Sunday, June 8, 2008

ஜோர்ஜ் சந்திரசேகரன் காலமானார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளரும் சிறந்த வானொலி நாடகத் தயாரிப்பாளருமான ஜோர்ஜ் சந்திரசேகரன் தனது 68 ஆவது வயதில் வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
ஒரு அறிவிப்பாளராக, செய்தி மொழி பெயர்ப்பாளராக, செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நாடகத் தயாரிப்பாளராக, நேர்முக வர்ணனையாளராக பல்வேறு பணிகளை வானொலியில் ஆற்றிய ஜோர்ஜ் சந்திரசேகரன்,பல இளம் அறிவிப்பாளர்களைப் பயிற்றுவித்து அவர்களுக்குக் குருவாக இருந்து ஒலிபரப்புத்துறையில் சிறந்து விளங்கச் செய்துள்ளார்.

நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களைத் தயாரித்து வழங்கியுள்ள ஜோர்ஜ் சந்திரசேகரன், வானொலி நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வானொலி நாடக விழாவையும் நடாத்தியுள்ளார். சிறந்த மேடை நாடக நடிகருமான அவர் ஏற்று நடித்த "கோவூர்' பாத்திரம் மிகவும் பிரபல்யமானது. அத்துடன் மிக நீண்ட நேரமாக அதாவது 35 நிமிடங்கள் இடைவிடாது தொடர்ச்சியாக செய்தி அறிக்கையை வாசித்த சாதனைக்குரியவராகவும் ஜோர்ஜ் சந்திரசேகரன் விளங்கினார். அன்னாரின் மறைவு ஒலிபரப்புத் துறைக்கும் வானொலி நாடகத் துறைக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் பூதவுடல் தற்போது கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் நடைபெறும்.

No comments: