Monday, May 12, 2008

முல்லைத்தீவிலிருந்தும் தமிழர்கள் வெளியேற ஆரம்பம்

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உட்பட அனைத்து வன்னிப் பிரதேசங்களிலும் அரச படையினர் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும் புலிகள் இயக்கத்தினர் அரச படையினரின் தாக்குதல்களுக்கு அஞ்சி இதுவரையில் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பல்வேறு பிரதேச முகாம்களையும் விட்டுப் பின்வாங்கி வரும் நிலையிலும் அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வசிப்பதை விடுத்து அப்பகுதிகளிலிருந்து வெளியேறி அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வகையில் இதுவரையில் பெரும்பாலும் மன்னார் பிரதேசங்களில் இன்னும் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளிலிருந்தே மக்கள் வெளியேறி வந்துள்ளனர். ஆனால், தற்போது முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிராமங்களிலிருந்தும் மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு முல்லைத்தீவிலிருந்து புலிகள் இயக்கத்தினருக்கு அஞ்சித் தப்பியோடி வந்த 11 பேர் தற்போது கொக்கிளாய் இராணுவ முகாமில் வந்து அடைக்கலம் கோரியுள்ளனர். இவர்கள் 15 வயது முதல் 46 வயது வரையான மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்களாவர்.

இவர்கள் அனைவரும் முல்லைத்தீவிலிருந்து படகு மூலம் தப்பி வந்துள்ளதாகவும், தமது பிள்ளைகளைப் புலிகளிடமிருந்து பாதுகாக்கும் முக்கிய நோக்கத்துடனேயே அவ்வாறு அவர்கள் உயிரைப் பணயம் வைத்துப் படகுமூலம் கொக்கிளாய்க்கு வந்துள்ளனர் எனவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இந்தக் குடும்பத்தினர் பின்னர் முல்லைத்தீவில் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வந்ததாகவும் அங்கு தினமும் புலிகள் இயக்கத்தினர் வந்து செய்யும் துன்புறுத்தல்களைப் பொறுக்க முடியாமலேயே இவ்வாறு படகில் தப்பியோடி வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு தினமும் பிள்ளைகளைப் பலாத்காரமாக கடத்திச் சென்று யுத்தத்திற்காக இயக்கத்தில் சேர்த்தல், மீன்பிடித் தொழில் செய்து பெறும் வருமானத்தில் பெரும் பகுதியையும் வரியாக அறவிடுதல், நிவாரணப் பொருட்களைப் பறித்துச் செல்லுதல், அடித்துத் துன்புறுத்தல், கொலைத் தாக்குதல்கள் போன்ற புலிகள் இயக்கத்தினர் செய்யும் கொடுமைகளால் அங்கு பெரும் துன்பங்களுடன் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

லங்காதீப, 07/05/2008

No comments: