மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல்வாரத்தில் மோதல்கள் நடைபெற்றபோது மூன்று நாட்களாக எனது வீட்டைச் சுற்றி விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்பட்டது. உண்பதற்கு எதுவுமின்றி நீரைமட்டும் அருந்தி மனைவி, பிள்ளைகள் எங்கேயென்று தெரியாத நிலையில் அச்சத்துடன் இருந்ததாக மூதூர் பிரதேசவாசி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்துள்ளார்.
மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அக்ஷன்பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்டு வருகின்றது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை சாட்சியமளித்த மூதூர் பிரதேசவாசி மேலும் தெரிவிக்கையில்;
நான் 1974 ஆம் ஆண்டு முதல் மூதூர் பகுதியிலேயே வசித்து வருகின்றேன். மூதூரில் வசிக்க ஆரம்பித்த காலம் முதலே மோட்டார் வாகனங்கள் திருத்தும் நிலையமொன்றையும் ஸ்தாபித்து அதன் மூலம் வருமானம் ஈட்டிவந்தேன்.
எனது கராஜில் வான், லொறி, பஸ் ஆகிய வாகனங்கள் திருத்தம் செய்யப்படும்.
இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதியன்றும் எனது கராஜில் வழமையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
இந்த வேளையில் அன்றையதினம் சிறு சிறு துப்பாக்கிச் சூட்டுச்சத்தங்கள் நகரில் கேட்கத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல வெடிச்சத்தங்கள் அதிகரித்த அதேநேரம், மிக அருகிலும் கேட்க முடிந்தது.
இந்நிலையில், எனது மனைவியும் குழந்தைகளும் அச்சத்தின் காரணமாக வீதிக்கு மறுபுறத்திலுள்ள மனைவியின் சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இவர்கள் தாம் அங்கு செல்லும்போது எனக்கு எதுவும் கூறவுமில்லை. என்னை அவர்களுடன் வருமாறு அழைக்கவுமில்லை.
இந்நிலையில், யாருமற்ற நிலையிலேயே ஆகஸ்ட் ஆறாம்திகதிவரை எனது கராஜிலும் வீட்டிலுமாக இருந்தேன்.
இவ்வாறாக ஆகஸ்ட் முதலாம் திகதியன்று மூதூர் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் வெடிச்சத்தங்கள் தொடர்ந்து கேட்டவண்ணமே இருந்தன.
அன்றையதினம் இரவு நான் எனது வீட்டிலேயே தங்கியிருந்தேன். மறுநாளும் இதேபோலவே தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன.
இந்நிலையில், எனது நண்பரொருவரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியிருந்தேன். அங்குள்ள மலசலகூடத்திலிருந்த துளை ஒன்றினூடாக வெளியில் பார்த்தபோது வீட்டுக்கு வெளியில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நிற்பதைக் கண்டேன்.
அன்றையதினம் அங்கேயே தங்கியிருந்தேன். தொடர்ந்தும் இரவு வெடிச்சத்தங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன.
அன்று முழுவதும் நீர் மட்டுமே எனக்கு குடிப்பதற்கு கிடைத்தது. எதுவித உணவுகளும் கிடைத்திருக்கவில்லை.
அன்றையதினம் பலதடவைகள் நான் மலசல கூடத்துக்குச் சென்றுபார்வையிட்ட போது விடுதலைப் புலி உறுப்பினர்களை அங்கு காணக் கூடியதாக விருந்தது.
அதேபோல, மூன்று தினங்கள் நிலைமை இதுபோலவே இருந்ததுடன், விடுதலைப்புலிகளின் நடமாட்டமும் இருந்தது.
அந்த வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு நேர் முன்னே உள்ள வீட்டிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வந்து சாப்பிட்டுச் சென்றனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் நான்காம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் வெடிச்சத்தங்கள் கேட்காத நிலையில் வீதிக்குச் சென்றேன்.
அப்போது அங்கிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்னை விசாரணை செய்தனர். வெள்ளை ரீசேட், சாரம் போன்ற உடைகளையே இவர்கள் அணிந்திருந்தனர்.
என்னை ஏன் இங்கு நிற்பதாகவும், தமக்குத் தெரியாமல் இங்கு ஏன் இருந்தீர்களுமென விடுதலைப்புலிகள் விசாரணை செய்தனர்.
பின்னர் கராஜை மூடும்படி உத்தரவிட்டனர். ஆனால் அந்நிலையில் என்னுடன் உரையாடிய விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை.
விசாரணைகளுக்குப் பின்னர் மீண்டும் என்னை வீடு செல்ல அனுமதித்ததைத் தொடர்ந்து நான் வீட்டிற்குள் சென்றுவிட்டேன்.
இந்நிலையில், அன்று இரவு நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து ஆயுதங்கள் தாங்கிய புலி உறுப்பினர்கள் வருவதைக் கண்டேன்.
ஆயுதங்களுடன் வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்னை அழைத்து விசாரித்து விட்டு உடனடியாக வெளியேறுமாறு கேட்டனர்.
ஆனால் நான், அனைத்து பக்கங்களிலிருந்தும் வெடிச்சத்தங்கள் கேட்கின்ற நிலையில் எவ்வாறு போவதென அவர்களைக் கேட்டேன்.
அச்சமயத்தில் என்னைச் சுற்றிய பிரதேசத்தில் சுமார் 40 க்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்கள் நின்றிருந்த அதேவேளை, முதலில் நின்ற ஆயுதம் தரிக்காத உறுப்பினர்கள் இருவரும் நின்றிருந்தனர்.
அன்றிரவு நான் வீட்டினுள்ளேயே தங்கி தூங்கி விடியற்காலையில் எழுந்தபோதும் விடுதலைப்புலிகள் எனது வீட்டைச் சுற்றிய பிரதேசங்களில் நின்று கொண்டிருந்தனர்.
அன்றைய தினமும் நிலைமை அவ்வாறே இருந்தது. ஆனால் மறுநாள் காலை சனிக் கிழமை அதாவது 2006 ஆகஸ்ட் ஐந்தாம் திகதி காலையில் நான் நித்திரைவிட்டெழுந்தபோது எவரையும் வெளியில் காணவில்லை.
இதனால் நான் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். வீதியில் எவரையும் காணவில்லை.
தொடர்ந்து நான் மூதூர் நகரப் பொலிஸ் காவலரனுக்குச் சென்றேன். ஆனால் அங்கு எவரையும் காணவில்லை.
இதனால் மீண்டும் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சந்தைப் பக்கமாக இருந்து இரண்டு முஸ்லிம்கள் சைக்கிளில் வருவதைக் கண்டேன்.
மேலும், எனது குடும்பத்தினரைத்தேடி அங்கிருந்த இரு தேவாலயங்களுக்குச் சென்றேன். அங்கு அவர்கள் இருக்கவில்லை.
தொடர்ந்து அல்அரபுக் கல்லூரியிலுள்ள அகதிகள் முகாமிற்கு எனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடிச் சென்றேன்.
ஆனால், அங்கும் அவர்கள் இருக்கவில்லை. இதேவேளை, எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் இருந்தார். அவரிடம் எனது குடும்பத்தவர் பற்றி தெரியுமாவென வினவினேன்.
பின்னர் அவரிடம் தேனீர் பருகிவிட்டு சிறிது நேரத்தின் பின்னர் உணவையும் உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு நோக்கிச் சென்றேன்.
2006 ஆகஸ்ட் ஐந்தாம் திகதியன்று மதியம் 1.30 மணியளவில் நான் எனது கராஜில் நின்றிருந்த போது இராணுவமும் பொலிஸாரும் வந்து கொண்டிருந்தனர்.
இவர்களைக் கண்டவுடன் நான் பின்புறமாகச் சென்றுவிட்டேன்.
ஆனால், என்னை அழைத்த பொலிஸார் எனது அடையாள அட்டையைத் தருமாறு கேட்டனர். நான் அது தற்சமயம் என்னிடம் இல்லையெனக் கூறினேன்.
அங்கிருந்த ஒரு பொலிஸ் சார்ஜன்ட் இவர் எங்களுடைய ஆள், அவரை எம்முடன் அழைத்துவாருங்கள் எனத் தெரிவித்தார்.
அவர்கள் என்னைத் தம்முடன் வருமாறு அழைத்தனர். ஆனால், நான் கராஜிலேயே தங்கிவிட்டேன். மறுநாள் அகதி முகாமிற்கு வருமாறு கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.
மறுநாள் ஆறாம் திகதி காலை 8.30 மணியளவில் அல்கிலால் அகதி முகாமிற்குச் சென்றேன். அப்பொழுதுதான் அக்ஷன்பாம் ஊழியர்களின் படுகொலை தொடர்பாக மக்கள் பேசியதன் மூலம் அறிந்து கொண்டேன்.
அந்த அகதி முகாமிலும் எனது மனைவியையும் பிள்ளைகளையும் காணவில்லை. திரும்பவும் கராஜிற்கு வந்தேன்.
அன்றையதினம் முதல் வீட்டிலிருந்த உணவுப்பொருட்களை எடுத்து சமைத்து உண்டேன்.
இதனைத் தொடர்ந்து நான்கு நாட்களின் பின்னர் கந்தளாயிலிருந்து ஒரு சிலருடன் வான் ஒன்று வந்தது. அதில் எனது சகோதரரும் வந்திருந்ததுடன், எனது குடும்பம் கந்தளாயில் இருப்பதாகவும் கூறினார்.
அவர்களுடனேயே நானும் வானில் கந்தளாயை நோக்கிச் சென்று அங்கு எனது குடும்பத்தினரை சந்தித்தேன்.
எனது வீட்டைச் சுற்றிய பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நின்றிருந்தவேளை எனது கராஜில் பஸ் ஒன்றும் 3 வான்களும் லொறி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அவற்றின் கண்ணாடிகள் விடுதலைப் புலிகளால் அடித்து நொருக்கப்பட்டிருந்தன.
மூதூரில் அக்ஷன்பாம் அலுவலகம் இருந்தமை பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், அலுவலகத்துக்கு ஒருதடவையும் சென்றதில்லை.
எனது வீட்டிற்கும் அக்ஷன்பாம் அலுவலகத்திற்கும் இடையில் ஐநூறு மீற்றர் தூரம் வித்தியாசம் இருக்கும்.
2006 ஆகஸ்ட் ஐந்தாம் திகதி நான் அக்ஷன்பாம் அலுவலகம் அமைந்துள்ள வீதியால் சென்றிருக்கவில்லை.
மேலும், இவை தவிர வேறு விடயங்கள் அக்ஷன்பாம் அலுவலக ஊழியர்களின் படுகொலை தொடர்பாக தெரியாதென தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
யோ. நிமல்ராஜ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment