மே மாதம் 23ந் திகதி கிளிநொச்சிக்கு மிக அருகாமையில் முறிகண்டி –அக்கிராயன் வீதியில் இடம் பெற்ற ஒரு கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் உட்பட 17 பொதுமக்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர். இந்த கோர சம்பவத்துக்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே காரணம் என வழமைபோல விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டஇஅதை வழமைபோல இராணுவம் மறுத்துள்ளது. இராணுவம் தாக்குதல் நடாத்தியதா அல்லது விடுதலைப் புலிகளின் உள் முரண்பாடுகளால் அவர்கள் மத்தியிலுள்ள ஏதாவது ஒரு குழு நடாத்தியதா என்ற விவாதங்கள் ஒருபுறமிருக்க இந்த மிலேச்சத்தனமான செயல் அனைவராலும் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெறுகின்ற இந்த அநியாயமான யுத்தத்தில் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய தாக்குதல் கிளிநொச்சி நகருக்கு மிக அருகில் நடந்துள்ளதால், புலிகளினால் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள பொதுமக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்ற உண்மை நிதர்சனமாகத் தெரிகின்றது. அதேவேளையில; வன்னி முழுவதும் அங்குமிங்குமாக ஓடித்திரியும் புலிகளின் வாகனங்கள் பாதுகாப்பாகச் சென்று வருகையில் பொதுமக்களும் பாராளுமன்ற உறுப்பினரும் மதகுருவும் பிரயாணம் செய்யும் வாகனங்கள் மட்டும் தாக்குதலுக்குள்ளாவது ஏன் என்ற ஒரு நியாயமான கேள்வியும் எழுகின்றது. இத்தகைய தாக்குதல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரேயொரு வழிதான் இருக்கின்றது. அது வேறொன்றுமல்ல. எந்தவொரு பிரயோசனமுமற்ற இந்த அழிவுகரமான யுத்தத்தை புலிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் தமது படையணிகளில் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் சிறுவர்களை உடனடியாக விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்புவதுடன் அவர்களது தற்கொலைப் படை கரும்புலிகள், பிஸ்டல் குழு, புலனாய்வுப் பிரிவு போன்ற நாசகார அமைப்புகளைக் கலைத்து பொதுமக்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்வை அளிக்க வேண்டும். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் தமிழ்மக்கள் ஒரு பேரியக்கமாக புலிகளிடம் மேற்குறிப்பிட்ட இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அநாவசியமான இந்த யுத்தத்தை நிறுத்துவதைத் தவிர, தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்கு வேறுவழியில்லை.
நீதிக்கும் சமாதானத்துக்குமான ரொறன்ரோ தமிழர்கள் மே 24.2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment