Friday, May 2, 2008

அரபு நாட்டவர்களின் அட்டகாசம்

இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்


குவைத்திற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற மரணமான 26 வயது இளம் பெண்ணின் சடலம் இருதயம், மூளை, கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கலகெதர - பொஹலியதி பகுதியைச் சேர்ந்த ஜீ.சுமித்திராகுமாரி என்ற இளம் பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவரது மரண விசாரணை நீர் கொழும்பு வைத்தியசாலையில் நடைபெற்றபோது, இவரின் தாயான விஸ்வமெனிக்கா (வயது 48) சாட்சியமளிக்கும்போது கூறியதாவது;

2007 டிசம்பர் 27 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் மூலம் எனது மகள் குவைத்துக்கு சென்றார். அங்கே பெரிய வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.

வாரத்தில் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தொலைபேசியில் என்னுடன் உரையாடுவார். ஒரு பிரச்சினையுமின்றி சந்தோஷமாக இருப்பதாகக் கூறினார். கடைசியாக ஏப்ரல் 11 ஆம் திகதி என்னுடன் கதைத்தார். அதன் பின்பு எனது முகவரியை சிலர் கேட்டனர்.

நான் அந்த வீட்டு இலக்கத்துடன் தொடர்பு கொண்டேன். எனது மகள் எசமானியுடன் வெளியூர் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனது மகளுடன் வேறு சிங்களப் பெண்கள் மூவரும் வேலை செய்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டேன். எனது மகள் குளியலறையில் 14 ஆம் திகதி தவறிவிழுந்து இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

24 ஆம் திகதி எனது மகளின் சடலம் விமானம் மூலம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்பு மகளின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. நான் அடையாளம் காட்டினேன் என்றார்.

பிரேதபரிசோதனையை மேற்கொண்ட சட்டவைத்திய அதிகாரி டாக்டர் சன்ன பெரேரா இறந்தவரின் சடலத்தில் இருந்து இருதயம், மூளை, கர்ப்பப்பை என்பன அகற்றப்பட்டிருந்ததாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மரண விசாரணை அதிகாரி சிறி ஜயவிக்கிரம மரண விசாரணையின் பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

No comments: