Monday, May 19, 2008

நட்புறவு இணையதள பயனாளர்கள் உஷார்...

நட்புறவு இணையதளங்களை பயன்படுத்துபவர்களது கணினிகள், தகவல் களவு மற்றும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

வைரஸ்-தடுப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிமான்டெக் வெளியிட்டுள்ள 2007ம் ஆண்டுக்கான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் தரும் விஷயங்கள் குறித்த ஆய்வறிக்கையில் (Internet Security Threat Report) இத்தகவல் வெளியாகியுள்ளது.

நட்புறவு இணையதளங்களில் பீபோ (Bebo), ஃபேஸ்புக் (Facebook), ஃப்ளிக்கர் (Flickr), மைஸ்பேஸ் (MySpace) மற்றும் ஆர்குட் (Orkut) ஆகியவை உலகளவில் பிரபலமானவை.

இந்த தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது, அத்தளங்கள் வழியாக கணினியில் உள்ள தகவல்களை சில சமூக விரோத கும்பல்கள் (hackers) களவாடுவதாக சிஸ்மான்டெக் கூறியுள்ளது.

மேலும் நட்புறவு இணையதளங்களை பயன்படுத்துபவர்கள், அதில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக பதிவு செய்யும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் ஹாக்கர்ஸ் கும்பல் திருடுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இச்செயலில் ஈடுபடும் நபர்களுக்கு, தகவல் திருட்டில் (phishing) ஈடுபடும் கும்பலிடம் தொடர்பு உள்ளதாகவும், ஒருவர் குறித்த தகவல்களை ஃபிஷ்ஷிங் குழுவினர் விலை கொடுத்து வாங்கி, அவரது இணைய முகவரிக்கு ஸ்பாம் மெயில்களை அனுப்பி, வங்கி கணக்கு எண் மற்றும் அதற்கான ரகசிய கடவுச் சொல்லை கண்டறிந்து விடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, சமூக நட்புறவு இணையதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணினிகளில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து வைப்பதுடன், அவற்றை குறிப்பிட்ட காலத்தில் மேம்படுத்திக் கொள்வத பாதுகாப்பானது என்றும் சிஸ்மான்டெக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

msn...

No comments: