
தசாவதாரம் படத்துக்காக எவ்வளவோ உதவிகள் செய்த எனக்கு ஒரு சிறு மரியாதையையோ, நன்றியையோ கூட படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் தெரிவிக்கவில்லையே என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.
இந்தப் படத்தில் நெப்போலியன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந் நிலையில், ரவிச்சந்திரன் மீதும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மீதும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் நெப்போலியன்.
அவர் கூறியதிலிருந்து...
"தசாவதாரம் படத்தில் நான் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதைத் தவிர வேறு பல உதவிகளையும் இந்தப் படம் தடையின்றி உருவாகும் வகையில் செய்து கொடுத்திருக்கிறேன். அண்ணா அறிவாலயத்துக்குள் முதல் முறையாக ஒரு திரைப்பட ஷூட்டிங் நடந்தது என்றால் அது தசாவதாரத்துக்காகத்தான். அதற்கான அனுமதியை நான்தான் பெற்றுத் தந்தேன்.
அதே போல அரசின் அனுமதி தேவைப்பட்ட பல இடங்களில் நான்தான் முன்னின்று அதைப் பெற்றுத் தந்தேன். ஆனால் தசாவதார ஆடியோ விழாவில் ஒரு சிறு மரியாதைக்குக் கூட என் பெயரை குறிப்பிடவில்லை. படத்தின் இயக்குநர் ரவிக்குமார் மீது எனக்கு பெரும் மரியாதையுண்டு. அவரது ஊர் மரியாதை படத்தில் நானும் சரத்தும்தான் நாயகர்கள்.
ஆனால் அவர்கூட தனது பேச்சில் படத்தில் பங்குபெற்ற அனைவரின் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் என் பெயரை கடைசிவரை சொல்லவே இல்லை. அந்த விழாவில் நானும்தான் முதல்வருடன் போய் கலந்து கொண்டேன்.
அட, இத்தனை நாட்களுக்குப் பிறகும்கூட, தயாரிப்பாளரோ, இயக்குனரோ என்னிடம் ஒரு பேச்சுக்குக் கூட நன்றி தெரிவிக்கவில்லை. பெரிய படம், நல்லா ஓடட்டும்... ஆனால் உதவி செய்தவர்களை அதுவும் பல சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவித்த ஒரு படத்துக்கு உதவி செய்த எனக்கு ஒரு நன்றி சொல்லக்கூட அவர்களுக்குத் தோனலையே..." என்றார் வேதனையோடு.
No comments:
Post a Comment