Friday, June 20, 2008

நளினிக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி மனுத்தாக்கல் விளக்கமளிக்க முடியாமல் தமிழக அரசு தடுமாற்றம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்துள்ள மனுவின் மீது தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்காமல் தமிழக அரசாங்கம் மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தடுமாற்றமடைந்தது.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்த்துக்கொள்ளக்கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரது மனுவுக்கு நளினி சார்பில் புதன்கிழமையன்று பதில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணிகள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுவில், என்னை விடுதலை செய்வதற்கு சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை கேட்க வேண்டியதில்லை. அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவரை எதிர் மனுதாரராக சேர்க்கக்கூடாது என்று நளினி பதில் அளித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் துரைசாமி, ?சுப்பிரமணிய சுவாமியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல, அதன் மீது எங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறோம். பிரதான மனு மீதான விசாரணையை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அரச தரப்பு சட்டத்தரணி அளித்த பதில்களின் விவரம் வருமாறு;

நீதிபதி: சுவாமியின் மனுவுக்கு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளதா?

அரசவழக்கறிஞர் அருண்: இதுவரை தாக்கல் செய்யவில்லை.

நீதிபதி: சுவாமியின் மனு மீது பதில் மனுத் தாக்கல் செய்கிறீர்களா?

அரச வழக்கறிஞர்: இன்னும் முடிவு செய்யவில்லை.

நீதிபதி: அப்படியானால் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? சுவாமியின் மனுவை ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?

அரசுதரப்பு வழக்கறிஞர்: நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.

நீதிபதி: நடுநிலை வகிக்க விரும்புகிறீர்களா?

அரசவழக்கறிஞர்: ஆமாம்.

நீதிபதி: இதனை பதிவு செய்து கொள்ளட்டுமா?

அரசவழக்கறிஞர்: வேண்டாம், அரசு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் பிற்பகல் ஆஜராகி வாதிட உள்ளார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சுவாமியின் சார்பில் ஆஜரான சிரேஷ்டசட்டத்தரணி ராஜகோபால், ?சுவாமி தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு எதிர்க்காது. ஏனெனில், அரசுக்கு ஆதரவாகத்தான் சுவாமி மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

உடனே நளினியின் சட்டத்தரணி துரைசாமி, "சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. எனவே இது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார். அப்போது நளினி தொடர்ந்துள்ள வழக்கில் சுவாமியை சேர்த்துக்கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

No comments: