Sunday, June 8, 2008

முதல்வரான பிள்ளையன்! முன்னேறும் அரசியல் சூழ்நிலை!

"இனப் பிரச்சினை'யில் இன்னும் சிக்கித் தவிக்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், சட்டசபைத் தேர்தல் நடந்து சில வாரங்கள் ஆகிவிட்டன.

தேர்தலைத் தொடர்ந்து, கிழக்கு பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் போராளிகள் குழுவில் அங்கம் வகித்த "பிள்ளையன்' என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவருக்கு, மத்தியில் ஆளும் "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி' ஆதரவு அளித்து, தேர்தலையும் சேர்ந்தே சந்தித்தது. அது போன்றே மாகாணத்தில் முக்கியமான மற்றொரு சமுதாயமான முஸ்லீம்களின் ஆதரவும் ஒரு சில கட்சிகள் மூலம் முதலில் இருந்தே கிடைத்து வந்துள்ளது.

பிள்ளையன் தலைமை தாங்கி வரும் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற "கருணா அணி' இருக்கும் அரசியல் கட்சி.

கருணா அணி' துவங்கிய பின்னர், ஆயுதப் போராட்டம் மற்றும் தீவிரவாத முறைகளுக்கு விடுதலை கொடுத்து, அரசியல் ரீதியாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறது.

அணித் தலைவரான, விடுதலைப்புலி இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய முன்னாள் தளபதி கருணா, இங்கிலாந்து நாட்டில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் காலகட்டத்தில் அவரது உதவித் தளபதியான பிள்ளையன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து விடுதலைப் புலி இயக்கத்தினர் வெளியேறி அந்தப் பகுதி இலங்கை ராணுவத்தின் பிடியில் வந்த பின்னர் நடந்த தேர்தலிலேயே, பிள்ளையன் முதல் அமைச்சர் ஆனார்.

இதுவரை, பிள்ளையன் என்று அவரது செல்லப் பெயரை சாதாரணமாக கொச்சையாகப் பயன்படுத்தி வந்த இலங்கைப் பத்திரிகைகள், அவரை, "சந்திரகாந்தன்' என்று மரியாதையாக அழைக்கத் துவங்கியுள்ளன. இதுவே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள முதல் மரியாதை.

என்றாலும், பிள்ளையன் முதல்வரான தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இலங்கைப் பத்திரிகைகளும், வெளிநாட்டுத் தூதரகங்களும், சேவை நிறுவனங்களும்கூட இந்தக் குற்றச்சாட்டை ஆதரித்து அறிக்கைவிட்டன.

குறிப்பாக பிள்ளையன் தலைமையிலான கட்சியினர், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வாக்காளர்களை மிரட்டி வந்ததாகத் தகவல்கள் வெளியாயின. இலங்கை அரசும், அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேயும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். என்றாலும் நம்புவார்தான் இல்லை.

ஆனால், பிள்ளையன் முதல்வர் ஆன பிறகு நிலைமை கிட்டத்தட்ட தலைகீழாக மாறியுள்ளது என்றே சொல்லவேண்டும். அவர் பதவியேற்ற சூட்டோடு சூடாகக் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் சில முஸ்லீம் இனத்தவர் கடத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த வன்முறைக்கும், கலவரத்துக்கும் பிள்ளையன் கட்சியினரே காரணம் என்றும் கூறப்பட்டது. அதில் உண்மையும் இருந்தது.

பிள்ளையன் குழுவினரின் கைவரிசைகள் எல்லாம், தேர்தல் கால அச்சுறுத்தல்கள் என்ற தரத்திலேயே இருந்தன. இதனால், தேர்தல் சுதந்திரமாக நடைபெறவில்லை என்பதும் உண்மை. என்றாலும், "தேர்தல் வன்முறை' என்று கூறப்படும் அளவிற்குச் செயல்பட்டது என்னவோ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர்தான்.

இலங்கையில், மத்தியில் ஆளும் கூட்டணியின் பொருளாளர் மற்றும் பாராளுமன்றத் தலைமை கொறடாவாக இருந்தவர் ஜெயராஜ் ஃபெர்னாண்டோ பிள்ளை என்பவர். அமைச்சர்; தமிழர். அதிலும், தமிழர்களே அதிகம் இல்லாத மேற்கு மாகாணத்தின் ஒரு தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஒரே தமிழர்.

அவரைத்தான், கிழக்கு மாகாணத் தேர்தலில் ஆளும் கூட்டணியின் தலைமைப் பொறுப்பாளராக, அதிபர் ராஜபக்ஷே நியமித்து இருந்தார். தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன்னரே அவரை, எல்.டி.டி.இ.யினர் "மனித குண்டு' மூலம் கொன்றுவிட்டனர்.

அது போன்றே தேர்தலுக்கு முந்தைய தினமும், தேர்தல் தினத்தன்றும், கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த அம்பாறை பகுதியில் விடுதலைப் புலிகள், குண்டு வெடிப்புச் சம்பவங்களை அரங்கேற்றினர். இவை அனைத்துமே, "தேர்தல் வன்முறையில்' அடங்கும்.

"நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது' என்பார்கள். அந்த வகையில், பதவியேற்றதிலிருந்து, பிள்ளையன் எனும் சந்திரகாந்தன் தன்னை ஒரு சிறந்த முதல்வராகக் காட்டிக் கொள்ளவே முயற்சி செய்து வருகிறார்.

தமிழர்-முஸ்லீம்கள் இடையேயான இனக்கலவரத்தை அடக்கும் வகையில் முஸ்லீம் இனத்தலைவர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளார். அது போன்றே கடத்தப்பட்ட இரண்டு முஸ்லீம்களை விடுவிக்க வழி செய்து, அதற்குக் காரணமான தனது கட்சித் தொண்டர் ஒருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் 1990ம் ஆண்டு தீயிட்டுக் கொளுத்திய காத்தான்குடியில் உள்ள மசூதிக்கும் சென்று மக்களிடம் பேசியுள்ளார். அந்தச் சம்பவத்தில், 103 முஸ்லீம்கள் உயிரிழந்தனர்.

அது போன்றே, தனது மாகாணத்தில் வசிக்கும் சிங்கள-பெüத்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெறவும் முயற்சி செய்துள்ளார். பதவி ஏற்ற கையோடு, சிங்கள-பெüத்தர்களின் மிக முக்கியமான "தலத மாலிகவே' கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கண்டியில் உள்ள இந்தக் கோயிலையும் விடுதலைப்புலிகள் முன்பு ஒரு முறை தாக்கி உள்ளனர்.
தேர்தல் முடிந்து, கிழக்கு மாகாணத்தில் புதிய அரசு அமைந்த நிலையில், அங்கு வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்று அதிபர் ராஜபக்ஷே அறிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் பங்களிப்பு இல்லாமலேயே தமிழர் பகுதி வளம் பெற முடியும் என்று காட்டுவதிலும் அவர் முனைப்பாக உள்ளார்.

கடும் விலைவாசி ஏற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைச் சந்தித்து வரும் வேளையில், கிழக்கு மாகாண வளர்ச்சிப் பணிகளுக்கான முதலீடுகளுக்கு அரசு, வெளிநாட்டு உதவியையும் அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பையுமே எதிர்நோக்கி உள்ளது.

நாடளாவிய வகையில் பெருகி வரும் மக்கள் உரிமை மீறல்கள் காரணமாக, மேலை நாடுகள் இலங்கை அரசை சந்தேகக் கண்களுடன் பார்க்கின்றன. அன்னிய முதலீட்டாளர்களும் இப்படியே சந்தேகிக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரைப் பொறுத்தவரை, ""நாட்டில் முழு அமைதி திரும்பும் வரை, வளர்ச்சிப் பணிகள் வெற்றி பெறாது, பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் வரையில் முழு அமைதி திரும்பாது'' என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

மேலும் மாகாண சபைகள் ஏற்படுத்தி அதிகாரம் வழங்கிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டதிருத்தம் தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதையும், எல்.டி.டி.இ.யின் அரசியல் குழுத் தலைவர் பால்ராஜ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க வித்திடும் வகையில் நார்வே நாட்டின் தூதுவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளி நொச்சி பகுதிக்குச் செல்ல இலங்கை அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதிபர் ராஜபக்ஷேயைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலி இயக்கத்துடன் நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறார். ஆனால் அதற்கு முன் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அறிவித்து வருகிறார்.
பிள்ளையன் இயக்கத்தினர் ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டே அரசியல் செய்து வரும் வேளையில், அதே முறையை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கும் அந்தச் சலுகையை நீடிக்கலாம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஆயுதம் ஏந்த வேண்டியுள்ளது என்று பிள்ளையன் இயக்கத்தினர் கூறிவருகின்றனர். இதே முறையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் பேச்சுவார்த்தை மூலம் தேசிய நீரோட்டத்தில் கலக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

அதற்கு குறுக்கே நிற்பது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான "நம்பகத்தன்மை இல்லாமை'தான்! ஆகவே, "நாங்கள் நம்பத் தகுந்தவர்கள்' என்ற சூழ்நிலையை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

என். சத்தியமூர்த்தி
-தமிழன் எக்ஸ்பிரஸ்

No comments: