
கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு போடும் வாக்காகும். அரசாங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் படையினர் வடக்கிற்கு செல்வதற்கான வாக்காகவே அமையும். இதனால், எதிர்வரும் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று சமையலறை யுத்தத்திற்கும் விரைவில் முடிவுகட்டுவோம். கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயகத்தினை பெற்றுக்கொடுத்துள்ள அரசாங்கம் விரைவில் வடபகுதி மக்களுக்கும் விடுதலையினை பெற்றுக்கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தெய்யத்தகண்டியில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். தெய்யத்தகண்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தொப்பிக்கல மலைப்போன்று அமைக்கப்பட்ட மேடையிலிருந்து உரையாற்றிய ஜனாதிபதி, மேலும் தெரிவித்ததாவது:
உலக தொழிலாளர் தினமான மேதினக் கூட்டத்தில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலிருந்து மக்கள் மத்தியில் உரையாற்றுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். கொடூர பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு இந்த மக்களுக்கு ஜனநாயகம் மற்றும் வாழும் உரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்த படையினருக்கு இந்த கூட்டத்தில் நான் கௌரவம் அளிக்கின்றேன்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களை மீட்டெடுத்தமை அரசாங்கத்திற்கு கிடைத்த விசேட வெற்றியாகும். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க முயற்சித்தபோது மாவிலாறு அணையை மூடி தண்ணீரை நிறுத்தி புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாரிய முயற்சியை தடுத்து நிறுத்தி மக்களை மீட்டெடுத்தோம். மூதூரில் இருந்து முஸ்லிம் மக்கள் 24 மணித்தியாலங்களுக்குள் விரட்டியடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டபோது அவர்களை மீளக் குடியேற்றுவோம் என்ற உறுதியளித்திருந்தோம். சம்பூரை மீட்டதன் பின்னர் அம்மக்களை 46 நாட்களுக்குள் மீளக் குடியேற்றினோம்.
வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழவும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவும் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் இடமளிக்கப்பட்டதுபோல் வடக்கு மாகாண மக்களுக்கும் விரைவில் அதனை பெற்றுக்கொடுப்போம். கிழக்கு மாகாண மக்களுக்கு மாகாண சபை அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிழக்கை பிரபாகரனுக்கு மீண்டும் வழக்கமாட்டோம் என்பதை மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு செலுத்துகின்ற ஒவ்வொரு வாக்கும் பிரபாகரனுக்கு போடும் வாக்குகளாகும். அதனால், எதிர்வரும் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது. கிழக்கின் உதயத்தின் மூலமாக கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை மேலும் விஸ்தரிப்பதற்கு கிழக்கு மாகாண மக்களது ஒத்துழைப்பு தேவையாகும். வடக்கு மாகாண மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக படையினர் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். வடக்கு மக்களை மீட்பதற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

No comments:
Post a Comment