வீதியோரம் விழும் சடலங்கள்
விதியென்பதா? வினையென்பதா?
விடியற்காலை பொழுதில்
விளையாட்டாய் போய்விட்ட
மரணச் சம்பவங்கள்
வீழ்ந்தது எமதுறவா - அன்றேல்
வீரப் புதல்வர்களா?
யாரறிவார் அதை - அதுகால்வரை
வீடுதோறும் பதற்றம்
கோயிலுக்குப் போன பிள்ளை
கூடி விளையாடிய பிள்ளை
பரீட்சைக்கு சென்ற பிள்ளை
யார் வீட்டுப் பிள்ளையோ!
யாரறிவார்
காய்ந்துபோன குருதியில்
கால் மடித்து கைவிரித்து
கறுத்துப்போன சடலம்
காலை தொட்டு மதியம் வரை
அடையாளம் காணாமலே
வீதியோரம்
பவ்வியமாய் அசைந்து வரும்
ஊர்தியிலே - பலர் குதித்து
வந்து உற்று நோக்கி
அளவளாவி நிற்க
அடுத்து வரும் பவனியிலே
பெரியவர்
யாரறிவர் இவரை?
எங்கிருந்தார் இதுநாள்வரை?
கேட்டுவிட்டு
காக்கியுடைக்காரர் - நீட்டும்
காகிதத்தில் கையெழுத்திட்டு விட்டு செல்ல
பக்குவமாய் ஏற்றிச்செல்வர்
சவச்சாலை நோக்கி
அத்துடன் மூடிவிடுவர்
விசாரணைக் கோவைதனை
நித்தமும் இதுதான் இங்கு
நிதர்சனமாகிவிட்டது
வன்னியூரான் - கபில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment