Friday, May 9, 2008

36 கைதிகளை கொன்ற மியான்மர் ராணுவம்!

நர்கீஸ் புயல், மியான்மரை கடுமையாக தாக்கி சூறையாடிய நேரத்தில், அங்குள்ள இன்சேன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 36 கைதிகளை குருவிகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்றுள்ளது மியான்மர் ராணுவம். மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் அந்த நாடே சுடுகாடு போல காட்சி அளிக்கிறது. வெளிநாடுகளுடன் எந்தவித தூதரக உறவையும் மியான்மர் வைத்துக் கொள்ளாமல் அங்கு ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கித் தத்தளிப்பதால், உலக நாடுகளின் உதவிகள் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 80,000க்கும் அதிகம் என தெரியவந்துள்ளளது. அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தும் அதை ஏற்க மியான்மர் ராணுவ அரசு மறுத்து விட்டது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உதவியை மட்டுமே இதுவரை மியான்மர் ஏற்றுள்ளது. ஐ.நாவும் உதவிகளைச் செய்து வருகிறது. இந்த நிலையில் நர்கீஸ் தாக்கிய தினத்தன்று நடந்த இன்னொரு அக்கிரமம் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. நர்கீஸ் தாக்கிய தினத்தன்று, இன்சேன் என்ற இடத்தில் உள்ள சிறையில், ஏராளமான அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கிய தகவல் சிறைக்குள் பரவியதும், கைதிகள் அனைவரும் பாதுகாப்புக்காக, சிறைக் கதவுகளை திறந்து விடுமாறு கோரியுள்ளனர். ஆனால் அதை ஏற்க சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து கைதிகள் போராட்டத்தில் குதித்தனர். கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேற முயன்றனர்.

சிலர் சிறையின் ஒரு பகுதியில் தீவைத்தனர். இதனால் சிறையில் பெரும் கலவரம் மூண்டது. இதையடுத்து வரவழைக்கப்பட்ட ராணுவ வீரர்களும், கலவரத் தடுப்புப் போலீஸாரும் குருவிகளை சுடுவது போல கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 36 கைதிகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். 70க்கும் மேற்பட்டோர் குண்டுக்காயமடைந்தனர். வெளியில் புயல் மியான்மரைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த நிலையில் சிறைக்குள் நடந்த இந்த கொடும் சம்பவம் உலகத்தையே அதிர வைத்துள்ளது.

No comments: