மகர ஜோதி குறித்த சர்ச்சையால் பரபரப்பு
சபரிமலையில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவதாக, கோயில் தந்திரியின் பேரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோரும் தை மாதம் சங்கராந்தி தினத்தன்று மாலை, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி 3 முறை தோன்றி மறைவது வழக்கம்.
இது இயற்கையாக தோன்றுவதாக பக்தர்கள் கருதி, வழிபட்டு வருகின்றனர். ஆனால் கடவுள் மறுப்பு இயக்கத்தினர் மகரஜோதி இயற்கையாகத் தோன்றுவது கிடையாது என்று வாதிட்டு வந்துள்ளனர்.
நாத்திகவாதிகளின் கருத்தை மெய்பிப்பது போல், கோயில் தந்திரி கண்டரரு மகேஸ்வரருவின் பேரன் ராகுல் ஈஸ்வர் அளித்த பேட்டி, தற்போது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகர விளக்கு இயற்கையானது அல்ல. செயற்கையாக அது கோயில் ஊழியர்களால் ஏற்றப்படுகிறது. மகர ஜோதி வேறு; மகர விளக்கு வேறு. மகர ஜோதி என்பது வானில் தோன்றும் நட்சத்திரம் என்று ராகுல் ஈஸ்வர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கோயில் தந்திரியின் பேரன் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது, ஐயப்ப பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள சுற்றுலா வளர்ச்சித்துறை தலைவரும், மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனிக்கு நெருக்கமானவருமான செரியன் பிலிப், மகர ஜோதி ஏற்றி மக்களை முட்டாளாக்க இடதுசாரி அரசு உதவி வருவதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதில் தரும் வகையில் ராகுல் ஈஸ்வர் தற்போது தனது கருத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மகர விளக்கு சர்ச்சை குறித்து விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்திருப்பதாக, மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment