Friday, May 9, 2008

இங்கிலாந்தில் ஆந்திர மாணவி படுகொலை

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஆந்திர மாணவி, படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களில் இந்திய மாணவ, மாணவிகள் ஏராளமானபேர் படித்து வருகிறார்கள். ஆந்திராவை சேர்ந்த நகசைபாபு என்பவரின் மகள் ஜோதிர்மயி (வயது 23) உல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படித்து வந்தார். பர்மிங்ஹாம் நகரத்தின் புறநகர் பகுதியான ஹாண்ட்ஸ் ஒர்த் என்ற இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஜோதிர்மயி வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதிர்மயி, அவருடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அருகில் ஒரு வாலிபர் படுகாயத்துடன் மயங்கி கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று, வாலிபரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை சோதனை செய்து கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொலையை செய்தது யார்? காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகள் அந்த பகுதியில் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க வீடு, வீடாக சோதனை நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, `காயத்துடன் மீட்கப்பட்ட வாலிபர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். கொலை நடப்பதற்கு முன்பு ஜோதிர்மயியின் வீட்டில் தெலுங்கு பேசும் மாணவ, மாணவிகள் 4 பேர் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

No comments: