Sunday, June 15, 2008

படையினரை ஆசிர்வதிக்க பௌத்த மதகுருக்கள் யாழ். விஜயம்

பௌத்த மதகுருக்கள் அடங்கிய குழுவொன்று வட பகுதிக்கு விஜயம் செய்து அங்கு புலிகளுக்கெதிராகப் போராடி வரும் இராணுவ வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது பற்றி மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஜனாதிபதியின் ஆலோசகர் பெங்கமுவ நாலக தேரோவின் தலைமையில் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்த பௌத்த மதகுருமார் குழுவினர் 3 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்து படையினருக்கு ஆசி வழங்கியதோடு சமயக் கிரியைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதிவணக்கத்துக்குரிய மகுரே பியனந்த நாயக்க தேரோ மற்றும் வல்பொல சத்தானந்த தேரோ ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சமய நடவடிக்கைகளின்போது ஒரு இலட்சம் 'ஜயபிரித்" உச்சரிக்கப்பட்ட 10 ஆயிரம் தங்க முலாம் பூசிய தாயத்துக்கள் படையினருக்கு அணிவிக்கப்பட்டன.

படையினருக்கு ஆசி வேண்டி 100 நாட்களுக்குத் தொடர்ந்து 'ஜயபிரித்" ஓதும் நிகழ்வு கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி மஹர, நளிகமவிலுள்ள சைலசன்னரம புராதன பௌத்த ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த மதகுருமார் குழுவினர் வன்னி யுத்த களத்துக்கும் விரைவில் விஜயம் செய்யவுள்ளனர் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: