ஆயுதங்களைக் கைவிட்டாலே விடுதலைப் புலிகளுடன் பேச்சு இந்த நிபந்தனையை ஏற்றாலும் பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் எதுவும் செய்யமாட்டேன்
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே, அவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். அவர்கள் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு விரும்பினால் முதலில் ஆயு தங்களைக் கைவிடவேண்டும்.
இவ்வாறு லண்டனில் வைத்து "த ரைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறியிருக்கிறார்.
அது மட்டுமன்றி புலிகள் தனது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டாலும் கூட, புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் எதையும்செய்யப்போவதில்லை என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.
லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துவிட்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைத்து "த ரைம்ஸ்" பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.
அவர் அப்போது கூறியவை வருமாறு:
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இலங்கையின் உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றின் மத்தியிலும் கூட நாம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்கப் போவதில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த அமைப்பு முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.
விடுதலைப் புலிகள் தாங்கள் பலவீனமாக உள்ள சமயத்தில் சர்வதேச சமூகத்தை யுத்தநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோருவார்கள். இக்காலப் பகுதியில் அவர்கள் மீண்டும் போரிடுவதற்காகத் தம்மைப் பலப்படுத்துவார்கள்.
இம்முறை அவர்கள் பேச்சுகளில் ஈடுபட விரும்பினால் முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை
விடுதலைப் புலிகள் இந்த முன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவருடன் நான் சமாதான ஒப்பந்தம் எதனையும் செய்துகொள்ளமாட்டேன். ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை.
"இந்த மனிதரும், அவரைச் சுற்றியுள்ள மூன்று நான்கு அடியாட்களும் இரத்த வெறி பிடித்தவர்கள். அவர்கள் உணர்வில்லாதவர்கள்" என்று தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment