமாம்' என்று மைத்துனரிடம் சொல்லியிருக்கிறார். '' எங்கள் வீட்டுக்கு வந்தவர்களை பற்றி விசாரித்த அந்த மனுசி ஆறு மாத காலமாக இந்தப்பக்கம் வரவில்லை அதுதான் விசாரித்தா போலும்'' என்று எங்கள் ஊரில் இருக்கும் அக்கா சொன்னார்.
''13ம் திகதி பகல் அம்மாவின் நிலை மோசமாக இருந்தது. எங்கள் தகப்பனார் 13.05.74ல் மரணமானவர். எனவே, இன்று 13ம் திகதி அம்மாவின் நிலையும் சரியில்லையென்றபடியால்,அம்மாவுக்கு ஏதும் பாரதூரமாக நடக்கலாம் என்ற வேதனையுடன் அம்மாவைச் சுற்றியிருந்தோம். மஹேஸ் அக்கா அம்மாவின் அருகில் அம்மாவின் கையைப் பிடித்தபடியிருந்தார். அம்மாவுக்குப் பேசமுடியாது. அடிக்கடி வீட்டின் முகட்டைப் பார்த்துக் கொண்டு நீண்டநேரம் ஏக்கத்துடனும் பெருமூச்சுடனும் தன் பார்வையைப் பதித்திருந்தார். அன்று பின்னேரமும், எங்கள் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளியிருக்கும் பெண்,அத்தானிடம் கல்லோலையிலிருந்து இன்னொரு மனுஷி ராசாத்தி என்பவர் வந்து அக்காவின் வருகை பற்றி விசாரித்ததாகவும் அந்தப்பெண்னின் மகள் புலி அங்கத்தவர் என்றும் சொல்லப்பட்டது அத்துடன் எங்கள் பக்கத்து வீட்டார் எங்க¨ளைக் கவனமாக இருக்கும்படி சொன்னார்கள்.
''அடிக்கடி தொடரும் இந்த விசாரணைகள் பற்றிய யோசனை வந்ததோ என்னவோ, உடனடியாக மஹேஸ்வரி அக்கா, அமைச்சர் டகலஸ¤க்குப் போன் செய்தார். அப்போது அமைச்சர், தான் ஒரு முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவும், தான் இன்னும் அரைமணி நேரத்தில் திருப்பி போன் எடுப்பதாகச் சொன்னதாகவும் சொல்லப்பட்டது. அப்போது இரவு ஆறு மணிக்கு மேல் (6.45) இருக்கலாம். நாங்கள், ஆண்கள் நாலைந்து பேர் வெளியில் எங்கள் மாமரத்துக்கடியில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். குழந்தைகள் கருக்கிருட்டில் ஒழிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எனது ஐந்து சகோதரிகளும் வீட்டுக்குள் இருந்து சமயல், துப்பரவு செய்தல் போன்ற பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் பிசியாக இருந்தார்கள். அப்போது பவர்க்கட் வந்து விட்டது. கை விளக்கின் உதவியோடு தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
''அப்போது எங்கள் வீட்டுக்கு மூன்று ஆண்கள் இராணுவ உடையில் வந்தார்கள். பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு பையன் பெரிய துப்பாக்கியுடன் (ஏகே 47) மூவரில் ஒருத்தனாக நின்றிருந்தான். அவன்தான் முதல்நாள் ஏவு பார்க்க வந்தவனாக இருந்திருக்கலாம் என்று நம்புகிறோம். வந்த மூவரில் ஒருத்தன் இருளில் நின்றிருந்தான். வந்தவனில் இருபத்தைந்து வயது மதிக்கத் தக்கமாதிரி இருந்தவன், சிங்களத் தமிழில் தாங்கள் இராணுவ அதிகாரிகள் என்றும் வெளியிலிருந்து வந்தவர்கள் எத்தனைபேர் என்றும், அவர்களின் ஐ.டியைத் தான் பார்க்கவேண்டும் என்று சொன்னான். எங்கள் சகோதரிகள் அத்தனைபேரும் பார்ப்பதற்கு ஒருத்தரை ஒருத்தர் வித்தியாசம் காண முடியாத கிட்டத்தட்ட ஒரேமாதிரியான உடற் தோற்றத்தைக் கொண்டவர்கள். அன்று வீட்டு வேலைகளுக்காகப் போடும் ஆடைகளையே அணிந்திருந்தார்கள். புதிதாக வருபவர்களுக்கு யார் மஹேஸ்வரி அக்கா என்று கண்டுபிடிப்பது சிரமமாகவிருந்திருக்கும்''.
'' நான் எங்களில் எத்தனைபேர் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னேன். ஐ.டி. கார்ட்டுகளை எடுக்கச் சொன்னான். நாங்கள் எங்கள் ஐ.டி கார்ட்டுகளை எடுத்தோம். அவன், அக்காவிடம் ஐ. டி கேட்டான். அக்கா இன்னும் அம்மாவின் கையைப்பிடித்துக்கொண்டிருந்தார். கொழும்பில் இருந்து வந்தவர்கள் யார் என்று விசாரித்தார்கள் எல்லோரும் எங்கள் பெயர்களைச் சொன்னோம். அக்கா தனது பெயரைச் சொன்னார். வந்திருந்தவர்கள் இராணுவத்தினர் என்று நம்பிய அக்கா, தான் அமைச்சர் டக்லசின் ஆலோசகர் என்று சொன்னபோது ஐ டி கேட்டவன் 'சொறி , நான் உங்களுடன் கதைக்கவேண்டும், வெளியில் வாங்கோ' என்றான் அதே நேரம், எங்களிடம் ஐ. டி கேட்டவன் வெளியில் நின்ற சின்னப்பையனைப்பார்த்து, 'சுனில் மாத்தையா' என்று கூப்பிட்டான்.
அப்போது எங்களுடன் நின்றிருந்த பக்கத்து வீட்டுக்காரர் வெளியேற முயன்றார். 'எனக்குச் சுனில் மாத்தையாவைத் தெரியும் அவர்களுடன் கதைக்கப்போகிறேன் என்று ஊரில் இருந்த அக்கா வெளியில் வர முயற்சித்தார். சிங்களத்தமிழில் எங்களை விசாரித்தவன் உடனடியாக சுத்த யாழ்ப்பாணத்தமிழில்' யாரும் நகரக்கூடது'என்றான்.அத்துடன் 'உங்களுக்கு நான் சொல்லும் தமிழ் விளங்கவில்லையா யாரும் வெளியிற்போனால் எல்லோரையும் உடனையாகச் சுட்டுப்போடுவோம்' என்றான் அப்போது, எங்கள் வீட்டுக்கு வந்திருப்பவர்கள் சிங்கள இராணுவத்தினர் அல்லர், தமிழர்கள்தான் என்பதும் அவர்கள் யார் என்பதும் புரிந்தது. அக்கா இன்னும் வந்திருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
வெளியிலிருந்து துப்பாகியுடன் உள்ளுக்கு வந்த சின்னப்பையன், அக்காவைப் பார்த்து விட்டு, அடையாளம் சரியென்பதுபோல்,அவனைக் கூப்பிட்டவனைப்பார்த்துத் தலையாட்டினான். ஐ.டியை வாங்கியவனுடன் வந்து நின்றிருந்த மூன்றாமவன், உடனயாகத் தனது இடுப்பிலிருந்து துப்பாக்கியின் மூலம் அக்காவின் நெற்றியில் குறிவத்துச் சுட்டான். அக்கா உடனே கீழே விழுந்தா. மற்றவர்கள் கதறினார்கள். சுட்டவன் கீழே விழுந்து கிடந்த அக்காவில் இன்னும் ஐந்து தரம் சுட்டான். நெற்றியில் இரு குண்டுகள், மார்பில் இரண்டு குண்டுகள் வயிற்றில் ஒரு குண்டு என்று ஐந்து தரம் சுட்டார்கள். எங்கள் எல்லோரையும் அவன் சுடுகிறான் என்று பயந்த நான் நிலத்தில் விழுந்து விட்டேன். சில வினாடிகளுக்குள் சுட்டவர்கள் ஓடி விட்டார்கள். அக்காவின் தலையிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் ஆறாகப் போய்க்கொண்டிருந்தது. அக்காவின் மூச்சு ஒரு சிலவினாடிகளில் நின்றுவிட்டது. இவை எல்லாம் சில வினாடிகளுக்குள் சட்டென்று நடந்து முடிந்து விட்டன.
'' நாங்கள், உடனடியாக் கதவைப்பூட்டி விட்டு, அக்காவின் டையரியிலிருந்த நம்பர்களை எடுத்து அமைச்சர் டக்லஸ¤க்கும் ஜனாதிபதியின் காரியதரிசுக்கும் போன் பண்ணினோம். போலிசாரும் இராணுவமும், விதானையாருடன் வந்து சேர ஒரு மணித்தியாலம் எடுத்தது, வீட்டுக்கு வந்த இராணுவத்தினர், தங்களுக்கு எங்கள் வீட்டின் இடம் தெரிய நேரம் எடுத்ததாகச் சொன்னார்கள். அதன் பின், நீதிபதி வந்து அக்காவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து முடிய இரவு பதினொரு மணிக்கு மேலாகி விட்டது. உடலைப் போஸ்ட்மோர்ட்டம் செய்ய மந்திகை, அல்லது கொழும்புக்குக் கொண்டுபோவது பற்றிக்கேட்டார்கள் எங்களுக்கு அவ்விடத்தில் இருக்கப்பயமாக இருந்தது. அக்காவின் உடலுடன் கொழும்புக்குப்போகவே விரும்புகிறோம் என்று சொன்னோம். அன்றிரவு அக்காவின் பூதவுடல் எங்கள் வேண்டுகோளின் படி பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுக் காலையில் எங்களுடன் சேர்த்துக்கொழும்பிற்கு அனுப்பபட்டது. வந்திருந்த இராணுவத்தினர் மிகவும் கருணையுடன் எங்களைக் கவனித்தார்கள். அம்மாவுக்கும் ஆம்புலன்ஸ் ஒழுங்கு செய்யப்பட்டு விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டு, கொழும்புக்கு வரவிருந்த ஆகாயப் படையினரின் பிரயாணம் இரத்து செய்யப்பட்டு எங்களுக்கான பிரயாணம் ஒழுங்கு செய்யப்பட்டது. இப்பேர்ப்பட்ட மனிதத் தன்மை எங்களின் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாது. தனது உத்தியோக தோரணைக்கப்பால் எங்களுக்காக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் எத்தனையோ உதவிகள் செய்த இராணுவ மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு எங்களது நன்றி எப்போதும் இருக்கும்.
''அம்மாவைப்பார்க்கவந்து விட்டு உடனையாகத் திரும்பிபோக வந்த அக்கா அம்மாவின் பலவீனமான உடல் நிலையாலும், அதே நேரம், தனது குடும்ப அங்கத்தவர்களை ஒரே இடத்தில் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் பார்த்த சந்தோசத்திலும் இன்னொரு நாள் எங்களுடன் நிற்கவெளிக்கிட்டதால் இந்தக்கொடூரத்தை எதிர்நோக்கிவிட்டார். அத்துடன், எங்கள் அக்கா மிகவும் துணிச்சல் உள்ளவர் மட்டுமல்ல ஆத்மீகவாதியுமாவார். ஈபிடிபித் தலைவரும் சமூக நல அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா அவர்கள், அக்கா ஊருக்கு வெளிக்கிடும்போது அக்காவின் பாதுகாப்பு பற்றி அழுத்தமாகச் சொன்னார். நாங்களும் எடுத்துச் சொன்னோம்.
'எது எப்போ நடக்குமோ அதைத்தடுக்க யாராலும் முடியாது, மக்களுக்குப் பணி செய்யவேண்டும் என்பதால் அதற்காக மரணத்துக்குப்பயந்து வாழமுடியாது, கடவுள் எதற்கும் அருள்புரிவார்' என்றெல்லாம் அடிக்கடி சொல்பவர்.அன்றும் அப்படியே சொன்னார். அத்துடன், தான் இராணுவப்பாதுகாப்புடன் ஊருக்கு வந்து விட்டுப்போனால் ஊரில் இருக்கும் அக்காவுக்குப் பிரச்சினை வரும் என்பதால், எங்களுடன் யாழ்ப்பாணத்திகு விமானத்தில் ஒன்றாகப் பிரயாணம் செய்த யாழ்ப்பாண இராணுவ மேலதிகாரி அதிகாரி சந்திரசிறி கொடுத்த பாதுகாப்பு உதவியையும் நிராகரித்தார்''.
''அத்துடன் ' நான் புலிகளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். எத்தனையோ புலி ஆட்களைச் சிறையிலிருந்து வெளியில் எடுத்தது மட்டுமல்லாது அவர்கள் வெளிநாடு செல்லவும் கடிதங்கள் கொடுத்து உதவியிருக்கிறேன் அதனால் அவர்கள் எனக்குக் கொடுமை செய்வார்கள் என்று நான் நம்பவில்லை என்று வழக்கம்போல் சிரித்தபடி சொன்னார். எப்போதும் மற்றவர்களின் நன்மையை மனதில் கொள்பவர். அவருக்கு இந்த நிலை வந்தது, அதுவும் சொந்த பந்தங்களுக்கு முன்னால் பால்மணம் மாறாக் குழந்தைகளுக்கு முன்னாற் கொலைசெய்யப்பட்டது எங்கள் தமிழ்க்கலாச்சாரத்தின் இழிவைத்தான் காட்டுகிறது. அந்தக் கொலையை அன்று நேரில் கண்ட குழந்தைகள் இன்னும் இரவில் எழும்பிப் பயத்தில் அலறுகிறார்கள்.''
'' அக்கா, மஹேஸ்வரி எங்கள் குடும்பத்தில் மூன்றாவது பெண்.மிகவும் கண்டிப்பானவர்.அவரின் கட்டுப்பாட்டில், ஒழுங்கு முறைகளில் அவரிடம் நாங்கள் மிகவும் பயத்துடன் நடந்து கொள்வோம். தனது செல்வாக்கால் எங்கள் குடும்பத்தினர், சொந்தக்காரர் யாருக்கும் ஏதும் அதிகார துஷ்பிரயோகம் செய்து உதவிகளைக்கொடுக்க மாட்டார்.எப்போதும் எந்த விடயத்திலும் கண்டிப்பாகவும் நாணயமாகவும் இருப்பார். நான் கடைசித் தம்பி, ஆனால் எனது தமக்கையைக் கண்டதும் பழகியதும் மிகச்சொற்பமே. நான் சின்னப்பையனாக இருக்கும்போதே மதுரையில் தமிழ்ப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துவிட்டார். 53 வயதாகும் அக்காவுக்கு இதுவரை ஒரு தனி வீடோ சொத்தோ கிடையாது. அப்படி ஒரு ஆசையுமற்றவர். உண்மை நேர்மை, மக்கள் பணி என்பனதான் அவரது தாரக மந்திரங்கள். தனது கடைசிக்காலத்தில் எதோ ஒரு ஆஸ்ரமத்தில் வாழ ஆசைப்பட்டார்.
அவரைக்கொலை செய்தவர்கள், கோழைகள், ஈவிரக்கமற்ற மிருகங்கள். ஆயுதம் தாங்காத அப்பாவிகளைக்கொல்வது பெரிய வீரம் என்று நினைப்பது அவர்களின் கேவலமான மனப்பான்மையைக்காட்டுகிறது. பெண்களை மதிக்கும் எங்கள் தமிழ்க்கலாச்சாரத்தில் தாய்மைக்கு மதிப்பற்ற கலாசாரத்தைக்கொண்டவர்கள் இந்தக் கொலைகாரர்கள்.
''கொலைக்கு அடுத்த நாள்,கொலைகாரர்கள் அணிந்திருந்த இராணுவ உடைகள் ஊரிலுள்ள உச்சில் அம்மன் கோயிலடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. காட்டிக்கொடுத்த 12 வயதுப்பையன் தலை மறைவாகி விட்டான் என்று சொன்னார்கள்''.
''அக்காவின் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, அக்காவின் உதவியைத் தேடும் அத்தனை தமிழ் மக்களின் இழப்புமாகும். தன்னலமற்ற அக்கா, தன்வாழ்க்கையையும், படிப்பு, அறிவு அத்தனையையும் தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்தவர். எங்கள் வீட்டு நன்மைதீமைகளில் அவர் பங்கு கொண்ட சந்தர்ப்பங்கள் மிகக்குறைவே. பொது நலமே தன்னலமாக வாழ்ந்தவர். அரசியல் கட்சிகளுக்குப்பால் தன் பணிகளை மக்களுக்காக ஒப்படைத்தவர். வாழ்விழந்த பெண்கள், அனாதைக் குழந்தைகள் என்று பல விதத்திலும் அல்லற்படும் எங்கள் சமுதாயத்திற்குத் தன்னால் முடிந்தவற்றைச் செய்தவர். இன்னும் எத்தனையோ திட்டங்களை வைத்திருந்தவர். அவரின் ஞாபகார்த்தமாக, அவர் ஆசைப்பட்டதுபோல் அவரின் ஞாபகார்த்தமாக,அனாதைக் குழந்தைகளுக்குப் புனர்த்தாருணம் அளிக்கும் நிலையம் ஒன்றை உருவாக்க விரும்புகிறேன்''
''இன்று நடக்கும் அரசியற் கொடுமைகளால் எங்கள் தமிமக்கள் மிகவும் வறிய வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அக்காவைக்காட்டிக் கொடுத்த பையனும் அப்படி ஒரு ஏழையாயிருந்திருக்கலாம். தொடரும் போராலும் வறுமையாலும் பல குற்றங்களும் சமூவிரோத விடயங்களும் முன்னெடுக்கும். அதைத் தடுக்க இளஞர்களை நல்ல வழிநடத்தும் திட்டங்கள் உருவாக்கப்பவேண்டும் என்று மஹேஸ் அக்கா அடிக்கடி சொன்னா. அவ எந்தத் தமிழ்ச் சமூகத்தைப்பற்றி இரவு பகலாகத் துக்கப்பட்டாரோ அதே சமூகத்தைச்சேர்ந்த மூவரால் மிகவும் கோழைத்தனமாக் கொடியவிததில் கொலை செய்யப்பட்டது தமிழர்கள் யாவரும் வெட்கப்படவேண்டிய விடயம். தன் வாழ்க்கையில், தன்னால் முடிந்த உதவியையும் பணியையும் செய்த தமிழ்ப்பெண்னுக்கு இந்தக்கதி என்பது நினைக்கவே சங்கடத்தைத் தருகிறது. அதேநேரம், கொலைக்கலையில் பெயர் பெற்ற எங்கள் சமுதாயத்திலுள்ல சிலரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கலாம்? இந்தக் கொடுமைகள் என்று முடியும்? யாரால் ஒரு புதிய மாற்றத்தைக்கொண்டுவரமுடியும்? தமிழ்மக்கள் ஒற்றுமையாக இந்தக்கொடுமைகளுக்குக் குரல் கொடுக்காதவரை, எதிர்ப்பைக் காட்டாதவரை இது தொடர்ந்து நடக்கும். தங்களுக்குப்பிடிக்காதவர்களைக் கொலைசெய்து கொண்டேபோனால், தமிழ்ச் சமூகத்தில் உள்ள நல்ல மனிதர்களில் யார் மிஞ்சப்போகிறர்கள்''?
மேற்கண்ட வாக்குமூலம் திரு கணேஷ் வேலாயுதம் அவர்களாற் தரப்பட்டது (21.05.08 இரவு 8மணி). இவர் லண்டனில் வாழும் மஹேஸ்வரியின் சகோதர்களில் ஒருவராகும்.
எத்தனையோ படித்த பண்புள்ள தமிழ் அறிஞர்களைப் பலிவாங்கிய தமிழ்ப்பாஸிசம், தமிழ்ப் பெண்களுக்கு அணிகலமாக விளங்கிய ஒரு அறிவாளியும், சமுநலவாதியுமான மஹேஸ்வரியையும் பலி கொண்டுவிட்டது. தமிழ் பேசும் கொலை வெறியர்களாற் பலி கொள்ளப்பட்ட மனித உரிமைவாதி மஹேஸ்வரி வேலாயுததிற்கான அஞ்சல் கூட்டம் 01.06.08ல் லூவிஷாம் சிவன் கோயிலில் ( No 4A Clarendan Rd, London SE13) பிற்பகல் இரண்டு மணியிலிருந்து பின்னேரம் ஆறு மணி வரை நடக்கவிருக்கிறது.
லண்டனில் வாழும், மஹேஸ்வரிக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், அவருடன் கடந்த 30 வருடங்களாகப் பல துறைகளில் வேலை செய்தவர்கள், மனித உரிமைவாதிகள், ஜனநாயகவாதிகள், லண்டனிலுள்ள தமிழ் பல தரப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அத்தனைபேரும் கலந்து கொள்கிறார்கள். தயவு செய்து, இந்தமாதிரிப் படுகொலைகலையை எதிர்க்கும் மனிதர்கள் இக்கூட்டத்தில் சமூகம் தந்து தங்கள் அஞ்சலியைத் தெரிவ்¢த்துக்கொள்ளவும்.
மேற்கண்ட விபரங்களுக்கு: 07932635395, 0208 889 7827,
என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளவும்
தேனி இணையம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment