Sunday, May 11, 2008

பொருளியல் ஆசிரியர் வரதராஜன் நேற்று தொலைந்து போனார்

பிரபல பொருளியல் பாட ஆசிரியரான வரதராஜனும் அவரின் மைத்துனரான சிறிதரனும் நேற்றுக் கொழும்பில் கடத்தப் பட்டிருக்கின்றனர். வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ் சங்கத்தில் வகுப்பு எடுத்துவிட்டு புறக்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வரதராஜன் காணாமல் போயுள்ளார்.

முற்பகல் 11.00 மணியளவில் புறக்கோட்டையில் தாம் நிற்பதாகவும் எனவும் வீட்டுக்கு விரைவில் வருவார் எனவும் தொலைபேசியில் தனது மனைவிக்கு வர தராஜன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதன் பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் பொலிஸ் சீருடையில் 7 பேர் வரதராஜனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் மேல் மாடிக்குச் சென்று வரதராஜன் கீழே நிற்கின்றார் என்றும் வீட்டைச் சோதனையிடப் போகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் நின்ற வரதராஜனின் மனைவியும் அவரின் சகோதரரான சிறிதரனும் கீழே வரதராஜனைப் பார்க்க வந்தபோது, அவர்கள் இருவரையும் இழுத்து வாகனத்துக்குள் தள்ளிய சீருடையினர் அங்கிருந்து சென்றனர்.

இவர்களில் வரதராஜனின் மனையியை நுகேகொடையில் அவர்கள் இறக்கிவிட்டு 100 ரூபாவைக் கொடுத்து தெஹிவளைப் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தெரிவித்துள்ளனர். சிறிதரனை மட்டும் அவர்கள் கொண்டு சென்றனர்.
வரதராஜனின் மனைவி வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்திலிருந்து வருகின்றனர் எனத் தெரிவித்தே அவர்கள் தமது வீட்டுக்கு வந்தனர் என வரதராஜனின் மனைவி தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் மனைவி இவ்வாறு முறையிட்டபோது தமது நிலையத்திலிருந்து எவரும் இப்படி அவர்களின் வீட்டுக்கு வரவில்லை என்று அங்குள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரதராஜன் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: