Wednesday, June 4, 2008

கனடிய தமிழ் வானலை ஒலிபரப்பு நிறுவனங்களிடையில் விரிசல்

”கனடிய தமிழ் வானொலி - CTR, கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன் 2801B எக்ளின்ரன் அவெனியு என்ற முகவரியில் கலாதரனின் தலமைக்கு கீழ் ஆரம்பிக்கப்பட்டது. பல வானொலிக் கலஞர்களை உருவாக்கிய பெருமை இந்த வானொலிக்கும் உண்டு. இந்த வானொலியின் பங்குதாரர்கள் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டு தான் இருந்தார்கள். இந்த FM 2ம் தர அலவரிசை வானொலிகள் என்று அழைக்கப்படும். சாதாரண வானொலிகளில் கேட்க முடியாது. பிரத்தியேகமான வானொலிப் பெட்டி தேவை. இப்படியான வானொலி சேவைகள் மாத்திரமே இருந்தது. 2003 இல் சாதரண FM அலைவரிசை எடுப்பதற்கு போட்டி போட்ட போது கனடிய தமிழ் வானொலியின் உதவியுடன் நேயர்களின் கையெழுத்து வேட்டையில் கிடைத்த பரிசு தான் “கனடிய பல்கலாச்சார வானொலி”. ஆரம்பத்தில் சகோதர வானொலி என்று சொல்லப்பட்டாலும் இடை இடையே முறுகல் நிலை தோன்றி இருக்கின்றது. ஆரம்பத்தில் வருவாய் எடுப்பதில் சிரமப்பட்ட கனடிய தமிழ் வானொலிக்கு கை கொடுப்பார் யாருமில்லை.


கனடிய பல்கலாச்சார வானொலி - CMR,

அனேகமான கலைஞர்கள் கனடிய தமிழ் வானொலியில் இருந்து தான் இந்த வானொலியில் சேர்ந்து கொண்டார்கள். இது ஒரு பல்கலாச்சார வானொலி என்பதால் மற்ற மொழி இனத்தவருக்கு வானலை நேரத்தை விற்று நல்ல பணம் சம்பாதிக்கும் வானொலியாக மாற்ற‌ம் கொண்டது. இந்த வானொலி நிர்வாகத்திற்கு கனடிய தமிழ் வானொலியில் ஒரு பெரிய பங்கு உள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலி தமிழர் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் அமைந்திருக்கின்றது.

கடந்த மே மாதம் 11ம் திகதியில் இருந்து கனடிய தமிழ் வானொலி(CTR) 306, ரெக்ஷ்டேல் புலவாட் பகுதிக்கு மாற்றம் பெற்றதாக அறிந்தேன். தகவலை அறிய CTR ஊழியர்களை தொடர்பு கொண்ட போது அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. வானொலியின் இயக்குனருக்கோ, ஊழியர்க்கோ தெரியாமல் பல்கலாச்சார வானொலி நிர்வாகத்தை சேர்ந்த (CTRஐ நிர்வாகம் செய்பவர்கள்) அடாவடித்தனமாக (சில கதவுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு) வானொலி நிலையத்தில் உள்ள எல்லா தொழில் நுட்ப உபகரணாங்களை ஏற்றி சென்று விட்டார்கள். அத்துடன் நின்று விடாமல் வானொலி நிலையத்தின் முன் கதவை பூட்டை மாற்றி விட்டு வானொலி நிலையம் இடம் மாற்றப்பட்டதாக இந்த அறிவிப்பு வாசலில் போடப்பட்டிருந்தது.

இயக்குனரும், ஊழியர்களும் மிகவும் கோபமடைந்திருந்தனர். பூட்டை உடைத்து கொண்டு உள் சென்று நிலைமையை பார்த்த போது தான் என்ன நடந்தது என்று தெரிந்தது. இந்த இடம் CTR இயக்குனரின் பேரில் வாடகைக்கு இருப்பதால் அவரின் அனுமதி இல்லாமல் உள்ளே சென்று நடந்த விடயம் ஒரு சாதாரண மனிதனையும் கேள்வி கேட்க வைக்கும்.

1. இந்த நிர்வாகத்தினர் தங்கள் பக்கம் நேர்மை இருந்தால் ஏன் இந்த அடாவடித்தனம் செய்ய வேண்டும்?

2. உங்கள் பொறுப்பில் நிர்வாகம் இருந்தால் யாரையும் நீக்கலாம், அதற்கு ஒரு உரிய முறை உண்டு. பல பில்லியனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களே தங்கள் பங்குதாரர்களுக்கு தங்கள் நடவடிக்கையை சொல்ல வேண்டும். CTR இயக்குனர் பங்குதாரர் ஆக இருந்தும் அவருக்கும் சொல்லாமல் நடந்து கொண்டது ஏன்?

3. தங்கள் பக்கம் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இருப்பதால் எளிதாக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நம்பினார்களா?

மக்களின் கை எழுத்து சேர்க்கையால் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனத்தின் முகாமைத்துவம், மக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். கடந்து வந்த பாதைகளை மறக்கக் கூடாது. நிர்வாகம் வர்த்தகர்களையும் நேயர்களையும் நம்பி வியாபாரம் நடத்துபவர்கள் மக்களை மதிக்காவிட்டால் மக்களும் தங்கள் பலத்தை காட்ட வேண்டும். தேவைகளுக்கு மாத்திரம் பொது சேவை நிறுவனங்கள் என்று அடையாளம் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது.

சில ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை தேசியத்தை நேசிப்பதாக சொல்லிக் கொண்ட சிலர் அவரை புறம் தள்ளினார்கள். பின்னாளில் இதற்காக வருந்தினார்கள். இது போல் மக்களின் மனங்களை வென்ற கனடிய தமிழ் வானொலி இயக்குனரையும், ஊழியர்களையும் கருத்தில் கொள்ளாமல் விட்டுள்ள நிர்வாகம் அதற்கான ஒரு விலையை கொடுக்க வேண்டிய காலம் வரும். ”


இது தொடர்பாக சிஎம்ஆர் வானொலி நிர்வாகத்திடம் தேசம்நெற் தொடர்பு கொண்ட போது, சிரிஆர் வானொலியின் மூன்றில் இரண்டு பங்குதாரர்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே, சிரிஆர் வானொலியின் உபகரணங்கள் சிஎம்ஆர் நிறுவனம் இயங்கும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதாக சிஎம்ஆர் நிறுவனத்தின் முகாமையாளர் கம்பல் தெரிவித்தார். சிரிஆர் வானொலி தனித்து ஒரு இடத்தில் இயங்குவதால் ஏற்படும் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து வானொலியை இடைநிறுத்தாமல் வெற்றிகரமாக இயக்குவதற்கு இந்நடவடிக்கை அவசியமாக இருந்ததாகத் தெரிவித்த சிஎம்ஆர் முகாமையாளர், இந்நடவடிக்கையை உடனடியாகச் செய்ய வேண்டி இருந்ததாலும் சிரிஆர் வானொலியின் நிர்வகத்து வந்த கலாதரன் பெரும்பான்மையான பங்குதாரர்களின் முடிவை ஏற்க மறுத்ததாலும் மே 12ல் இந்த திடீர் நடவடிக்கையை எடுக்கும் நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் சிரிஆர் வானொலி ஒலிபரப்பில் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் தாங்கள் இதனைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சிரிஆர் வானொலிக்கும் அதில் பணியாற்றியவர்களுக்கும் முற்கூட்டியே அறிவிக்காமல் நீங்கள் மேற்கொண்டது பலாத்காரமான நடவடிக்கை அல்லவா எனக் கேட்ட போது, ஒரு நிறுவனம் தன்னுடைய உபகரணங்களையும் பொருட்களையும் தன்னுடைய இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்மாற்றுவது எப்படி பலாத்காரமாகும் எனக் கேள்வி எழுப்பிய சிஎம்ஆர் முகாமையாளர், அது தவறான நடவடிக்கையாக இருந்திருந்தால் கலாதரன் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார். கலாதரனும் அங்கு பணியாற்றிய ஏனையவர்களும் தொடர்ந்தும் சிரிஆர் வானொலியில் தங்கள் பணியைத் தொடர முடியும் என்று குறிப்பிட்ட சிஎம்ஆர் நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்தார். ஏற்கனவெ சிலர் புதிய கட்டிடத்திற்கு பணிக்கு வந்துள்ளனர் என்று தெரிவித்த அவர் விசுவாசம் காரணமாக சிலர் வரவில்லையானால் தாங்கள் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். இதுவரை சிரிஆர் வானொலியின் தொலைபேசி இலக்கங்கள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படவில்லை என்று தெரிவித்த சிஎம்ஆர் முகாமையாளர் அவை விரைவில் கிடைத்ததும் எவ்வித மாற்றமும் இல்லாமல் சிஎம்ஆர் ஒலிபரப்பு தொடரும் என்று தெரிவித்தார்.

ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நிறுவனம் இயங்க முடியாது பெரும்பான்மையனவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நிறுவனம் வளர்ச்சியை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாது என்றும் சிஎம்ஆர் முகாமையாளர் கம்பல் தேசம்நெற்றிற்குத் தெரிவித்தார்.

முகாமைத்துவ குழுவினால் சிரிஆர் வானொலி அலுவலகத்தை இடமாற்றவது பற்றி தங்களுக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்த கலாதரன் உலகத் தமிழர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிரிஆர் வானொலி தொடர்ந்தும் அதே கட்டிடத்தில் இயங்கலாம் என்ற உறுதியை அளித்திருந்ததாகக் கூறி, சிஎம்ஆர் முகாமையாளர் கம்பலின் கூற்றை மறுத்தார். பல ஆண்டுகளாக நாங்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக இயக்கிய வானொலியை அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கே அறிவிக்காமல் அனைவரையும் அவர்கள் தூக்கியெறிந்து செயற்பட்டதாக கலாதரன் தனது வேதனையை வெளியிட்டார். இவர்களது செயலுக்கும் இலங்கை இராணுவத்தின் அடாவடித்தனத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தங்கள் வருமானத்தையும் துச்சமாக மதித்து என்னுடன் பணியாற்றிய அறிவிப்பாளர்கள் எதற்காக அவர்களின் புதிய இடத்திற்குச் செல்ல வில்லை என்றும் கலாதரன் கேள்வி எழுப்பினார்.

என்ன நோக்கத்திற்காக முகாமைத்துவம் இவ்வாறு ஒரு முடிவை எடுத்தது எனக் கேட்ட போது, தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் மிகவும் வெற்றிகரமாக இயங்கிய வானொலியை, என்னை வெளியேற்ற வேண்டும் என்ற ஈகோவினாலேயே அந்த நிர்வாகம் இவ்வாறு செய்துள்ளது என்றார் கலாதரன். அவர் தொடர்ந்தும் கூறுகையில, அவர்கள் என்னை வெளியேற்றுவதாக வீழ்த்துவதாக நினைத்து அந்த வானொலிக்கு தங்களைக் கொடுத்து பணியாற்றிய அறிவிப்பாளர்களின் உள்ளத்தையும் மிதித்துள்ளார்கள் என்றார்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை என தேசம்நெற்றிற்குத் தெரிவித்த கலாதரன் அவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு உபகரணங்களை கொண்டு வந்து வானொலியை இயக்கினாலே அல்லாமல் தான் புதிய இடத்திற்குச் சென்று செயற்பட மாட்டேன் என உறுதியாகத் தெரிவித்தார்.

தேசம் இணையம்

No comments: