Saturday, May 10, 2008

புலிகளின் புது தூதர்?!


நார்வே பயணத்துக்குப் பிறகு வைகோ, விடுதலைப்புலிகளின் அறிவிக்கப் படாத சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக மாறி விட்டார். இன்றைய தேதியில் சர்வதேச நாடுகள் புலிகள் விஷயத்தில் முக்கிய முடிவு களை மேற்கொள்வதற்கு முன்பு வைகோவை கலந்து பேசத் தவறுவதில்லை என்ற பேச்சு இந்தியாவெங்கும் எழத் தொடங்கி விட்டது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வைகோ, புலிகளின் நியாயங்களை எடுத்து வைத்தபோது, 'ஆன்டன் பாலசிங்கம் செய்யவேண்டிய பணியை, உரைவீச்சில் அவரையும் மிஞ்சி செய்து முடித்துவிட்டார் வைகோ' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பிரிட்டிஷ்

ஹை கமிஷனில் அரசியல் துறை தலைவர்களாக இருக்கும் நைஜல் கேஸி மற்றும் விக்டோரியா வொயிட் ஃபோர்ட் ஆகியோர் சென்னை வந்து சில நாட்கள் தங்கி இலங்கைப் பிரச்னை, புலிகளின் தற்போதைய நிலை, தெற்காசி யாவில் இலங்கைப் பிரச்னை எப்படி பார்க்கப்படுகிறது போன்ற விஷயங்கள் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைகோவுடன் சில மணிநேரம் புலிகள் விஷயத்தைப் பற்றி அவர்கள் விவாதித்திருக்கிறார்கள். இந்த சந்திப்புக்குப் பிறகு இலங்கைப் பிரச்னை தொடர்பாக நைஜலும், விக்டோரியாவும் தங்கள் நாட்டு அரசாங்கத்துக்குக் கொடுப்பதற்காக ரிப்போர்ட் தயாரிக்கும் பணியில் மும்முரமாகி இருக்கிறார்கள்.

இங்கிலாந்துப் பிரதிநிதிகளிடம் வைகோ பேசும்போது, 'இலங்கையை உங்கள் நாட்டவர்கள் ஆட்சி செய்தவரையில் கட்டுண்டு கிடந்த சிங்களவர்கள், நீங்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறியதும் தமிழர்களை அடிமைப்படுத்தி அவர்களுடைய உரிமையைப் பறிக்கத் துவங்கினார்கள். இன்று வரையில் அதுதான் நடக்கிறது. தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையை சர்வதேச சமூகத்துக்கு நீங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டினாலே, அது தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் ஜீவாதார உதவி'' என்று சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கைப் பிரச்னை தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றையும் வைகோ எழுதியிருக்கிறார். அதில் இலங்கை அரசைப் பற்றி காட்டமான வார்த்தைகளை வைகோ பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள், ம.தி.மு.க-வின் முக்கிய தலைவர்கள். கடித விவரம் குறித்து வைகோவிடமே கேட்டோம்-

''மன வேதனையின் உச்சத்தில் எழுதப்பட்ட கடிதம் அது. இலங்கை அரசுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டே, கோடிக்கணக்கில் பொருளா தார உதவிகளை வழங்கி வருகிறது இந்தியா. இலங்கை விவகாரம் தொடர்பாக பலமுறை பிரதமரை சந்தித்தபோது, 'இலங்கைக்கு எந்தவிதமான உதவியையோ, ஆயுதங்களையோ இந்தியா வழங்காது' என்று வாக்குறுதி கொடுத்தார். இதை நினைவூட்டித்தான் என் கடிதமே ஆரம்பிக்கிறது. குறைந்த அளவில் முன்னேறிய நாடுகளுக்கு இந்திய அரசு குறைந்த அளவு வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து வருகிறது. ஆனால், இந்தியா வெளியிட்டுள்ள குறைந்த அளவில் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.

அப்படியிருக்கும்போது, இலங்கையின் பாதுகாப்புத் துறைக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக நானூறு கோடி ரூபாயை வழங்க இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதுதவிர, இலங்கையின் ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த மேலும் நானூறு கோடி ரூபாயை ஒதுக்கவும் உத்தேசித்திருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகாரத்துறையின் முதலீடு மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு இந்த விவகாரத்தைக் கையாள்கிறது.

இதையெல்லாம் சேகரித்த ஓர் ஆங்கில பத்திரிகை, சில நாட்களுக்கு முன்பு இதை செய்தியாக வெளியிட்டிருந்தது. அதைப் படித்த நான் பதறவில்லை. காரணம், இதுபோல் எதுவும் நடக்காது என்று என்னிடம் பிரதமர் கொடுத்திருந்த வாக்குறுதிதான். ஆனால் விசாரித்தபோது, அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தி உண்மை என்று தெரியவந்ததும் நடுங்கிப் போனேன். இந்தத் தகவல்களை என் கடிதத்தில் அப்படியே குறிப்பிட்டிருந்தேன். கூடவே, இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களோடு கடிதத்தில் கூறியிருந்தேன்.

ஐ.நா. சபை கொழும்புவில் அலுவலகம் அமைக்க முன்வந்தபோது, அதை அனுமதிக்க மறுத்தது இலங்கை அரசு. மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் லூயிஸ் ஆர்பர் இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அனுமதி அளிக் காமல், இலங்கை அரசு முரண்டு பிடித்தது. அந்த அரசின் இனப்படுகொலைகளுக்கு இதெல்லாம் சான்று என உலக நாடுகள் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டன, இந்தி யாவைத் தவிர! மத்திய வெளிவிவகாரத் துறை, 'சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு களின் தலையீட்டைத் தவிர்க்கின்ற வகையில் இந்தியா, இலங்கையுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது' என்று ஒரு காரணத்தைச் சொல்கிறது. இது நியாயமில்லாத காரணம். தமிழ் இனத்தை அழிக்க இலங்கை அரசு மேற்கொள்ளும் தாக்குதல்களுக்குத் துணைபோகிற ஒரு அமைப்பாகவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. நேருவும், இந்திரா அம்மை யாரும் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசையும் அதை வழிநடத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும் எந்த ஒரு தமிழனும் மன்னிக்க மாட்டான் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்'' என்று சீறி முடித்தார் வைகோ.

http://www.vikatan.com/jv/2008/may/14052008/jv0202.asp

No comments: