Monday, June 2, 2008

4 பெண் போராளிகள் கடற்படையினரிடம் சரண்

வன்னிப் பிரதேசத்தில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் உயர்பாதுகாப்பிலுள்ள முக்கிய பகுதியாகிய மல்லாவியிலுள்ள புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து நான்கு பெண்களும், ஒரு ஆணுமாக ஐந்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் தப்பியோடியுள்ளதாகவும் இவ்வாறு தப்பியவர்கள் தொடர்ந்தும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் கண்காணிப்புக்குள் சிக்காது காட்டுப் பகுதிகள் ஊடாக மன்னார் பள்ளிமுனைவரை தப்பிவந்து அங்குள்ள கடற்படையினரின் காவலரணில் சரணடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த 27 ஆம் திகதி நடந்துள்ளதாகக் கடற்படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு கடற்படையினரிடம் சரணடைந்துள்ள 4 யுவதிகளும் , இளைஞரும் படையினருக்குத் தெரிவித்திருக்கும் தகவல்களில் அவர்கள் அண்மையில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளால் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டு மல்லாவிப் பிரதேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தொடர்ந்து அங்குள்ள முகாம் ஒன்றுக்குக் கூட்டிச்சென்று யுத்தப் பயிற்சிக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மல்லாவிப் பிரதேசம் சார்ந்த கிராமப்பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்களாகும். எவ்வாறாயினும் உயர்பாதுகாப்பிலிருந்த குறித்த மல்லாவி முகாமிலிருந்து தப்பிச் செல்லத் தருணம் பார்த்துக் காத்திருந்த அந்த யுவதிகளும், இளைஞரும் அங்கு காவலில் இருந்த புலிகள் இயக்கத்தினரின் கண்களில் படாமல் உயிரைப் பணயம் வைத்து இரகசியமாகத் தப்பிவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் படையினர் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லங்காதீப:29.05.2008

No comments: