Sunday, May 11, 2008

முதலமைச்சர் பதவி எனக்குத்தான்

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின்படி மட்டு. மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை எனக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிக அதிகமாகக் காணப்படுகிறது."

இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டி விருப்பு வாக்குகளில் முதலிடம் பிடித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நம்பிக்கை வெளியிட்டார்.

"இந்த விடயம் தொடர்பில் நாங்கள் எல்லோரும் இதயசுத்தியுடன் ஒன்றுகூடி கலந்தாலோசித்த பிற்பாடு காலத்திற்கேற்றவாறு முடிவு எடுப்போம். அந்த அடிப்படையில் இதில் நிச்சயமாக எங்களுக்குச் சார்பானதொரு முடிவு வரும் என்று நாங்கள் காத்திருக்கின்றோம்" என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.
பி.பி.ஸி. தமிழோசைக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

"தேர்தலில் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் என்பன நடந்தன எனக்கூறி சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மறுவாக்குப் பதிவு இடம்பெறுமானால் அதை நீங்கள் முழு மனதோடு ஏற்றுப் பங்கேற்பீர்களா என்று பி.பி.ஸி. செய்தியாளர் கேட்டதற்கு,

"என்னையும் எனது கட்சியையும் பொறுத்தமட்டில் அப்படி முறைகேடுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் ஒரு சாரார்தான் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றிருக்கவேண்டும். எதிர்பார்த்ததைவிட எதிர்க்கட்சியினர் அதிக ஆசனங்களைப் பெற்றிருப்பதை மகிழ்ச்சியான விடயமாகத்தான் நான் பார்க்கின்றேன். இதனால், இங்கு மற்றுமொரு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்றார்.

No comments: