Saturday, June 21, 2008

வடக்கு - கிழக்கை தமிழரின் "பிராந்தியமாக" ஏற்றுக்கொள்வதாக இந்தியக்குழு தெரிவிப்பு

இணைந்த வடக்கு - கிழக்கு ஈழத்தமிழர்களின் "பிராந்தியம்" என்று தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள சிறப்பு இந்தியத் தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவில் இருந்து சென்றுள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.

பிற்பகல் 12:00 மணி முதல் சுமார் 45 நிமிட நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பு உறுப்பினர் சம்பந்தன், தமிழர்களுக்கு எதிராக வடக்கு - கிழக்கிலும் அதற்கு வெளியிலும் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் கடத்தல், ஆட்கொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

வன்னியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் குறித்தும் அங்கு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக விளக்கினார். அரசினால் அங்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை, மருந்துகள் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் குறிப்பிட்டார்.

பெரும் மோசடிகளுடன் நடைபெற்ற கிழக்குத் தேர்தல் பற்றி விரிவாக எடுத்துக்கூறிய சம்பந்தன், 18 ஆண்டுகளாக இணைந்திருந்த தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கை தற்போதைய அரச தலைவர் மகிந்த பிரித்துள்ளார் என்றும் இது தொடர்பாக வெளிவந்த நீதிமன்ற தீர்ப்புக்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இவை தொடர்பில் பதிலளித்த இந்திய தூதுக்குழுவினர், இணைந்த வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிராந்தியம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறினர்.

வடக்கில் தற்போது நடைபெறும் போர் குறித்து சம்பந்தன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தமது நாட்டில் இருந்து இன்னொரு அமைதிப்படை சிறிலங்காவுக்கு வராது என்று பதிலளித்துள்ளனர்.

No comments: