Sunday, June 1, 2008

தோழர் அ.வரதராஜப்பெருமாள் எழுதுவது 1



இலங்கையின் இனப்பிரச்சினையின் அடுத்த பரிமாணத்தின் வளர்ச்சிக் களமாக கிழக்கு மாகாணம் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- வரதராஜப்பெருமாள்

அன்பார்ந்த நண்பர்கள் - தோழர்கள் அனைவருக்கும்,

ஏற்கனவே அரசியல் யாப்பில் 13வது திருத்தமாக இருக்கும் மாகாண சபை அமைப்பை வடக்கு-கிழக்கில் முடிந்த அளவுக்கு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதுவும், அதேவேளை அதிகாரப் பகிர்வை விரிவுபடுத்துவதற்குத் தேவையான அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதுவுமே இப்போது அரசாங்க மட்டங்களிலும் நியாயமான அரசியற் தீர்வின் மீது அக்கறை கொண்டோரினது மத்தியிலும் பரவலாக நிலவும் எதிர்பார்க்கையாகும். இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகமும் பரவலாகவே இருப்பினும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்க்கை வலுவாகவே உள்ளது.

13வது திருத்தம் மாகாணம் ஒவ்வொன்றிலும் ஒரு மாகாண ஆட்சி முறையை உருவாக்குகின்றது. இலங்கையை ஆங்கிலேயர்கள் ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தனர். அதில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணம் கிழக்கு மாகாணமும் உள்ளடங்கும். இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டில் இந்த இரண்டு மாகாணங்களும் இணைந்த வகையாக ஒரே மாகாண நிர்வாகமாக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்படும் என்றும் பின்னர் ஒரு வருடத்துக்குள் கிழக்குமாகாணத்தில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் தொடர்தும் ஒரே மாகாண நிர்வாகமாக இயங்குமா அல்வது தனித்தனி மாகாண ஆட்சியமைப்புக்களாக ஆக்கப்படுமா என்பது தீர்மானிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு நவம்பரில் சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தமும், மாகாண சபைச் சட்டமும் இரண்டு மாகாணங்களுக்கும் ஒரே மாகாண ஆட்சியமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன. இருப்பினும் 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் மூலம் மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரே வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இரண்டும் நடைமுறையில் ஒரே நிர்வாக அலகுகளாக ஆகின.

இன்றைக்கு வடக்கு-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது பற்றி குரல் எழுப்பும் பலர் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு-கிழக்கு மாகாணத்தை இணைப்பதற்கு அடிப்படையாக இருந்த மாகாண சபைத் தேர்தலைக் கொச்சைப் படுத்துவதிலும் மாகாண சபையை இல்லாதொழிக்கும் வகையாக எதிர்ப்பதிலும் புலிகளின் முன்னணியினராகச் நின்று செயற்பட்டார்கள். அந்த மாகாண சபை மீது பிரச்சாரச் சேறடிப்பதில் கங்கணம் கட்டி நின்று செயற்பட்டனர். அன்றைக்கு அந்த மாகாண சபைத் தேர்தல் நடந்து மாகாண சபை உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் என்றைக்குமே வடக்கு-கிழக்கு மாகாணம் இணைந்த ஒன்றாக ஏற்பட்டிருக்க மாட்டாது. மாகாண சபையைக் கலைக்கும்படி புலிகள் பிரேமதாசா வுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றைக் காலில்நின்ற போது அந்த மாகாண சபையைக் கலைக்கும் சிபார்சை நாம் செய்ய மறுத்ததுடன் அந்த மாகாண சபையிலுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அனைத்து உறுப்பினர்களினதும பதவிகளை புலிகளே எடுத்துக் கொண்டு அந்த மாகாண சபையைத் தொடர்ந்தும் நடாத்தும் படி நாம் கோரியதற்கு அன்றைய பத்திரிகைகள் இன்றைக்கும் சாட்சியம் கூறும். சபையைக் கலைக்கும் படி புலிகள் கோருவதாக தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது என்னிடம் கூறியபோது, அவ்வாறு நான் மாகாண சபைரயைக் கலைக்கம் ஏற்பாட்டைச் செய்தால் வடக்கு-கிழக்கு மாகாணத்துக்கு மீண்டும் ஒரு தேர்தல் வராது புலிகள் தேர்தலில் பங்குபற்ற மாட்டார்கள் அது சிங்கள் பேரினவாதிகளின் நோக்கங்களுக்கே சார்பாக அமையும் என்பதை விரிவாகத் தெளிவுபடுத்தினேன். அதற்கும் அன்றைய பத்திரிகைள் இன்றைக்கும் சாட்சி சொல்லும்.

இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வடக்கு-கிழக்கு மாகாணம் மீண்டும் பிரிக்கப்பட்டதாகவும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும், இந்த இரண்டு மாகாணங்களும் இனி சட்டப்படி இணைக்கப்படவே முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது போலவுமே பலரும் கருதுகின்றார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவெனில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பபட்ட விதமானது சட்டப்படி சரியானதல்ல என்பதே. எனவே முறையாக சட்டப்படி இரண்டு மாகாணங்களும் இணைக்கப்படும் வரை அவை தனித்தனியாக இருத்தல் வேண்டும் என்பதே.

தமிழர்தரப்பில் அனுபவத்திறன்படைத்த சட்டத்தரணிகள் திரளாத படியாலும், ஜேவீபி மற்றும் சிங்களப் பேரினவாத சட்டத்தரணிகள் கூட்டத்தின் வாதங்கள் கையோங்கி நின்றதாலும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு இவ்வாறாக அமைந்ததா? அல்லது சட்டத்தின் அமைப்புகளெல்லாமே வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்ந்து இருப்பதற்கு எதிரானதாக இருந்தனவா? என்பதெல்லாம் விடை காணப்பட வேண்டிய கேள்விகள். இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட தொடர் மாகாணங்களை இணைத்து ஒரே மாகாண ஆட்சி நிர்வாகமாக ஆக்க வேண்டுமென்று ஆட்சியாளர்கள் கருதினால் அவற்றை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஆக்குவதற்கு இப்போதுள்ள அரசியல் யாப்பிலேயே இடமுண்டு. நீதிமன்றத் தீர்ப்புக்கு அடுத்த நாளே ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் அரசாங்கத் தரப்பினர் உரியமுறையில் வடக்கு-கிழக்கை இணைப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தால் தமது கட்சி ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார். ஆனால் எந்தப் பக்கத்திலிருந்தும் வடக்கு-கிழக்கை மீண்டும் நாடாளுமனறத்தினூடாக இணைப்பதற்கான - ஆக்கபூர்வமான - சட்டப்படியான எந்தவித முயற்சியையும் யாரும் மேற்கொள்ளவில்லை என்பதுவும், வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டதைக் கூறிக் கொண்டு சுய அரசியல் லாபம் தேடும் முயற்சிகளுக்கு அப்பால் யாராலும் எதுவும் நடக்கவில்லை என்பதுவம் இங்கு குறிப்பிடத்தக்கன.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டும் என்ற கருத்து கிழக்கு மாகாணத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தமிழர்களின் மத்தியில் புலி – கருணா பிளவுக்குப் பின்னர் பரவியதைத் தொடர்ந்து சரியோ பிழையோ வடக்கு-கிழக்க இணைக்கப்பட வேண்டும் குரலெழுப்புவோர் பலவீனமாக்கப்பட்டனர்.

வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்களுக்கு புலி கருணா சண்டையும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பும் மிகவும் வசதியாக அமைந்தன. பெரும்பாலும் முஸ்லிம்கள் மத்தியிலும் வடக்கு கிழக்கு இணைப்பில் திருப்தி இருக்கவில்லை. எனவே வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது இனி ஓர் அரசியற் புயலுக்குப் பின்னரே மீளாய்வுக்கு வரும். சிங்கள இனவாத ஆதிக்கத்தின் பரம்பலில் இருந்து தமது அரசியற் பொருளாதார நிலைகளைப் பாதுகாத்துக் கொள்ள கிழக்கின் தமிழ்ப்பேசும் மக்களுக்கு வடக்கின் இணைப்பு அவசியமா? அல்லது வடக்கு சுரண்டுவதற்காகவே கிழக்கை இணைக்கத் துடிக்கிறதா? என்பதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளெல்லாம் எதிர்வரும் முட்டி மோதும் அனுபவங்களின் பின்னரே ஆரம்பமாகும். கிழக்கில் தமிழர் முஸ்லிம்கள் உறவில் தனிக்கிழக்கு மாகாணம் நிரந்தரப் பகையை விதைத்து வளர்க்குமா அல்லது இருபதியினருமே பொது ஆபத்தை அடையாளம் கண்டு கைகோர்த்து செயற்படுவார்களா என்பதற்கான விடைகளெல்லாம் இப்போதைக்கு அநாவசியமான முரண்பாடுகளை வளர்க்கும் வெறும் ஊகங்களாக மட்டுமே அமையும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என ஆகாமல் இருந்தால் சரி..

கிழக்கு மாகாணத்துக்கான தேர்தற் பிரச்சாரங்களின் ஆரம்பமே முதலமைச்சர் எந்த இனத்தவர் என்பதில் தமிழ் - முஸ்லிம் இனவாதங்கள் கக்கத் தொடங்கியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டில் மாவும் தேங்காயும் போல ஒருவருக்கு இடையில் ஒருவர் ஆனால் இணைப்பில்லாது வாழ்ந்து வருகின்றார்கள். இரணடு இனத்தவருக்கிடையிலும் ஒற்றுமை ஏற்படாமற் பார்த்துக் கொள்ளும் சக்திகள் முன்னைய பல அனுபவங்கள் கொண்டவை, எல்லாவகையான ஆற்றலும் உடையவை. முஸ்லிம் ஒரவர் மதலமைச்சரானால் தமிழர்கள் மத்தியில் புள்ளையானின் கதி என்ன? அல்லது புள்ளையானை அரசாங்கம் முதலமைச்சராக்கினால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய ரீதியில் நிலவி சிங்கள-முஸ்லிம் உறவின நிலையென்ன? தமிழ்-முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு சமாதானமாக சமரசமான பேச்சுவார்த்தைகள் மூலம் தத்தமது மக்கள் தளங்கள் ஏற்கும் வகையில் உடன்பாடு கண்டு கொள்வார்களா? இலங்கையின் இனப்பிரச்சினையின் அடுத்த பரிமாணத்தின் வளர்ச்சிக் களமாக கிழக்கு மாகாணம் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையின் தென்பகுதியில் ஏழு மாகாண சபைகள் இருக்கின்றன. அங்கே என்ன நடக்கின்றது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றது, மாகாண ஆட்சியமைப்பு உருவானது, மாகாண சபை செயற்பட்டது அன்றைய முதலமைச்சரின் அதிகாரப் பகிர்வுபக்கான போராட்டங்கள் இவைகள்தான் இன்னமும் விவாதத்தில் இருக்கின்றன. உண்மையில் அன்றைய நாட்களில் என்ன நடந்ததென்று இன்னமும் பலருக்குத் தெரியாது. இநத இருபது ஆண்டுகளில் நான்கு தடவைகள் ஏனைய மாகாணங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தவறாது தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. கட்சி மாறிக் கட்சி மாகாண ஆட்சிகளைப் பிடித்து மாறிமாறி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களென பதவிகளை வகித்திருக்கிறார்கள். ஜே.ஆர் பிரேமதாசா காலத்தில் அந்த மாகாண ஆட்சிகளெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தில் இருந்தன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களும் முதலில் வகித்த அரச பதவி மேல்மாகாண முதலமைச்சர்தான். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெரும்பான்மையான மாகாண சபைகள் அவரது கட்சியினரின் அதிகாரத்தின் கீழேயே இருந்தன். இந்த இருபது வருடங்களில் அந்த மாகாண சபைகளுக்கு எவவளவு தூரம் அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. அங்கே எந்தளவுக்கு 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வருகிறார். அந்த மாகாண சபைகள் எந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான நம்பிக்கைகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. என்பதெல்லாம் எழுப்பப்பட வேண்டிய விடைகாணப்பட வேண்டிய விடயங்கள் ஆகும். உள்ளுரில் உழாத மாடு அடுத்த ஊருக்கு உழவுக்குப் போன மாதிரி அமைய முடியாது.

கிழக்கு மாகாணத்தில் உருவாகப் போகும் மாகாண சபை ஒன்று பட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கு மாறாக அரசாங்கத்தின் மீதும் அதிகாரப் பகிர்வு மீதும் நம்பிக்கையீனத்தை வளர்த்துவிடும் ஒன்றாக அமைந்துவிடக் கூடாது. அது கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை புலிகளின் பக்கம் சார்ந்து நிற்கும்படி தள்ளிவிடுவதிலேயே போய்முடியும். ஐனநாயகத் தமிழ்க் கட்சிகள் மேலும் சிரமங்களுக்கும் சங்கடங்களுக்கும் உள்ளாகும்.நிலையேற்படும்.

16 லட்சம் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாண ஆட்சி வலுவானதாகவும் மக்களுக்குப் பயனுடைதாகவும் அமைய வேண்டும். மாகாண சபை என்பது மாகாண மட்டத்திலான நாடாளுமன்றமே. பிரிட்டன் ஐக்கிய ராஜ்யத்தில் ஸ்கொட்லாண்ட மற்றும் வேல்ஸ் மாகாண சபைகள் நாடாளுமன்றங்கள் என்ற சொல்லாலேயே அழைக்கப்படுகின்றன. ஜேர்மனியிலும் அவ்வாறே. அமெரிக்காவில் கனடாவில் மாகாண சபைகளென அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் மாநில சட்ட மன்றங்களென அழைக்கப்படுகின்றன. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முதல் அங்கும் மாகாண சபைகள் என்றே அழைக்கபபட்டன. 13வது திருத்தப்படி உருவாகும் மாகாண சபைகளும் கட்டமைப்பு ரீதியிலும் சரி அதன் செயன்முறை ரீதியிலும் சரி உலகின் எல்லா வகையான மாகாண சட்டவாக்க மன்றங்களைப் போலவே உள்ளன. பெயர் வேறுபட்டாலும் நிறை மற்றும் நிறம் வேறுபட்டாலும் இந்த மாகாண சபைகள் அனைத்தும் ஒரே அரசியல் இனவகைதான். சிலது மிக ஆரோக்கியமாகப் பிறந்து காலப் போக்கில் நோயாளியாகிப் போவதும் உண்டு. சிலது பிறக்கும் போது நோயாளியாகப் பிறந்து பின்னர் ஆரோக்கியமாக வளர்வதும் உண்டு. வளர்க்கும் பெற்றோரின் அக்கறையிலும் பராமரிப்பிலுமே தங்கியிருக்கின்றது. அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மாகாண அரசுகள்; நிறைவான சமஷ்டிகள் என ஆரம்பமானவை ஆனால் காலப்போக்கில் மத்திய ஆட்சியை வலுப்படுத்திச் செல்கின்றன. அவவகையில் அவற்றை முதலாவது வகையெனலாம்;, இந்திய மற்றும் ஐக்கிய பிரிடடிஷ் ராஜ்ஜியத்திலுள்ள மாகாண ஆட்சியமைப்புகள் சமஷ்டி அமைப்புக்களல்லாதவைகாளகவே ஆரம்பமாயின. ஆனால் கால ஓட்டத்தில் மாகாணங்களுக்கான சுயாட்சி நிலையைகளை அதிகரித்துச் செல்லுகின்றன. அவ்வகையில் அவை இரண்டாவது வகையெனலாம். எல்லாவற்றிலும் நிறைகளும் உள்ளன. குறைகளும் உள்ளன. பிரிந்திருந்த அரசுகளை இணைத்து ஒரு சமஷ்டி அமைப்பை ஆக்குவதற்கும், ஒற்றை யாட்சியாக இருந்த ஓர் அரசமைப்பை சமஷ்டி நோக்கி நகர்த்துவதற்கு பெருத்த வேறுபாடுண்டு. இங்கு மாநில சுயாட்சியை நோக்கிய மாற்றங்கள் ஒரே பாய்ச்சலில் நடைபெறமாட்டா. மாறாக ஒரு மாறிச் செல்லும் நீண்டதொரு அரசியற் செயன்முறையின் மூலம் மட்டுமே நிகழும். அதிலும் பிரிவினையை மட்டுமே கொண்ட ஒரு பயங்கரவாத வன்முறை இயக்கம் வலுவானதாக இருக்கும் போது அந்த மாற்ற – வளர்ச்சிச் செயன்முறை இன்னும் மெதுவானதாகவே அமையும். .

மாகாண சபையென்பது ஒரு மாநகர சபையைப் போன்றதல்ல. மாநகர சபைக்கு முதன்மையாக இயற்சட்டங்களை (Statutes) ஆக்கும் வலு கிடையாது. மாறாக அது நாடாளுமன்றத்தின் மற்றும் மாகாண சபையின் முதன்மையான இயற்சட்டங்களுக்கு ஏற்ப துணைச்சட்டங்களை ஆக்கும் வல்லமையை மட்டுமே கொண்டதாகும். ஆனால 13வது திருத்தத்தின் படியான மாகாண சபைகளுக்கு முதன்மையான இயற்சட்டங்களை ஆக்கும் அதிகாரம் உண்டு. அரசியல் யாப்பில் மாகாண நிரலில் உள்ள விடயங்கள் மீது மாகாணசபைகள் மட்டும்தான் இயற்சட்டங்களை ஆக்கலாம். மாகாண சபையின் சட்டம் நாட்டின் அரசியல் யாப்பை மீறாத வரைக்கும் அவ்விடயங்கள் மீது நாடாளுமன்றம் எவ்வகையிலும் தலையிட முடியாது. அதுமட்டுமல்ல. நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் ஆகிய இரண்டுமே சட்டங்களை ஆக்கலாம் என்ற வகையில் விடயங்கள் கொண்ட ஓர் நிரலும் உண்டு. இந்த நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் என்ன சட்டங்களை உருவாக்கியுள்ளதோ அந்த சட்டங்களை மீறாத வகையில் அவ்விடயங்கள் மீது மாகாண சபைகள் இயற் சட்டங்களை ஆக்கிக் கொள்ளும். மாகாண சபையின் அந்த இயற்சட்டங்களுக்கு உட்பட்டே அந்த விடயங்களில் அந்த மாகாண எல்லைக்குள் மத்திய ஆட்சியாளர்கள் கூட செயற்பட வேண்டும். இலங்கையின் நாடாளுமன்றத்தினால் ஆக்கப்படும் ஒரு சட்டத்துக்கு எந்த அளவு அதிகார வலு உண்டோ அந்த அளவுக்கு இந்த மாகாண சபைகளினால்; ஆக்கப்படும் சட்டங்களுக்கும் அவற்றின் மாகாண எல்லைக்குள் வலு உண்டு. நாடாளுமன்றத்தின் சட்டங்களைப் போலவே நீதிமன்றங்கள் மாகாண சபைகளின் சட்டங்களையும் நிர்வகிக்கும்.



உதயம் (அவுஸ்திரேலியா)

No comments: