Monday, June 9, 2008

ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்வு

வன்னியில் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் கடும் ஷெல் தாக்குதல்களால் நெடுங்கேணி மற்றும் இயக்கச்சி பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். குடாவில் கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினர் பளை, இயக்கச்சி, சோரன்பற்று பகுதிகளில் மக்கள் குடியிருப்புக்களையும் மீனவர்கள் அதிகளவில் தொழில்புரியும் கரையோரப் பகுதிகளையும் நோக்கி தொடர்ச்சியான ஷெல் வீச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

மிகக் கடுமையான ஷெல் தாக்குதல்களால் இதுவரை இடப்பெயர்வை சந்திக்காத இயக்கச்சி, சோரன்பற்று மற்றும் வடமராட்சி கிழக்கு மக்களும் தற்போது பெருமளவில் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.

மணலாறில் மண்கிண்டி மலையில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரும் நெடுங்கேணியில் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது கடும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகத் தீவிரமடைந்துவரும் இந்தத் தாக்குதலினால் கடந்த 4 ஆம் திகதி இரு பொதுமக்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து தமது உடமைகளுடன் நெடுங்கேணியிலிருந்தும் மக்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது விளை நிலங்களைக் கைவிட்டு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்விளை நிலங்கள் யாவும் அழிவடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருவதால் நெடுங்கேணியிலுள்ள பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மன்னாருக்கு கிழக்கே படையினர் மேற்கொண்டுவரும் பாரிய படை நடவடிக்கைகளாலும் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து வருவது தெரிந்ததே.

No comments: