ஜூன் 05 - கந்தசாமி நினைவு தினம்: இலங்கைத் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த முதல் போராளி
- கார்த்திநேசன்
ஜூன் 05ம் திகதி, தியாகி கந்தசாமியின் 61வது நினைவு தினமாகும். யார் இந்த கந்தசாமி? அவர் அப்படி என்ன தியாகம் செய்தார்? துப்பாக்கி தூக்கிப் போரிட்டாரா? என இன்றைய தலைமுறையினர் கேட்கக்கூடும். இவரது முழுப்பெயர் வேலுப்பிள்ளை கந்தசாமி. வட்டுக்கோட்டை - மூளாய் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமணமாகாதவர். குடும்பத்தில் ஐந்து சகோதரிகளுக்கு ஓர் ஆண் சகோதரர். கொழும்பில் வேலைபார்த்த ஒரு அரசாங்க எழுதுவினைஞர். இலங்கையின் பிரபலமான அரச ஊழியர் தொழிற்சங்கமான, அரசாங்க லிகிதர் சேவைச் சங்கத்தின் (Government Clerical Service Union- GCSU) உறுப்பினர். இவரை 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 05ம் திகதி, கொழும்பு - தெமட்டகொட பகுதியில் வைத்து, அன்றைய காலகட்டத்தில் இலங்கையை ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் பொலிஸ்படை சுட்டுப் படுகொலை செய்தது. அதன்மூலம் அவர் இலங்கையின் வரலாற்றில் அழியாத இடம்பெற்ற ஒரு தியாகியானார். இதன் பின்னணியை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
1947ம் ஆண்டு, இலங்கையை அரசாட்சி புரிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கெதிராக, ஒரு மாபெரும் பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது. அதன்காரணமாக நாடு ஸ்தம்பித நிலையை அடைந்தது. செய்வதறியாது திகைத்த இலங்கையிலிருந்த காலனித்துவ ஆட்சி, இலண்டன் ஆட்சியாளர்களிடம் ஆலோசனை கேட்டது. கடுமையான நடவடிக்கை எடுத்து, வேலைநிறுத்தத்தை எப்படியும் முறியடியுங்கள் என இலண்டன் தலைமைப்பீடம் இலங்கையிலிருந்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியது. அதற்கிணங்க அன்றைய அரச ஊழியர் தொழிற்சங்கத்தின் (Government Workers Trade Union Federation) பேச்சாளரான காலஞசென்ற டாக்டர் என.எம.;பெரேராவை (லங்கா சமசமாஜக் கட்சியின் முன்னாள் தலைவர்) அரசாங்கம் கைதுசெய்தது. ‘அவரை விடுதலை செய்யாவிடின் வேலைக்குத் திரும்பமாட்டோம்’என தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறிவிட்டனர். வேலைநிறுத்தத்தை ஆதரித்து கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதன்பின்னர் தொழிலாளர்கள் கொலன்னாவையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் தெமட்டக்கொட சந்தியை அண்மித்தபோது அங்கு தயாராக நின்ற பிரிட்டிஷ் பொலிஸ்படை அவர்கள்மீது துப்பாக்கி சூடு நடாத்தியது. அதில் கந்தசாமி சூடுபட்டு மரணமானார். இலங்கைத் தொழிலாளி வர்க்கத்திற்காக தன் இன்னுயிரை ஈந்த மாபெரும் தியாகியானார். கந்தசாமியின் பூதவுடல் தமிழ் - சிங்கள - முஸ்லீம் தொழலாளர்களால் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்பட்டு, தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து வருடாவருடம் ஜூன் 05ம் திகதி தியாகி கந்தசாமி தினமாக, இலங்கைத் தொழிலாளி வர்க்கத்தால் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
ஆனால் இனவாத சக்திகளால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அவரது பெயர் இன்றைய தலைமுறையினருக்கு சொல்லப்படாமலே மறைக்கப்பட்டு வருகின்றது. அதனால் இலங்கையின் இன்றைய தலைமுறைத் தொழிலாளர்களுக்கு கந்தசாமி யார் என்று தெரியாத ஒருநிலை தோன்றியுள்ளது. அதுமட்டுமின்றி, தெமட்டக்கொடவில் கந்தசாமி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில், அவருக்கு வைக்கப்பட்டிருந்த நினைவு ஸ்தூபியும் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தூரம் இனவாதத்தின் கோரத்தாண்டவம் தலைவிரித்தாடுகின்றது. தியாகி கந்தசாமி தினத்தை, மீண்டும் வருடாவருடம் நினைவுகூருவது இலங்கைத் தொழிலாளி வர்க்கத்தின் தலையாய கடமையாகும். அதுமட்டுமல்ல, இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்பு தொழிற்சங்க இயக்கங்களுடன் நெருக்கமாக இருந்தவர் என்றவகையில், அவர் மூலமாக கந்தசாமியின் நினைவு ஸ்தூபியை முன்பு இருந்த இடத்தில் நிறுவுவதற்கும், வர்க்க உணர்வுள்ள தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாகவே தமிழ் - சிங்கள இனவாதிகளால், தொழிலாளி வர்க்கம் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள இனமுரண்பாட்டை இல்லாதொழித்து, மீண்டும் வர்க்கரீதியான ஜக்கியத்தை உருவாக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment