Monday, June 2, 2008

யார் இந்த குஜ்ஜார்கள்?


இந்தியாவையே கலக்கி எடுத்து வரும் குஜ்ஜார்கள், இந்திய பூர்வீக குடிகள் அல்ல என்ற தகவல் நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது. அவர்களின் பூர்வீகம் ரஷ்யாவின் செச்னியா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசான ஜார்ஜியாவிலிருந்து தொடங்குகிறது.

ராஜஸ்தானில் தொடங்கி இன்று டெல்லி வரை வியாபித்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் குஜ்ஜார் சமுதாயத்தினர். தாழத்தப்பட்ட சமூகத்தினர் என்ற அந்தஸ்தை தங்களுக்குத் தர வேண்டும் என்பதே குஜ்ஜார்களின் ஒரே கோரிக்கை.

குஜ்ஜார்களின் போராட்டம் இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம், அவர்களின் ஒற்றுமை, விடாப்பிடியான போராட்டம்தான்.

சரி, யார் இந்த குஜ்ஜார்கள்?

குஜ்ஜார்கள் யார் என்பதை அறிய 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் போக வேண்டும் - ராஜஸ்தானுக்கு அல்ல, செச்னியாவுக்கு.

ரஷ்யாவின் குட்டிப் பிரதேசம்தான் செச்னியா. இங்குதான் குஜ்ஜார்களின் பூர்வீகம் புதைந்து கிடக்கிறது. இங்கிருந்தும், அருகாமையில் உள்ள ஜார்ஜியாவிலிருந்தும் குஜ்ஜார்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்கடுக்காக கிளம்பி பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

குர்ஜார், குர்ஜாரா, குஜார், கூஜார் என பல்வேறு பெயர்களில் குஜ்ஜார்கள் அழைக்கப்படுகின்றனர். ஹூனர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த காலகட்டமான நான்கு மற்றும் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் குஜ்ஜார்களும் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.

இவர்களின் ஆதி பூர்வீகம், கஸார் பழங்குடியினம் என்ற கருத்தும் உள்ளது. இதன் அடிப்படையில்தான் தங்களை பழங்குடியினர் என்று கூறுகின்றனர் குஜ்ஜார்கள்.

ஜார்ஜியாவுக்கு அக்காலத்தில் குஜாரிஸ்தான் என்ற பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. குஜ்ஜார்கள் நிறைந்திருந்த காரணத்தால்தான் அந்தப் பெயராம்.

சில வரலாற்று ஆவணங்களின்படி, குஜ்ஜார்கள் செளராஷ்டிரப் பகுதியில் பெரும் மன்னர்களாகவும், நிலக்கிழார்களாகவும் இருந்துள்ளனர். பின்னர் வட இந்தியாவுக்கு அவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்த குஜ்ஜார்கள், பின்னர் ஷத்திரிய வர்ணா என்ற ஜாதி அடையாளத்திற்குள் கரைந்து போயுள்ளனர். குஜ்ஜார்களில் ஒரு பிரிவினர் தங்களை பிராமணர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தின் மீத முஹம்மதியர்கள் படையெடுத்து வந்தபோது, குஜ்ஜார் இந்துக்கள் பலர் முஸ்லீம்களாக மாறியுள்ளனர்.

இப்போதுள்ள குஜ்ஜார்கள், இந்தோ- ஆரிய காலத்திற்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட திருமண பந்தத்தால் ஏற்பட்ட கலப்புறவில் உருவான வம்சாவளியினர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

18ம் நூற்றாண்டில், குஜ்ஜார்கள் குறு நில மன்னர்களாக இருந்துள்ளனர். பலர் ஜமீன்தாரர்ளாகவும் இருந்துள்ளனர். மீரட் மாவட்டத்தில் உள்ள பர்லசாட்கர் என்ற இடத்தில் உள்ள கோட்டையை, குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த ராஜா நயன் சிங் என்பவர் கட்டியதாக ஆவணங்கள் உள்ளன.

குஜ்ஜார்களின் வரலாறு பல அரிய தகவல்களைக் கொண்ட பெரும் வரலாற்று சமாச்சாரம். ஆனால் இன்றோ தங்களது அடையாளத்திற்காக குஜ்ஜார்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை காலத்தின் கோலம் என்றுதான் கூற வேண்டும்.

No comments: