”யுத்த நிறுத்தம் நிறுத்தப்படாது! பிரபாகரனின் பதுங்கு குழி விரைவில் அவருக்கு புதைகுழியாகும்” - பிரதமர் விக்கிரமநாயக்க
”பயங்கரவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முற்று முழுதாகத் துடைத்தெறியும் வரையில் அரசாங்கம் இராணுவ ரீதியான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும்” என பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார். மேலும் ”தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் அழுத்தங்களைக் கொண்டுவந்து அரசாங்கத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சித்த போதிலும் அனைத்து வகையான சவால்களையும் முறியடித்து அரசாங்கம் இறுதி வெற்றியை அடைந்தே தீரும்” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
”புலிகளின் பிடியிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் படை வீரர்களுக்கு மென்மேலும் உற்சாகத்தையும், தைரியத்தையும் வழங்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டார். பிரதமர் அலுவலக சேவா வனிதா பிரிவு தலைவியும் ரணவிரு மவ சுரகிமு திட்டத்தின் ஸ்தாபகருமான குசும் விக்கிரமநாயக்கவின் தலைமையில் கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் உயர்நீத்த படை வீரர்களின் தாய்மார்களுக்கு நிதியுதவி மற்றும் சுயதொழில் முயற்சிக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நேற்றுக் காலை (மே 13) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
புலிகளுடனான மோதலின்போது உயிரிழந்த படை வீரர்களில் தாய்மார்கள் 200 பேருக்கு தையல் இயந்திரங்களும் 12,000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிக் கண்கு புத்தங்களும் கையளிக்கப்பட்டன. அரசாங்க காரியாலயங்களில் சேவைகளைப் பெறும்போது முன்னுரிமையை வழங்கும் பொருட்டு இத்தாய்மார்களுக்கு விசேட இலட்சினைகளும் அணிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, ”பல வருடங்களாக எமது நாடு பயங்கரவாத அச்சுறுத்தலுககு உள்ளாகியுள்ளது. இந்த நீண்ட கால அச்சுறுத்தலை முற்றுமுழுதாக துடைத்தெறிவதற்கான முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதிகள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சர்வதேச சக்திகள் மூலமும் உள்நாட்டில் உள்ள சில சக்திகள் மூலமும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக் முயற்சிக்கின்றனர்.
அத்தோடு, தற்காலிக யுத்த நிறுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும் இன்னொரு யுத்தநிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. இத்தகைய உடன்படிக்கைக்கு இடமளிக்கமாட்டோம்.
பயங்கரவாதிகள் என்னதான் துள்ளிக் குதித்தாலும் இப்பிரச்சினை மிகவும் குறுகிய காலத்திற்குள் நீங்கிவிடுமென்பது உறுதியாகும். புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியுள்ள பதுங்கு குழி அவருக்கு புதைகுழியாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இத்தகைய பணியை எமது படை வீரர்கள் விரைவில் செய்து முடிப்பார்கள்.
புலிகளின் தலைவர் எங்கு ஒளிந்திருந்த போதிலும் நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் உதவியுடன் தேடியளிக்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. பயங்கரவாதிகளை தோற்கடித்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள படை வீரர்களுக்கு மக்கள் உற்சாகத்தையும், தைரியத்தையும் வழங்க வேண்டும்” எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment