Friday, May 9, 2008

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட்ட நிலையில்

மனித உரிமை இலங்கையின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமையென விதந்துரைக்கப்பட்டிருப்பதால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மனித உரிமைகள் மேம்பட்ட நிலையிலிருப்பதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சரான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஆசிய பசுபிக் நாடுகளின் 7 ஆவது பிராந்திய ஆலோசனைக் குழுவின் இடர் முகாமைத்துவ இரு நாள் மாநாடு நேற்று வியாழக்கிழமை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றபோது உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

"உலகில் இன்று இரு பிரதான விடயங்கள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. அவற்றில் ஒன்று மனித உரிமையாகும். அடுத்தது இயற்கை அனர்த்தமாகும். இயற்கை அனர்த்தத்திற்கு மனித நடத்தையும் காரணமாக விளங்குகிறது.

கடந்த 20 வருடமாக முரண்பாடுகளை கண்டுள்ள எமது நாடு; சுனாமி அழிவினால் பாரிய விளைவுகளையும் சந்தித்துள்ளது. முரண்பட்டு நிற்போர் மனித வளங்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் மூலம் அரசியல் இலக்குகளை எட்ட முடியாது. மாறாக இச்சம்பவங்கள் அழுகையை மாத்திரமே மீதப்படுத்தும்.

இன முரண்பாடு எமக்கு கற்றுத் தந்துள்ள பாடத்தைப் போன்று சுனாமியும் எமக்கு நிறைய கற்றுத் தந்தது. இதன்பொருட்டு நாம் பல முக்கிய சட்டங்களை இயற்றினோம்.

இதன்போது இயற்கை அனர்த்தத்திற்கு எவ்வாறு முகம் கொடுப்பதென்பது தேசிய முக்கியத்துவம் பெற்றபோது அதுபற்றிய சட்டங்களை அரசியல் பேதங்களை மறந்து நாம் இயற்றினோம்.

இன்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. எனினும் மனித உரிமை அரசியலமைப்பில் அடிப்படை உரிமையென வரையறுக்கப்பட்டமையால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் மேம்பட்ட நிலையிலிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்றார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 26 நாடுகள் பங்குகொள்ளும் இச்சர்வதேச மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பல அமைச்சுகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments: