Saturday, May 10, 2008

கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்!

"தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.''
இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது.

ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு மேலும் அறிவித்துள்ளது.

அரசால் நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெருமவே இவ்வாறு கூறினார். அரசின் நிலைப்பாடு தொடர்பாக அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெறப் போவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த வெற்றிமூலம் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று தொடங்கப்போகிறது.
பிரபாகரன் தொப்பிகலவில் எதிர்கொண்ட தோல்வியோ அல்லது வடக்கில் எதிர்கொண்டு வருகின்ற தோல்வியோ உண்மையான தோல்வியல்ல. இத் தேர்தலில் நாம் அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரன் எதிர்நோக்கப்போகும் உண்மையான தோல்வியாகும்.

இத் தேர்தலில் இணைந்து போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வெற்றிபெற்றால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க அவை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

அவ்வாறானதொரு சதித்திட்டத்திற்கு இடமளித்துக் கிழக்கு மக்களை நாம் மீண்டும் சிக்கலில் மாட்டவைக்க மாட்டோம்.

பிரபாகரனுடன் ஒப்பந்தங்களைச் செய்தவர்கள் ரணிலும் ஹக்கீமும் மட்டும்தான். அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுப்பர்.
ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என்று புலிகள் சார்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களைக் கேட்டுள்ளது.

இதன்மூலம் ஐ.தே.கட்சி இரகசிய ஒப்பந்தம் ஒன்றைப் புலிகளுடன் செய்துகொண்டே இத் தேர்தலில்போட்டியிடுகிறது என்பது தெளிவாகிறது.

ஐ.தே.கட்சியில் போட்டியிடும் தமிழர்க்கு முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக ரணில் ஒருபோதும் சொல்லவில்லை. அவரது விருப்பம் ஹக்கீமை முதலமைச்சராக்குவதுதான். என்றார்.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறியவை வருமாறு:

ஹக்கீம் இல்லாவிட்டால் ஐ.தே.கட்சியால் கிழக்கில் போட்டிபோட முடியாது. இதனால் ஹக்கீமுக்கு ரணில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துள்ளார்.
அவர்கள் இருவருக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அது என்னவென்று யாருக்கும் தெரியாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசிய பட்டியலில் நான்கு ஆசனங்களை ரணில் வழங்கினார்.

அந்த ஒப்பந்தம் கடைசியில்தான் எங்களுக்குத் தெரியவந்தது. அதுபோல் இந்தத் தேர்தலிலும் இரகசிய ஒப்பந்தம் இருக்கும். அதை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும். என்றார்.

அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இத்தேர்தலில் எமக்கேதான் வெற்றி.

இத்தேர்தலில் நாம் அடையும் வெற்றியைத் தொடர்ந்து நாடு நல்லதொரு பாதையை நோக்கிப் பயணம் செய்யும். அது மாத்திரமின்றி, இந்த வெற்றி எமது சமாதான முன்னெடுப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். என்றார்.

அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கிழக்குத் தேர்தல் தொடர்பாக அங்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

No comments: