Thursday, May 29, 2008

பாகிஸ்தான்- சீன எல்லையில் மலையில் மறைந்திருக்கிறார் ஒசாமா பின்லேடன்

பாகிஸ்தான், சீன எல்லையை ஒட்டியுள்ள காரகோரம் மலைப்பகுதியில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருப்பதாக அரபு தொலைக்காட்சி நிறுவனமான அல்- அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது. இமயமலைத் தொடரின் ஒரு பகுதி காரகோரம் மலைப்பகுதி ஆகும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சேரும் இடத்தில் இந்த மலைப் பகுதி உள்ளது. இந்த மலையின் பாகிஸ்தான் பகுதியில் அல்காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருக்கிறார் என்று அல்- அரேபியா கூறியுள்ளது. அவர் அங்கு பதுங்கியிருப்பதை, அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கண்டுபிடித்துவிட்டதாம். கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அமெரிக்க ராணுவ அதிகார்கள் சில நாட்களுக்கு முன்பு கூடி பேசினர்.

பின்லேடன் ஒளிந்திருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் ஆன் பேட்டர்சன், இராக்கில் செயல்படும் அமெரிக்கப்படைகளின் தளபதி டேவிட் ஆகியோரும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர் என்றும் அல்- அரேபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியில் இருக்கும் அல்காய்தா பயங்கரவாதிகள், அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று டேவிட் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களும், பாகிஸ்தான் பழங்குடியினரும் பின்லேடனை ஆதரிக்கின்றனர். வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருப்பதை எதிர்த்து பின்லேடன் போராடுவதாக அவர்கள் கூறுகின்றனர் என்றும் அல்- அரேபியா செய்தி வெளியிட்டது.

No comments: