Sunday, June 8, 2008

ராஜபக்ஷவின் ஆட்சியிலிருப்பதைவிட புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழருக்கு சந்தோசமான வாழ்வு

மகிந்த ராஜபக்ஷவின் அரசின் கீழ் இருப்பதைவிட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாகவும் வசதியாகவும் வாழ்ந்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலுக்கான தடை தொடர்ந்தால் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு அதிகரிப்பதை எவராலும் தடுத்து விட முடியாதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜயந்த விஜேசேகர மேலும் கூறியதாவது;

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள மீன் பிடித்தடையால் மூவினமக்களும் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். சிங்களவர்களுக்கு ஓரளவுக்கு அனுமதி வழங்கும் கடற்படை தமிழ் மக்களுக்கு அனுமதியை முற்றாக மறுப்பதால் அவர்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்களவர்களின் வீடுகளுக்கு வந்து தமிழ் மக்கள் அரிசி கேட்கின்றனர். மீன் கேட்கின்றனர். வறுமையின் கொடுமையால் அவர்கள் நகைகளை, வீட்டுத்தளபாடங்களை விற்கின்றனர். பலர் அனைத்தையும் விற்றுவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடுகின்றனர். அதிலும் பலர் நடுக்கடலில் உயிரிழக்கும் பரிதாபமும் ஏற்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் 24 மணிநேரமும் மீன் பிடிக்கலாம். மக்களின் கஷ்டங்கள் தீருமென்றெல்லாம் அந்த மக்களுக்கு நான் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாகவே நடக்கின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியிலிருப்பதைவிட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அந்த மக்கள் மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தார்கள்.

தேர்தலுக்கு முன்னர் அதிகாலை 2 மணிமுதல் மீன்பிடிக்க அனுமதி வழங்கிய அரசு, தேர்தல் முடிந்தவுடன் அந்த அனுமதியை ரத்துச் செய்தது ஏன்? கொழும்பிலிருந்த செல்லும் கட்டளைகளைத்தான் கடற்படையினர் நடைமுறைப்படுத்துகின்றனர்.

இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை மீறுகின்றது. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது. கிழக்கில் உதயம் ஏற்பட்டு விட்டதாக அரசு கூறுகின்றது. ஆனால் மக்கள் பட்டினியால் வீடுகளை, வீட்டுத்தளபாடங்களை நகைகளை, சட்டி பானைகளை விற்று சாப்பிடும் நிலைக்கு வந்துள்ளனர். இதுதான் இந்த அரசின் கிழக்கின் உதயமா?

சம்பூரில் ஒருதமிழர் கூட இல்லை. அப்பகுதியை அரசு அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கியுள்ளது. அங்குள்ள தமிழர்கள் இன்று அகதியாக அலைகின்றனர். பாதுகாப்பு வலயம் தேவைதான். அதற்காக மக்களை விரட்ட முடியாது.

அரசின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் அங்குள்ள மக்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் ஆதரிப்பார்கள். இதணை எவருமே தடுத்துவிட முடியாது. எனவே இந்த மீன் பிடித்தடைதொடர்பில் அரசு உடனடி நடவடிக்கையெடுத்து வறுமையோடு போராடும் மக்களை காப்பாற்ற முன் வர வேண்டும்.

No comments: