Sunday, June 1, 2008

தோழர் அ.வரதராஜப்பெருமாள் எழுதுவது


கிழக்கு மாகாண சபை:இன்றைய நிலையும்; அதிகாரப் பகிர்வும்

- தோழர் அ.வரதராஜப்பெருமாள்

வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் எழுதுவது

1970 ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல், 1972ம் ஆண்டில் இலங்கைக் குடியரசுக்கான அரசியல் யாப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து வீறு கொண்டு விரிவடைந்த தமிழர் போராட்டம் வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தனித்தனி மாகாணங்களாகக் கருதவில்லை. 2005ம் ஆணடு வரைக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதொரு விகிதாசாரத்தினரிடம் கூட இருக்கவில்லை. புலிகளிலிருந்து கருணா பிரிவினர் பிளவுபட்டு பிரிந்த போது கூட அவர்கள் பிரபாகரனின் யாழ்;-வன்னித் தலைமை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அநீதி செய்ததாக – செய்வதாகக் குற்றம் சாட்டினரே தவிர அவ்வேளையிலும் கருணா பிரிவினர் கிழக்கு மாகாணம் தனி மாகாணம் ஆக வேண்டும் என்று கோரவில்லை. அப்போது திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் ஜனாதிபதியாக இருந்தார். சந்திரிகா அவர்களின் அரசியல் தீர்வுத் திட்டம் இலங்கையில் நிலவிவரும் ஒற்றையாட்சி முறையை நீக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு என்ற அம்சத்தைக் கொண்டிருந்த போதிலும் கிழக்கு மாகாணம் கட்டாயமாக தனிமாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோசத்தை முன்னிறுத்திய ஒன்றாக இருக்கவில்லை.

மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியானதைத் தொடந்து ஜேவிபி மற்றும் சிஹல உறுமய ஆகிய சிங்கள இனவாதக் கட்சிகளின் செல்வாக்கு மேலோங்கியது. ராஜபக்ஷவின் அரசாங்கம் நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு அந்த பேரினவாதக் கட்சிகளில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று. 1990க்கும் 2000க்கும் இடைப்பட்ட ஆண்டுக்காலங்களில் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படையாகத் தலைதூக்க முடியாமல் நின்ற பேரினவாதக் குழுக்கள் மற்றும் அவ்வாறான தனிநபர்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரிப்பதிலும் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளுக்குத் தடையாக இருப்பதிலும் பகிரங்கமாக தீர்மானகரமாகச் செயற்படத் தொடங்கின. ஜேவிபி மற்றம் சிஹல உறுமய கட்சிகளில் தனது நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் அதிகாரப் பகிர்வுக்கு சார்பானவராக தம்மை உறுதிப்படுத்திய போதிலும் ஒற்றையாட்சி முறையையே தொடர்ந்தும் நிலைநாட்டுவதில் தாம் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். கிழக்கு மாகாணம் தனியாக ஆக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

தன்னிலை அறியாத புலிகள் ஆப்பிழுத்த குரங்கு போல அநாவசியமான முறையில் மாவிலாறு விடயத்தில் இறங்கி படுதோல்வி கண்டதால் தமது உண்மையான பலவீனமான இராணுவ நிலையை வெளிப்படுத்திக் கொண்டார்கள். புலிகள் வெல்லமுடியாதவர்கள் அல்ல என்பதை புலிகளே வலிந்து நிரூபித்தார்கள். அதுவே அவர்களைக் கிழக்கில் இருந்து முழுமையாக விரட்டியடிப்பதற்கும் வழிவகுத்துக் கொடுத்தது. கிழக்கில் புலிகள் நிலரீதியான பிடிமானத்தை இழந்தமையை அடுத்து கிழக்கு மாகாண மக்கள் தனிமாகாணமாக இருப்பதற்கு விரும்புவதாக அரசியல் அர்த்தம் வழங்கப்பட்டது.

இதேவேளை இலங்கையின் உச்சநீதிமன்றமும் வடக்கு கிழக்கு மாகாணம் ஒரே நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்டது சட்டரீதியான முறையில் சரியாக மேற்கொள்ளப்படவில்லை எனத் தீர்ப்பளித்தது. உடனேயே சிங்கள இனவாதிகள் அனைவரும் அதனை தமது ஒரு வரலாற்று வெற்றியாகக் கொண்டாடினார்கள். இதற்குப் பின்னரும் கூட இந்தியா, அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும், ஒற்றையாட்சி முறையை நீக்கிய வகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான அளவுக்கு மாகாண ஆட்சியமைப்புக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்தன.

ஆனால் கிழக்கு மாகாண மக்கள் அரசியல் பொருளாதார ரீதியில் சுயநிர்ணய உரிமையுடையவர்களாக இருப்பதற்கு கிழக்கு மாகாணம் வடக்கோடு இணையாது தனியாக இருக்க வேண்டும் என்று கருணா பிரிவினர் கோரிக்கை வெளியிடத் தொடங்கினர் அதனை வசமாகப் பிடித்துக் கொண்ட சிங்கள இனவாதிகள் உடனே “ஆடு நனைகிறது என ஓநாய் கண்ணீர் வடித்தது போல” அது கிழக்கு மாகாண மக்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கை – வடக்கினால் ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களின் விடுதலைக் கோரிக்கை எனத் தமது வல்லமைகளை ஒருங்கிணைத்து பிரச்சாரப்படுத்தினர். அதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை அமைப்பானது தனியானதாக அமைக்கப்படுவதற்கான அடித்தளம் உறுதி செய்யப்பட்டது. புலிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய அணியினர் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டதற்கு பெயரளவில் ஒரு எதிர்ப்பை அறிவித்த போதிலும் காத்திரமாக எந்த அரசியல் நடவடிக்கையையும்; தொடர்ந்து முன்னெடுக்கவில்லை. இதேவேளை புலிகளை எதிர்க்கும் தமிழ் அரசியல் அணிகளில் ஒரு பகுதியினர் கிழக்கு மாகாணம் தனியாக இருப்பதன் மூலமே யாழ்ப்பாண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுயமானதொரு அரசியலை கிழக்கு மாகாணத் தமிழர்கள் கொண்டிருக்கும் நிலையேற்படும் என அபிப்பிராயம் கொண்டு கிழக்கு மாகாணம் தனியான மாகாண ஆட்சியமைப்பைக் கொண்டிப்பதற்கு ஆதரவாகக் குரலெழுப்பினர்.

கிழக்கு மாகாணம் தனியாக ஆகியதை - ஆக்கப்பட்டதை வெறுமனே சிங்கள இனவாதிகளின் இடைவிடாத விருப்பத்தையும் திட்டமிட்ட செயல்களையும் மட்டுமே காரணமாகச் சாட்ட முடியாது. கீழ்வரும் பல காரணிகள் செயற்பட்டதை புரிந்து கொள்வது அவசியமாகும்.

இலங்கையில் மிகப் பெரும்பான்மையான அளவுக்கு முஸ்லிம் அரசியல் சமூகத் தலைவர்கள் கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் நன்மைகளுக்கு கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டும் என்ற கருத்து உடையவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர்.

இடதுசாரிக் கட்சிகளின் ஒரு சில தலைவர்கள் இடதுசாரித்துவ சிந்தனை கொண்ட ஒரு பகுதி சிங்கள அறிஞர்கள் தவிர தொண்ணூற்றியொன்பது வீதமான சிங்கள அரசியற் தலைவர்களும் சிங்கள நிர்வாகிகளும், அரச படையினரும் வடக்கு மாகாணத்தோடு கிழக்கை இணைந்திருக்க விடக்கூடாது என்பதில் கடந்த பல தசாப்தங்களாகவே உறுதியான அபிப்பிராயம் கொண்டவர்களாகவும் செயற்பாடுடையவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றனர்

ராஜன் செல்வநாயகம் பின்னர் தேவநாயகம் அதில் பின்னர் ராஜதுரையும் கொண்டிருந்த யாழ் அரசியல் எதிர்ப்பு 1980 களில் 90 களில் காணாமல் போயிருந்தது. கடந்த இரண்டாண்டுகளாக கருணா – பிள்ளையான் குழுவினர் கிழக்கு மாகாணம் தனியாக இருப்பது பெரும்பான்மையான கிழக்கு மாகாணத் தமிழர்களின் அபிப்பிராயம் என்றதொரு எண்ணப்பாட்டை வெளியுலகுக்குக் கொடுத்தனர். வெளிநாடுகளிலுள்ள கிழக்கு மாகாணத்தவரில்; கணிசமானோர் மத்தியிலும் அந்த அபிபபிராயம் பரவியது. புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் ஜனநாயகக்கட்சிகள் மத்தியில் மாற்று அபிப்பிராயம் இருப்பினும் தமது கருத்தை வெளிப்படுத்துவது பரந்துபட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் விருப்பத்துக்கு எதிரானதாகி விடுமோ என்று பெரும்பாலும் மௌனத்தையே கடைப்பிடிப்பவர்களாக அல்லது பட்டும்படாமல் கருத்து வெளியிடுபவர்களாக ஆகினர்.

இலங்கையின் உச்சநீதிமன்றமானது வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட விதத்திலுள்ள சட்ட முறையை வலிதற்றதென நிராகரித்தது. ஆனால் அரசின் அமைப்புக்களும் சிங்கள புத்திஜீவிகளும் வடக்கும் கிழக்கும் சட்டபூர்வமாக இணையவே முடியாது என்பது போல ஓர் அபிப்பிராய மாயையை மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தினரின் மத்தியிலும் ஏற்படுத்திவிட்டுள்ளனர்.

புலிகள் வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டது பற்றி அவ்வப்போது ஏதும் முணுமுணுத்துக் கொண்டாலும் வடக்கு-கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதற்கு அரசியல்ரீதியாக தர்க்கபூர்வமான எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. தமிழர்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள் பரந்துபட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மையான அபிப்பிராயம் என்ன என்பதை வெளிக் கொணர முடியாத அளவுக்கு புலிகளால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. புத்தளம் உட்பட முழு வடக்கையும் புல்மோட்டை தொடக்கம் பட்டிப்பளை. உட்பட கூமுனையாறு வரை முழு கிழக்கையும் விடுதலை செய்யும் கற்பனையிலிருக்கும் புலிகளுக்கு கிழக்கு மாகாண சபை அமைப்பு தனியாக ஆனது ஒரு தற்காலிகமான - பொருட்டற்ற விடயமெனக் கொண்டிருக்கவும் கூடும்.

யாழ்ப்பாணத்து கிளாக்கர்மார் வாத்தியார் ஆட்கள் கிழக்குக்குப் போய் உத்தியோகம் புரிந்த காலம் இப்போது இல்லை. யாழ்ப்பாணத்து தீவுகளைச் சேர்ந்தோர் பலசரக்குக் கடை சாப்பாட்டுக் கடைகள் வைத்து கிழக்கு மாகாணத்தை ஆண்ட காலமும் மேலைநாடுகளுக்கு அக்கரை ஏறிவிட்டது. இப்போது வடக்கு மாகாணத்தின் அரசியற் பதவிகளில் அக்கறை கொண்டோரின் மத்தியில் கிழக்கு மாகாணத்தின் மீது உரிமை கொண்டாடுவது “தமக்கேன் அந்தச் சுமை” எனக் கருதும் விடயமாக மாறிவருகின்றது

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மாகாண சபை அமைப்பில் முஸ்லிம மக்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வு காண்பதனையும் கிழக்கு மாகாண தமிழர்களுக்கு உரிய அரசியல் அதிகாரப் பங்கு வழங்கப்படுவதையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் தீர்வு ஏற்படுவதற்தத் தடையாக இருக்கும் புலிகள் தமிழர்களின் மத்தியில் இராணுவ மற்றும் பயங்கரவாத ரீதியில் ஒரு சக்தியாக இருக்கும் வரையில்; தமிழர்கள் சமூகம் அழிவுகளையும் இழப்புக்களையும் தவிர வேறெதனையும் பெறமாட்டாது என்பதே கடந்த இருபது ஆண்டுகால அனுபவம். இப்போது அது ஒரு பொது அறிவு விடயம். இன்றைய உலகில் மக்களே அரசியல் அபிப்பிராயங்களின் நீதிபதிகள். புலிகளால் விடுதலை கிடைக்கும் - நல்ல விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு எற்படுத்துபவர்களும் அதனை நம்பி புலிகளுக்கு ஆதரவளிப்பவர்களும் கிழக்கு மாகாணம் தனியானதற்கான பிரதான காரணகர்த்தாக்களில் ஒரு கணிசமான பகுதியினராவர். அரசியல் நிலைமைகள் தொடரும் விதத்தைப் பார்க்கையில் ‘தமிழர்களின் தாயகமென உரிமை கொண்டாடப்பட்ட கிழக்கு மாகாணமென்ன வவுனியா மன்னார் என ஏன் காலப் போக்கில் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் கூட சிங்கள வாக்காளர்களை அனுசரித்துத்தான் நடத்த வேண்டும் என்ற நிலைமையேற்படுவதை தமிழர்கள் தமது அரசியற் தலைவிதியென – தாமே தமது தலையில் அள்ளிப் போட்டுக்கொண்ட மண்ணென ஏற்றுக்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

கிழக்கு மாகாணத்துத் தமிழர் பிரதிநிதிகள் - அவர்கள் எப்படித் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் “கிழக்கு மாகாணத்தில் நாங்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களும் ஒருவரோடொருவர் அண்ணன் தம்பி போல் ஒற்றுமையாக இருக்கிறோம். வடக்கு மாகாணத்தவர்கள் எங்களுக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம்” என்று சொல்கையில் அதற்கு மாறாக வடக்கைச் சேர்ந்தவர்கள் என்ன காரணமாயினும் கிழக்கு மாகாணம் வடக்கோடு இணைந்திருக்க வேண்டும் என்று கேட்பதற்கு தார்மீக உரிமையற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். வடக்கு-கிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டியது கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் அவசியமென மக்கள் கோரிக்கையாக எழாவிடின் வடக்கு மாகாணத்தவரின் ‘இணைப்பு’க் கோரிக்கை ஒரு பிரதேச மேலாதிக்கக் கோரிக்கையாகவே எந்தவொரு நடுநிலையாளர்களாலும் நோக்கப்படும்.

இப்படியானதொரு நிலையில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளும், அரசுகள் சாராத சர்வதேச சமூகப் பிரதிநிதிகளும் வடக்கு கிழக்கு இணைப்புக்காக ஆதரவுக் குரல் கொடுப்பதைக் கைவிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வடக்கு-கிழக்கு இணைப்பை எந்த வகையிலும் சாதித்துக் கொடுக்க வேண்டும் என்று 1985-86ம் ஆண்டுகளில் கடுமையாக அக்கறையோடு உழைத்த இந்திய மத்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தன்னைச் சந்தித்த சில தமிழ் தலைவர்களிடம் “இனிமேலும்; நீங்கள் வடக்கு-கிழக்கு இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு யதார்த்தமான நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு சாத்தியமான அரசியல் முன்னேற்றம் காண முற்படுங்கள்” என்று ஆலோசனை கூறியதை இங்கு சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.

1983க்கும் 1986க்கும் இடைப்பட்ட மூன்றாண்டுக் காலத்தில் இலங்கை அரசோடு நேரடியாகவும் தமிழ் கட்சிகளினூடாகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இந்திய அரசாங்கம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த வகையில் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்காக எடுத்த பிரயத்தனங்கள் எல்லாம் இன்றைய போக்கில் தேவையற்ற – பிரயோசனமற்ற ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்பட்டதன் சாராம்ச அர்த்தமே இந்த இணைப்பு என்பதுதான். இந்த இணைப்பு என்ற விடயம் எழுப்பப்படாமல் இருந்திருந்தால் இந்திய அரசாங்கம் அன்றைய இலங்கை அரசை அதன் விருப்பத்தோடு சாராம்சத்தில் மிகவும் அர்த்தம் பொதிந்ததொரு அதிகாரப் பகிர்வுக்கு இலகுவாகவே இணங்க வைத்திருக்க முடியும்.

1985 ம் ஆண்டில் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகள், தமிழர் கூட்டணித் தலைவர்களோடு சுமார் மூன்றாண்டுகளாக (1983 டிசம்பர் - 1986; டிசம்பர் வரை) நடந்த பேச்சுவார்த்தைகள், அதேகாலகட்டத்தில் இந்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் இலங்கை அரசோடு நடத்திய பேச்சுவார்த்தைகள் இவற்றின் போதெல்லாம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக இருப்பதை ஒப்புக் கொண்டிருந்தால் அப்போது நாடாளுமன்றத்தில் ஐந்துக்கு நான்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மிக விரிவான அளவில் அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளத் தயாராகவே இருந்தார். ஏனைய பல சிக்கலான விடயங்களில் இந்திய அரசாங்கம் சிரமமின்றி ஜே.ஆரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கக் கூடிய நிலையிருந்தது. அன்றைய நிலையில் 1987 ஜூலையில் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் போதுகூட வடக்கு-கிழக்கு இணைப்புக்கான ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா உள்ளாகியிருந்தது. ஏனெனில் வடக்கு-கிழக்கு இணைப்பு ஏதாவதொரு வகையிலாயினும் இல்லாமல் தமிழர்கள் எந்தவொரு அரசியற் தீர்வையும் ஏற்க மாட்டார்கள் என்ற எண்ணம் அப்போது இந்தியாவுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவ்விடத்தில் ஒரு குறிப்பு –

1988ம் ஆண்டு நவம்பர் 19ந் திகதி கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றதோடு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வடக்கு-கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மையோடு முதலாவது மாகாண ஆட்சியை அமைப்பதற்குத் தயாரானது. அந்த நவம்பர் கடைசி வாரத்தில் மாகாணத்துக்கான ஆளுநர் நியமனம் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் மாகாண அமைச்சர்கள் பதவியேற்பு முறைகள் பற்றிப் பேசுவதற்காகவும் ஜனாதிபதி ஜே.ஆர் அவர்களை அவரது மாளிகையில் சந்தித்தேன். என்னுடன் தோழர் - பின்னர் நாடாளுமன்ற உறுப்பினருமான - யோகசங்கரி அவர்கள் உடனிருந்தார். அப்போது இந்திய அரசாங்கம் தமிழர் ஒருவரை அல்லது சிங்களவராயிருப்பின் நெவில் கனகரட்னா மற்றம் சார்ள்ஸ் அபேயசேகரா போன்ற மிகவும் நிதானமான ஜனநாயகவாதி ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தது. வடக்கு-கிழக்கு மாகாணத்தை என்றாவது ஒருநாள் பிரித்துவிட வேண்டுமென்ற கொள்கை கொணடிருந்த ஜே.ஆர் அவர்கள் யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ மாகாணசபை மற்றும் மாகாண ஆட்சிக்கான கட்டமைப்புக்களை ஆக்கும்படி என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஒப்புக் கொண்டால் தமிழர் ஒருவரை வடக்கு-கிழக்குக்கு ஆளுநராக நியமிப்பதாக வாக்களித்தார். அதற்கு உடனடியாக வெளிப்படையாகவும் உறுதியாகவும் பதிலளிக்க வேண்டியவனாக இருந்தேன். நான் அவரிடம் “ஆளுநர் உங்கள் பிரநிநிதியாக மாகாணத்தில் இருக்கப் போகிறவர் ஆகவே நீங்கள் யாரை வேண்டுமானாலும் நியமியுங்கள் அதில் எந்தவிதமான மாற்று அபிப்பிராயமும் என்னிடம் இருக்கமாட்டாது. ஆனால் வடக்கு-கிழக்கு மாகாண ஆட்சியின் தலைநகரமாக திருகோணமலையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று உறுதியாகக் கூறியதோடு அதற்கான, எனக்குப்பட்ட அரசியல் சமூக நியாயங்களையும் அவருக்குக் கூறினேன். எனது கருத்துக்களைக் கேட்ட ஜே.ஆ.ர் தனது உள்மனதுக்குள் என்ன எண்ணம் கொண்டிருந்தாரோ, ஆனால், நான் கூறியவற்றை அவர் ஒரு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு எனது முயற்சிகளுக்கு தனது ஒத்தழைப்பு பூரணமாக வழங்கப்படும் என வாக்களித்ததோடு. மரபுக்கு மாறாக எனது முதலமைச்சருக்கான சத்தியப் பிரமாணத்தை தானே முன்னின்று நடத்தி வைக்க விரும்புவதாகவும் அப்போதே தெரிவித்தார். .

ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்துக்கான ஆட்சியமைப்பு ஏற்பட்டு இருபது வருடங்கள் ஓடிவிட்டது. மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்து விட்டன் நிகழ்த்தப்பட்டுவிட்டன. இன்று கிழக்கு மாகாணம் தனியான மாகாண ஆட்சி நிர்வாகமாக ஆகியிருப்பதே; ஆக்கப்பட்டிருப்பதே யதார்த்தமாகும். இந்திய அரசு கூட வாய் திறந்து மாற்றுக்கருத்தெதுவும் தெரிவிக்க முடியாத அளவுக்கு இன்று நிலைமைகள் மாற்றமடைந்து விட்டன. கிழக்கு மாகாணத் தமிழர்கள் மத்தியில் மீண்டும் வடக்கு-கிழக்கு இணைப்புக்கான குரல் வலுப்பெறுமா? அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள இனங்களுக்கிடையிலான உறவில் மாற்றங்களேற்பட்டு அதன் விளைவாக மாகாண எல்லை அமைப்புக்களில் மாற்றங்கள்; செய்யப்பட்ட புதிய வகையான மாகாண ஆட்சியமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுமா? அல்லது இப்போது சிலர் சந்தேகம் கிளப்புவது போல சிங்களப் பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரத்தினால் தமிழர்களும், முஸ்லிம்களும் மீள முடியாத இனக்கரைப்பு வரலாற்றுக்குள் நிரந்தரமாகத் தள்ளப்பட்டு விடுவார்களா? இலங்கையின் அரசியலில் எதிர்பார்க்கப்படாத அளவுக்கு மாற்றங்களேற்பட்டு அரசியல் யாப்பிலுள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மீண்டும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் புதிய வகையில் இணைக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி ஊகங்களினடிப்டையில் விடை காண முற்படுவது இப்போதைக்கு கால மற்றும் சூழல்களுக்கு பொருத்தமற்ற முயற்சியாகும்..

அதற்கு மாறாக, ஏற்பட்டுள்ள மாகாண ஆட்சியமைப்பு தொடர்பாகவும் அதன் எதிர்காலம் பற்றியும் ஆய்வது பயனுடையதாகும்.. வடக்கில் நடைபெறும் யுத்தம் எப்போது கிழக்கைப் போல முடிவுக்கு வரும் என்று கூற முடியாத நிலையே இன்றுள்ளது. வடக்கிலும் புலிகள் பலவீனப்படும், அங்கு ஜனநாயக முன்முயற்சிகளுக்கான சூழல் ஏற்படுத்தப்படும் வரை கிழக்கு மாகாண மக்கள் போரினால் பட்ட அவலங்களிலிருந்து மீட்கப்படாமலேயே வாழவேண்டும் என்று நினைத்தால் அது மக்கள் விரோதமான செயலாகும்.. எந்தச் சூழ் நிலையின் மத்தியிலும் மக்களின் அடிப்படை உரிமைகள், மக்களின் நல்வாழ்வு என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களே மக்களின் விடுதலைக்காக உண்மையாக உழைப்பவர்களாவார்கள். காடுகளுக்குள் எந்தத் தட்டுப்பாடும், கட்டுப்பாடும் இல்லாமல் சகல வசதிகளோடும் மாளிகை வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் தமது மனைவியர், பிள்ளைகள், இரத்த உறவினர்களை வெளிநாடுகளில் வசதியாக வாழ வைத்துக் கொண்டும் இங்கே இனவிடுதலை என்ற பேரில் பொதுமக்களை அவலத்துக்குள் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் பிள்ளைகளை யுத்தத்துக்குக் காவு கொடுத்துக் கொண்டும் இருப்பவர்கள் ஏனைய எல்லோரையும் மிஞ்சிய சமூக விரோதிகள் - அந்த இனத்தை அடியோடு ஒழித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதே உண்மையாகும்.

யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலை, பூரண இறைமை கொண்ட தனித்தமிழ்ப் பேராட்சி என்ற நினைப்பில் வாழ்வோருக்கு என்னதான் அதிகாரங்களிருப்பினும் மாகாண ஆட்சி என்பது அர்த்தமற்ற ஒன்றாகத் தெரியலாம்…

அவர்களுக்கு முதலமைச்சர் புள்ளையான் துரோகியாகத் தெரியலாம்…

யார் ஜனாதிபதியாக இருப்பினும் இலங்கை அரசும் அரசுப் படைகளும் சமரசம் செய்யப்பட முடியாத அவர்களின் எதிரிகளாகத் தெரியலாம்…

ஆனால், ஒன்றுபட்ட இலங்கையை ஏற்போருக்கும், அதற்குள் சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட மாகாண ஆட்சியமைப்பை எதிர்பார்த்திருப்போருக்கும் புலிகளின் கண்பார்வையிலேயே விடயங்களை அணுகிப் பார்க்கும் போக்கு இருக்கமாட்டாது - இருக்கவும் கூடாது.

காட்டுமிராண்டிகளான பிரபாகரன் புலிகளை விட தேர்தல், மக்களின் வாக்குகள், சட்டபூர்வமான அரசாங்கம் என முன்வந்துள்ள புள்ளையானின் புலிகளிடம் பல குறைபாடுகளிருப்பினும் அவர்களால் ஜனநாயகரீதியான விடயங்களுக்கு குறைந்தளவு அச்சுறுத்தலே காணப்படும்.,,,,, குறைபாடுகளின் மத்தியிலும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கமும் அதன் கட்டளைகளுக்கு உட்பட்ட அரச படைகளும் எத்தனைதான் அத்துமீறல்களில் ஈடுபட்டாலும் அவை சட்டங்களை மீறுவதிலும் மக்களின் எண்ணங்களைப் புறக்கணிப்பதிலும், சர்வதேச அபிப்பிராயங்களை அலட்சியப்படுத்துவதிலும் அவற்றிற்கு நிச்சயமாக ஓர் எல்லையுண்டு. அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் மக்களை நம்பும்படி செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. நீதி மன்றங்களுக்கு உலகறியும் வகையில் பதில் சொல்லியேயாக வேண்டும். எனவே பிரபாகரனின் வன்னிக் காட்டாட்சியை விட கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் ராஜபக்ஷ - புள்ளையான் கூட்டாட்சி எத்தனையோ மடங்கு நல்லதாக – முன்னேற்றகரமானதொன்றாக இருக்குமென்றே கொள்ள வேண்டும்;. இங்கு மற்றைய கட்சிக்காரர்களும் மக்களின் நன்மைகள் தொடர்பாக செயற்பட ஓரளவு இடைவெளிகளுண்டு. தம்மீதான ஆட்சி தொடர்பாக கேள்விகள் கேட்பதற்கும், தேவைப்படின் சட்டபூர்வமாக அதனை எதிர்த்து – ஆர்ப்பரித்துக் குரலெழுப்பவும், தமக்குத் தேவையானவற்றை உரிமையோடு கோருவதற்கும் இங்கே மக்களுக்கு கணிசமான அளவுக்கு வாய்ப்புக்களுண்டு.

தாம் நினைப்பில் கொண்டிருக்கும் இலட்சியகரமான சூழல்களை அடையும் வரை தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களையெல்லாம் சீரழித்துக் கொண்டிருக்காமல் சாதகமாகக் கிடைத்தவற்றையெல்லாம் இறுகப் பற்றிக் கொண்டு தம்மை அழிக்க முற்பட்டவற்றை எதிர்த்துப் போராடியபடி புதிய முன்னேற்றகரமான மாற்றங்களை நோக்கி தொடர்ச்சியாக நகர்ந்தது தான் மனித சமூகத்தின் நாகரீக வரலாறு. புலிகளின் ஏணியில் வானமேறி வைகுண்டம் போய்விடலாம் என்று கைக்கெட்டிய இந்திய ஆதரவையும், வடக்கு-கிழக்கு மாகாண ஆட்சியமைப்பின் முன்னேற்றங்களையும் இழந்த தமிழர்கள் இப்போதாயினும் – கிழக்கு மாகாண விடயத்திலாயினும் புத்தி பூர்வமாக செயற்பட வேண்டும்.



ஈ.பி.ஆர்எல்.எப் இணையம்

No comments: