பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் வேளையிலும் கூட மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பதன் அவசியத்தைப் பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் வத்திக்கானிற்கான இலங்கைத் தூதுவரைச் சந்தித்த வேளையிலேயே அவர் இதனைத் எடுத்துரைத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் சமாதானப் பேச்சுக்கான அவசியத்தையும் பாப்பரசர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தூதுவருடனான உரையில் பரிசுத்த பாப்பரசர் நீண்ட கால உள்நாட்டு யுத்தம் குறித்துக் கவனம் செலுத்தினார்.
இலங்கையின் சகல மத மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டுமென்ற தனது விருப்பத்தையும் அவர் அச்சமயம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் துரதிஷ்ட வசமாக வன்முறைகள் தொடர்வதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வெளிப்படையான நேர்மையான பேச்சுகளே, இலங்கையில் சமாதானச் சகவாழ்வை நீண்ட காலமாகப் பாதித்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் எப்போதும் நியாயப்படுத்த முடியாதவை. அவை எப்போதும் மனித குலத்திற்கு ஆபத்தானவை என இலங்கையின் தூதுவர் ரிக்கிரி பண்டார மடுவேகராவிடம் தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் இதேவேளை கண்மூடித்தனமான தாக்குதல்கள் எந்தக் குழுவின் நலனிற்கும் உதவுவதில்லை என்றும் சொன்னார்.
மாறாக, கண்மூடித்தனமான விளைவுகளை அவை உருவாக்கி உண்மைகளை மறைக்கும். பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை உருவாக்கி மக்களை ஏமாற்றத்திலும் துயரத்திலும் தள்ளும், வன்முறைகள் தொடரச்செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மனித உரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment