
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் தனித் தமிழ் இராச்சியம் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு குறித்து இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் நடவடிக்கையாளர்கள் குழுவின் சட்டத்தரணியான புருஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையில் அனைத்து இன மக்களும் எவ்வாறு ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்கின்றனர் என்பதைப் பார்க்க அக்கறையுள்ள தரப்புகள் வரலாம் எனப் பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்ததாகக் கூறியுள்ள புரூஸ் பெய்ன், அந்த அழைப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்;
எனவே தம்மை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடிய நாள் ஒன்றை அறிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
தனித் தமிழ் இராச்சியத்திற்கு எதிரான தமிழர்களை நேரடியாகப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் இதன் மூலம் தமக்குக் கிட்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புலனாய்வாளர்களால் தாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், பணத்தைச் செலவழித்துத் தம்மை பற்றித் தெரிந்துகொள்வதை விட நீதிக்கான தமிழர்கள் என்ற இணையத்தளத்திற்குச் சென்றால் அதில் தம்மைப் பற்றித் தெரிந்துக்கொள்ளமுடியும் என பெய்ன் தெரிவித்துள்ளார்.
நீதிக்கான தமிழர் அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல.
இந்தநிலையில் இலங்கையில் இருந்து ஜனாதிபதியோ அல்லது அவரின் முகவர்களோ, தாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதி எனக் குறிப்பிட்டால் அதற்கு எதிராக அவதூறு வழக்கைத் தொடரப்போவதாகப் புரூஸ் பெய்ன் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் வாழ்வதனை இலங்கைத் தமிழர்கள் பெருமையாகக் கருதுவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறானால் தனித் தமிழ் இராச்சியம் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துவது குறித்து நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்களது கருத்துக்குச் சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்கினால் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது.
ரி.எப்.ஜே. தனித் தமிழ் இராச்சியம் ஒன்றை வலியுறுத்தவில்லை.
மாறாகத் தனித் தமிழ் இராச்சியம் பற்றிய தமிழர் நிலைப்பாட்டைச் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தையே வலியுறுத்தி நிற்பதாக அவர் குறிபிட்டுள்ளார்.
தமிழர்களின் பல நியாயமான கோரிக்கைகள் அளவுக்கதிகமாக மறுதலிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட உலகின் பல முன்னணி இலங்கையில் மிக மோசமான முறையில் ஊடக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதாகவும், குறிப்பாகத் தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனித் தமிழ் இராச்சியத்திற்கு மாறாக ஐக்கிய இலங்கை தொடர்பான தமிழர்களின் உண்மையான முனைப்பை அறிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்தின மக்களும் சகோதரத்துவமாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படும் கருத்தை யதார்த்தபூர்வமாக அறிந்து கொள்ளத் தாம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை மக்கள் தமிழர் தொடர்பாகக் காட்டும் கரிசனையை அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் புரூஸ் பின் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment