Wednesday, June 4, 2008

நாம் என்றும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல

இந்தியாவின் நலன்களை எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. என்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத் தரப்பிற்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த பேட்டியின் விபரம் வருமாறு:

கேள்வி: தமிழீழத் தாயகம் என்ற தீர்வுத்திட்டத்திற்கு குறைவான ஒரு தீர்வுத்திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நோக்க வேண்டும் என்ற பரப்புரை ஊடகங்களின் ஊடாக வெளியிடப்படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

பதில்: தமிழீழக் கோரிக்கை என்பது திடீரென வானத்தில் இருந்து உதித்த ஒரு கோரிக்கை அல்ல. அது படிப்படியாக வார்த்தெடுக்கப்பட்ட கோரிக்கை. அரசியல் தெரியாதவர்கள், வரலாறு தெரியாதவர்கள்தான் தமிழீழக் கோரிக்கை குறித்து அவ்வாறு சொல்வார்கள். தமிழீழக் கோரிக்கை என்பது இன்று நேற்று உருவானதும் அல்ல. 1948 ஆம் ஆண்டுக்கு முன்னரே உருவானது. அது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் எம்மிடம் இருக்கின்றன. சாதாரண ஒரு கோரிக்கையாக இருந்து படிப்படியாக வளர்ந்து 1977 இல் மக்கள் ஆணை பெற்ற கோரிக்கையாக இது வளர்ந்திருந்தது.

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் இந்தக் கோரிக்கையை முதலில் முன்வைத்ததாக ஒரு மாய விம்பம் உருவாக்கப்படுகின்றது. அதுவும் பொய். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலையில் வந்து விழுந்தது.

தொடக்க காலங்களில் நாம் சிங்கள இராணுவத்துடன் மூர்க்கமாகப் போரிட்டபோது எமது கொள்கைகளில் விடாப்பிடியாக நின்று அதனை உறுதியாகச் சொல்ல வேண்டிய தேவையிருந்தது. காலக்கிரமத்தில் நாம் முதிர்ச்சி பெற்று, இந்தப் போராட்டமும் முதிர்ச்சி பெற்று அனைத்துலகம் இங்கு வந்து தலையிட்டபோது நாம் அந்தப் பண்புகளுக்கு ஏற்ற மாதிரி ஒரு மாற்று வழிமுறையை எப்போதும் பரிசீலிக்கத் தயார் என்பதனை நாம் தெளிவாகச் சொல்லி வருகின்றோம். இதனை எவரும் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. இது எமக்குப் பெரிய மனத்துன்பம்தான். ஒரு மாற்றுக் கோரிக்கையை சரியான முறையில் முன்வைத்தால் நாம் அதனை பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கின்றோம். இது தொடர்பாக தெளிவான அறிக்கைகள் எம்மிடம் இருக்கின்றன. அத்தகையதொரு நிலையில் திரும்பவும் இவர்கள் எம்மிடம் இப்படியாகச் சொல்வது ஏன் என்று புரியவில்லை. சிங்களம் எந்தத் தீர்வையும் முன்வைக்கத் தயாராக இல்லை என்பது மிகத் தெளிவான விடயம். அவர்கள் சொல்கின்ற தீர்வைக்கூட முன்வைக்கத் தயாராக இல்லை என்பதும் தெளிவான விடயம். எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிப்படையை ஆட்டம் காண வைப்பதற்காகவும், இது தொடர்பான ஒரு கருத்தாடலை உருவாக்கி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை விளைவிப்பதற்காகவும் மிகப்பெரியதொரு அனைத்துலக சதியாக இது நடைபெறுவதனைப் பார்க்கலாம்.

இந்தியா உட்பட அனைத்துலக சக்திகள் இத்தகைய கருத்தைக் கூறுகின்றன. இந்த அனைத்துலக சக்திகள் இதனை ஏன் மற்றவர்களுக்குச் சொல்லவில்லை? பங்களாதேஷ் பிரிந்தபோது இந்தியா ஏன் இதனைச் சொல்லவில்லை? அல்லது,அமெரிக்கா இப்போது கிழக்குத் தீமோருக்கோ அல்லது கொசோவோவுக்கோ ஏன் சொல்லவில்லை? அல்லது ரஷ்யாவில் இருந்து பிரிந்து போன குடியரசுகளுக்கோ ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி கூடவே எழுகின்றது. இவை எல்லாம் அனைத்துலக அரசியலின் ஒரு வெளிப்பாடான தன்மை. இவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரம் இவற்றின் ஆழமான உள் அர்த்தங்களை எமது மக்கள் மிகத் தெளிவான முறையில் மறுதலிக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகின்றோம்.

கேள்வி: அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ இப்படியான கருத்துகளை கூறியவுடன் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித தாக்கம் ஏற்படுகின்றது. எனவே இத்தகைய அனைத்துலக நாடுகளின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகள் மாற வேண்டிய தேவை இருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக இல்லை. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூட்டம் என்பது நிச்சயமாக தனது சொந்தப் புத்தியில், தனது சொந்தக்காலில்,தனது சொந்த உணர்வில் வாழ்கிற ஒரு தனியான ஒரு தேசிய இனம் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. எமது மக்கள் இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டில், உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.

அவர் சொல்கின்றார், இவர் சொல்கின்றார் என்று நாம், எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. வள்ளுவன் கூறியது போன்று "எவர் சொன்னாலும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது". இந்த நீண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றின் பின்னால் எத்தனை சூழ்ச்சிகள்,சதிகள், தடைகள்,மயக்கங்கள்,தயக்கங்கள் என அனைத்தையும் கடந்து இன்றும் ஒரு குரு÷ஷத்திரம் என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய நெருப்பாற்றில் நீந்திக்கொண்டு விடுதலையை நோக்கி முன்னேறுகின்ற வேளையில் இந்த விடயங்களில் நாம் ஒரு முதிர்ச்சி பெற்ற மக்கள் கூட்டமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கிற மக்கள் கூட்டம்தான் விடுதலையைப் பெற முடியும்.

அதனைக் காலம் காலமாக குழப்புவதற்கு இத்தகைய கருத்துகளை முன்வைப்பார்கள். நாம் அதனைப் புறந்தள்ளி செயற்படுவதற்கான ஒரு ஆன்ம முனைப்பை அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டும். எதனையும் வெற்றியோடும் தோல்வியோடும் பொருத்திப் பார்க்கமால் அதன், அதன் அடிப்படையில் பொருத்திப் பார்ப்பதற்கான ஒரு பக்குவத்தை எமது மக்கள் எங்கிருந்தாலும் பெறவேண்டும். கேள்வி: அனைத்துலக சமூகத்துடன் இணைந்துதான் ஒரு விடுதலையைப் பெறவேண்டும் என்ற கருத்து மக்கள் இடையே உள்ளது. அது எந்தளவுக்குச் சாத்தியமானது அல்லது உண்மையானது என்று கூறமுடியுமா? பதில்: இது பொதுவான கருத்து. அதனை நாம் மறுக்கவில்லை. பொதுவான அரசியலில் பங்குபற்றி அனைத்துலக நீரோட்டத்தில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்பது உண்மை. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த இடத்தில்தான் இன்னும் கொஞ்சம் ஆழமான பார்வையை எமது மக்கள் வைக்கவேண்டும்.

அனைத்துலக நாடுகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான கொள்கைகளை கடைப்பிடிப்பது ஏன் என்பதனைப் புரிந்துகொண்டால் மக்கள் தெளிவடைவார்கள். ஓர் இடத்தில் ஏற்றுக்கொள்வதனை வேறொரு இடத்தில் மறுக்கின்றார்கள். இது ஏன் என்பதனை பார்க்கும்போது அங்கே அவர்களின் சொந்த நலன் என்பது முக்கியம் பெறுகின்றது. விடுதலைப் போராட்டம் என்பது எப்போதும் தனது தேசிய இனத்தின் நலன்களை முக்கியப்படுத்த வேண்டும். பிறரின் கருத்துகளை கேட்பது என்பது பலவீனத்தின் வெளிப்பாடுதான். கேள்வி: சிங்களத் தலைமைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது, ஒரு நிரந்தரத் தீர்வைத் தரும் என எதிர்பார்ப்பது சரியா? பதில்: ஒருபோதும் அது நடக்காத காரியம் என்பது மிகத் தெளிவாக தெரிவாகி விட்டது. எமது வரலாற்றில் 1948 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் இருந்து எமக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இவருக்கு அடுத்தவர் வந்தால் எமக்கு ஒரு நன்மையைச் செய்வார் என்று நம்பிக்கை வைப்போம் நாம். டி.எஸ்.சேனநாயக்கவுக்குப் பின்னர் கொத்தலாவல. கொத்தலாவலவைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். அவரும் அந்தக் காலத்தில் வாக்குறுதிகளைத் தந்தவர்தான். கொத்தலாவலவுக்குப் பின்னர் வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா கடைசியாக மகிந்த ராஹபக்ஷ என்று நாளைக்கு இன்னொரு தலைவர் கூட வாக்குறுதிகளைத் தந்து வரக்கூடும். கேள்வி: உங்களின் தனிப்பட்ட பார்வையில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எந்த வகையில் அமையவேண்டும் என்று கருதுகின்றீர்கள் ?

பதில்: தமிழ்நாட்டில் நானும் மிக நீண்டகாலமாக இருந்தேன். இந்திய அரசியலோடு நான் ஈடுபாடு கொண்டிருக்கின்றேன். தமிழீழ அரசியலோடு சேர்த்து இந்திய அரசியலையும் நாம் பார்க்கின்றோம். இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் உன்னிப்பாகப் பார்க்கின்றோம். இந்தியாவுக்கும் எமக்கும் இடையில் பிணைப்பு இருப்பதாக நாம் எப்பொழுதும் உணர்ந்து கொள்கின்றோம். இந்தியா தனது அரசியல் சிக்கலை, அந்த நலன்களை விடுத்து இதனை ஒரு அறிவுபூர்வமான சிக்கலாக உணர்ந்து எமது மன உணர்வுகளை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் என்றைக்கு ஏற்றுக்கொள்ள முன்வருகின்றார்களோ அன்றுதான் இந்தியா நல்லதொரு கொள்கையை வகுக்கும். இந்தியா தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப இதனையும் ஒரு சடுகுடு அரசியல் ஆட்டத்தில் இருக்கின்ற ஒரு பகடையாகப் பயன்படுத்தி வருகின்றதனை பார்க்கும்போது நாம் மிகுந்த வேதனையடைகின்றோம். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இது காலம் காலமாக நடந்து வருகின்ற நிகழ்வு. இந்தியாவின் மத்திய கொள்கை வகுப்பாளர்கள் இடையே உள்ள அந்த காய்ப்பு, அவர்களின் அறியாமை, அவர்களின் அந்த மிதப்புத் தன்மை, மேட்டுக்குடி பெரியண்ணன் நினைப்பு என்பது எல்லாம் இதற்குத் தடையாக இருக்கின்றது. எம்மை சுண்டைக்காய்கள் என்று அவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள். அவ்வாறு இல்லை என்று நிரூபித்ததற்கு பின்னாலும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.

அது எமக்கு மிகப் பெரியதொரு துயரமாகத்தான் இருக்கின்றது. அதற்காக நாம் சோர்ந்துவிட முடியாது. இந்தியாவுக்குச் செய்திகளைச் சொல்கின்றோம். நாம், என்றைக்குமே இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். இந்தியாவின் நலன்களை நாம், எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது.

றஎன்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத்தரப்பிற்கு உள்ளது. நிச்சயமாக இந்தியா தனது இந்த நிலையை மறுபரிசீலனை செய்யும். அவ்வாறு செய்வதற்கான ஒரு நிலையை சிங்கள அரசே ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் எமக்கு நல்ல நம்பிக்கை இருக்கின்றது. இங்கேயுள்ள ஆழமான அரசியலை இந்தியா புரிந்திருந்தாலும் கூட தலையிட்டு, இறங்கி வந்து, நீதியான ஒரு முகத்தைக் காட்டுவதற்கு இந்தியாவால் முடியாது இருப்பது ஏன் என்பது இன்று வரை எம்மால் புரிய முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள எமது ஆர்வலர்கள், எமது அன்புக்குரிய மக்கள் என எல்லோரினதும் நீண்ட அந்த இடைவிடாத பற்றுறுதி நிச்சயமாக இந்திய மத்திய அரசின் கொள்கையை மாற்றியமைக்க துணை செய்யும் என்று நாம் நம்புகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டாலும் நாம் துணிந்து நின்று போராடி, இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு முன்பாக நாம், எமது வெற்றியைப் பேணினாலும் அன்றைக்கும் நாம் இந்தியாவுடன் நீள் உறவைப் பேணத்தான் விரும்புவோம் என்பதனை சொல்லிக்கொள்ளத்தான் விரும்புகிறேன்.

No comments: