Monday, June 2, 2008

சீன ஆயுதங்களை தலிபான் இயக்கத்தின் ஊடாக புலிகள் பெறுகின்றனர்

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது பிரதிநிதிகளை தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி யுத்த ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான இரகசியத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலேயே பிரபாகரனின் புலிகள் இயக்கத்தினருக்குச் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட நவீன யுத்த ஆயுதங்கள், உபகரணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் புலிகள் இயக்கத்தினர் அரச படையினருக்கு எதிராகத் தொடுத்துவரும் தாக்குதல்களில் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரத்துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், குறிப்பாக புலிகள் இயக்கத்தினர் தற்போது பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் 5.56 மில்லிமீற்றர் தன்னியக்க இயந்திரத் துப்பாக்கிகள், கியூ. பி.சி. 95 நவீன றைபிள்கள் மற்றும் மோட்டார் பீரங்கிகள் ஆகியன சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவையே எனப் பிரபல சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு புலிகள் இயக்கத்தினருக்குச் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவையான நவீன ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்பது பற்றியும் சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்த வகையில் லண்டனிலிருந்து வெளியாகும் சர்வதேச பாதுகாப்புத்துறை சார்ந்த ""ஜேன் டிபென்ஸ் றிப்போட்' சஞ்சிகையின் மே மாத வெளியீட்டில் மேற்படி புலிகள் பெற்றுள்ள சீன நவீன ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கேற்ப புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மேற்படி சீன ஆயுதங்களை ஆப்கானிஸ்தானில் செயற்படும் தலிபான் இயக்கத்திடமிருந்தே பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலிபான் இயக்கத்துக்கே இவ்வாறு சீன உற்பத்தி நவீன ஆயுதங்கள் பெருந்தொகையில் சீனத் தரப்பிலிருந்து கிடைத்துவருவதாகவும் எனவே தலிபான் இயக்கத்தினர் மூலமாகவே புலிகள் இயக்கத்தினர் குறிப்பிட்ட சீன நவீன ஆயுதங்களைப் பெற்றுவருவதாகவும் மேலும் மேற்படி பாதுகாப்புச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவ்வாறான நவீன ஆயுதங்களைச் சீனா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுக்கும் வழங்கிவருவதாகவும் இந்நிலையில் புலிகள் இயக்கத்தினர் தற்போது பயன்படுத்திவரும் ஏவுகணைகளைச் செலுத்தும் மோட்டார் உபகரணங்கள் மற்றும் சக்திவாய்ந்த பீரங்கிகள் என்பனவற்றை மேற்படி தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்தே பிரபாகரன் இரகசியமான முறையில் பெற்றுள்ளார் எனவும் மேலும் குறித்த ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் புலிகள் இயக்கத்தினர் சீன உற்பத்திகளாகிய நவீன ஆயுதங்கள், யுத்த உபகரணங்களைப் பெற்று வருவதற்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு எவையும் இல்லை எனவும் குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இவ்வாறு சீனாவிடமிருந்து ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கமும், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளும் மேற்படி நவீன ஆயுதங்கள் யுத்த உபகரணங்களைப் பெற்றுள்ள நிலையில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சீனாவுக்கு ""கொக்கு' காட்டிவிட்டு மேற்படி தலிபான் இயக்கத்தினர் மற்றும் தாய்லாந்து, கம்போடியா ஆயுத வர்த்தகர்கள் மூலமாக சீனாவின் ஆயுதங்களை நெடுங்காலமாகப் பெற்று வந்துள்ளார்.

லங்காதீப வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி

No comments: