Sunday, June 8, 2008

பராக் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்கும் இடையே கடந்த 17 மாதங்களாக இடம்பெற்ற கடுமையான போட்டி இவ்வாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. அண்மைக் காலமாக உலகின் கவனத்தை ஈர்த்த சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் இந்த வேட்பாளர் நியமனப்போட்டி முக்கியமான ஒன்றாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
ஆரம்பத்தில் முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவது நிச்சயம் என்றே பொதுவில் நம்பப்பட்டது. பில் கிளின்டனுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர் என்று அவதானிகளினால் வர்ணிக்கப்படும் கறுப்பின செனட்டரான ஒபாமா, அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சரித்திரமுக்கியத்துவ பெருமையை தனதாக்கிக்கொள்வதற்கு ஹிலாரி கிளின்டன் கண்டுவந்த கனவை இறுதியில் சிதறடித்துவிட்டார்.நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அரசியல் கட்சியொன்றின் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு முதற் தடவையாக வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதன் மூலம் அமெரிக்காவில் சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. பராக் ஒபாமா பெற்றிருக்கும் வெற்றி உண்மையிலேயே அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இடை நடுவில் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வற்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை தன்னால் முடிந்தமட்டும் ஒபாமாவுக்கு சவாலாக விளங்கிய ஹிலாரி கிளின்டன் தனது தோல்வியை முழு மனதுடன் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட, தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்காக ஜனநாயகக் கட்சியினரை ஐக்கியப்படுத்தும் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதில் ஒபாமா கண்டிருக்கும் சரித்திர முக்கியத்துவ வெற்றி அவரின் யுகமொன்றின் ஆரம்பத்துக்கு கட்டியம் கூறி நிற்கிறது. ஒபாமா யுகத்துக்கு முன்னர் வெள்ளையர் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்புக் குறித்து பல கறுப்பினத் தலைவர்களினால் கனவு மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பதைக் காண அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. முன்னைய சந்தர்ப்பங்களிலே ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் நியமனப் போட்டிகளின் ஆரம்பக் கட்டங்களிலேயே கறுப்பினத்தவர்கள் பின்வாங்க வேண்டிய நிலையே காணப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு 1980 களில் குடியியல் உரிமைகள் இயக்கத் தலைவரான ஜெஸீ ஜாக்சன் இருதடவைகள் முயற்சிகளை மேற்கொண்டார். அவ்விரு தடவைகளிலும் ஆரம்பக் கட்டத்திலேயே அவர் போட்டியிலிருந்து விலக வேண்டியேற்றபட்டது. ஜெஸீ ஜாக்சனைவிட டக்ளஸ் வைல்டர் (1992), ஷெர்லி சிசோம் (1972) மற்றும் அல் ஷாப்ரன் (2004) ஆகிய கறுப்பினத் தலைவர்களும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். சிசோம் அத்தகைய முயற்சியை மேற்கொண்ட முதல் கறுப்பின பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுக் கட்சியின் நியமனத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்த கறுப்பினத்தவர்களும் இருந்தார்கள்.

ஆனால், போட்டியில் இறுதிவரை தளராது நின்று வெற்றிக் கம்பத்தில் ஏறியிருப்பவர் ஒபாமா மாத்திரமே. அவரது இந்த வெற்றியை அமெரிக்க அரசியலிலே இனம், நிறம் என்பவை இனிமேலும் சர்ச்சைக்குரிய ஒருவிவகாரமாக இருக்கப்போவதில்லை என்று அர்த்தப்படுத்தமுடியுமா? கறுப்பினத்தவர் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் கூடியதாக இருக்கின்ற நிலைவரம் 1950 களில் காணப்பட்ட இனஒதுக்கல் சர்ச்சைகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றத்தைப் பிரகாசமாகப் பிரதிபலிக்கிறது. இந்த முன்னேற்றம் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்ற சரித்திரப் பெருமையை ஒபாமா பெறக்கூடியளவுக்கு விரிந்து செல்லுமா ?

No comments: