முஸ்லிம்களுக்கு இந்நிலை வேண்டாமென்கிறார் மயோன் முஸ்தபா
முஸ்லிம்களின் தனி அலகுக்கான எவ்வித உத்தரவாதமும் இல்லாத சூழ்நிலையில் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துவதானது முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அடிமைப்படுத்தும் முயற்சிகளுக்குத் துணைபோவதாகவே அமையுமென உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவரது கல்முனை அலுவலக வளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
இங்கு பிரதி அமைச்சர் மேலும் பேசுகையில் கூறியதாவது,
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின் முதன் முறையாக இடம்பெறுகின்ற இத்தேர்தலில் முஸ்லிம்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இனத்துவேஷத்தைத் தூண்டி விட்டு முஸ்லிம்களின் வாக்குகளைச் சூறையாடுவதற்கு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.
பிள்ளையானை காட்டி முஸ்லிம் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்ற ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், மறுபுறம் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் தமிழ் மக்களின் வாக்குகளைச் சுருட்டிக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
புலிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் வலியுறுத்தி வருகின்றார். முஸ்லிம் மாகாண சபைக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில் தனது சுய அரசியல் லாபத்திற்காக முஸ்லிம்களை மீண்டும் பொறிக்குள் மாட்டி விடுவதற்கு அவர் எத்தனிக்கின்றார்.
கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதி முஸ்லிம்கள் மிகவும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படும் அபாயகரமான சூழல் இப்போது கிடையாது. எமது வர்த்தகர்கள் கப்பம் செலுத்தும் சூழ்நிலையும் இப்போது இல்லை. கிழக்கில் சகல இனத்தவரும் அச்சமின்றி நிம்மதியுடன் நடமாடக்கூடிய சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹக்கீம் இத்தகைய அமைதிச் சூழலைக் குழப்பியடித்து முஸ்லிம்களை படுகுழியில் தள்ளி விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். முஸ்லிம் காங்கிரஸையும், மக்களையும் அவர் தவறாக வழிநடத்திச் செல்கிறார். இளைஞர்களை உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்தி இந்த மண்ணில் மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு தூபமிடப்படுகிறது.
தமிழர்களின் 25 வருட கால ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு அங்குல நிலத்தைக்கூட அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு, அவர்களது பொருளாதாரம் அழிக்கப்பட்டு, கல்வி நிலையும் பாதிக்கப்பட்டு, தொழில் வாய்ப்புகளுக்கும் வழியில்லாமல் அவர்களது கை சேதமடைந்துள்ளன.
இந்நிலை முஸ்லிம்களுக்கும் ஏற்பட வேண்டுமா? அவற்றைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். போராட்டம் போராட்டம் என்று முஸ்லிம் காங்கிரஸ் போடும் கூச்சல் நம்மை எங்கு கொண்டு சென்று விடப்போகின்றது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
தான் முதலமைச்சராவதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் ஏக தலைவர் நானே என்று பறைசாற்றுவதற்கே ரவூப் ஹக்கீம் இத்தேர்தலில் குதித்துள்ளார். அதற்கு எமது மக்கள் இடமளித்தால் அழிவுகளை சந்திப்பதற்கும் நாம் தயாராக வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
வெற்றிலைக்கு வாக்களித்து அரசசார்பு ஆட்சியைக் கிழக்கில் ஏற்படுத்துவதன் மூலம் இன்றைய அமைதிச் சூழல் தொடரும் என்பதோடு முஸ்லிம்களும் நிம்மதியாக வாழமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment