Saturday, May 3, 2008

அகதியின் தாலாட்டு

`பொலித்தி´னில் தொட்டில்கட்டி
பொன்னான என் மகனே
கண்ணயர்ந்து நீ தூங்க
எப்படி நான் தாலாட்ட
கட்டமறு சீலையில்லை
கன்னி மர நிழலுமில்லை
சேலையில் நானுனக்கு
தொட்டில் கட்டித் தாலாட்ட

`மல்ட்டிபரல்´ ஓசையிலே
மன்னவனே நான்படிச்ச
வண்ண வண்ணத்தாலாட்டும்
தான் மறந்து போனதினால்
போர்ப்பரணி பாடுமிந்த
பாவப்பட்ட பூமியிலே
தாயொருத்தி நானழுது
பாடும் புதுத்தாலாட்டு

படுவான் கரைப்பக்கம்
போர் தொடங்கிப்போனதெண்டு
போட்ட உடு துணியோட
பேராறு தாண்டி வந்தோம்
ஊரான ஊரிழந்தோம்
ஒப்பற்ற மனையிழந்தோம்
மாடு கன்று நாமிழந்தோம்
மக்களையும் தானிழந்தோம்

உழுதெங்கும் நெல்வெதச்சோம்
வியர்வையினால்
உரமுமிட்டோம்
களைபிடுங்கிப் பாத்தி செய்து
கண்ணீரைக் காவல் வச்சோம்
வெளஞ்ச பயிர் தலை குனிஞ்சி
அறுவடைக்குக் காத்திருக்க
இடிவிழுந்த `செல்´ மழையில்
வயல் கருகிப்போச்சுதடா

உமலுக்குள் வெச்ச முட்ட
ஈரஞ்சும் என்னாச்சோ - நேற்று
பொழுதுக்குள் பொரிச்சகுஞ்சு
ஈராறும் என்னாச்சோ
வெள்ளாடும் என்னாச்சோ
வெதநெல்லும் என்னாச்சோ
உழுத்தம் பயறரிசி
ஊறவெச்சேன் என்னாச்சோ?

உள்வீட்டுக் கதவிழுத்துப்
பூட்டியதும் நினைவிலில்ல
பூட்டித் திறப்பெடுத்து
இடுப்பினிலே
செருகியதும் நினைவில்லை
பெரிய `அங்கர்´ பெட்டிக்குள்ள
`பேமிட்´ வெச்ச நினைவுமில்ல
மூண்டடுக்குப் பானைக்குள்ளே
கூப்பன் முத்திரையும் நினைவிலில்ல

காடெல்லாம் கதிர் பொறக்கி
காசாக்கி அறுநூற
முட்டாசிப் போத்தலிலே
மூடி வைச்சேன் என்னாச்சோ
தட்டான வீடுதேடி
தங்க அறு நாக்கொடிக்கு
அச்சாரம் இட்டுவெச்சேன்
அத்தனையும் என்னாச்சோ?

காலாற நாம் நடந்து
காளியம்மன் கோவிலிலே
கோளாவில் பாய்வாங்கி
கும்பிடுவ தெப்போது
ஊருக்கு நாம் திரும்பி
உன்ர அப்பன் காணியில
வேர்புடுங்கி வெள்ளாம்
விதைப்பதுதான் எப்போது?

கடைச்சலில் செஞ்செடுத்த
கருங்காலிக் கதவு யன்னல்
முதிரையில் மூட்டெடுத்த
முத்தான கதிரை கட்டில்
அடைக்கோழி, வாத்து, அன்னம்
அடிகழன்ற தாச்சிச் சட்டி
அடிக்கழுக்கு ஈயப்பேணி
அத்தோடு குழவி அம்மி
வெண்கலத்திலான ஏனம்
பித்தளையிலான செம்பு
வெள்ளியிலே சாமிக் கென்று
வார்த்தெடுத்த நெய் விளக்கு - என்று
அத்தனையும் `ட்ரக்டரிலே´
`அப்பன்´ ஏற்றிப் போறானாம் - அதை
சிங்காரச் சந்தையிலே
சில்லறைக்கு விற்பானாம்

உன்னாண் நானுனக்கு
ஊனுருக்கிச் சேர்த்து வைத்த
கண்ணான் அத்தனையும்
காவு கொண்டு போனானே - அவன்
மண்ணாகிப் போவானோ
இல்லை
மாடேற்ச் சாகானோ - நாங்க
கண்ணால உகுத்த கண்ணீர்க்
கங்கையிலே மூழ்காணோ

மாமாங்கத் தீர்த்தத்திலே
`மல்ட்டி பரல்´ வாங்கித்தாறேன்
ஏறாவூர் பள்ளயத்தில்
`ஏக்கே´யும் வாங்கித்தாறேன்
`ஆட்டிலறி´வாங்கித்தாறேன்
`பொம்மர்´ஒண்டும் வாங்கித்தாறேன்
நாளையுந்தன் பேரெழுதி
நாள்விடியும் நீ உறங்கு

அ.ச. பாவ்யா
மட்டக்களப்பு

No comments: