உலகத் தமிழர் இயக்கத்தைத் தடைசெய்த கனடிய அரசுக்குதமிழ்மக்கள் நன்றி செலுத்த வேண்டும்
நீதிக்கும் சமாதானத்துக்குமான ரொறன்ரோ தமிழர்கள் அமைப்பின் அறிக்கை
“கனடாவில் புலிகளின் ஒரு துணை அமைப்பாக நீண்டகாலம் செயல்பட்டு வந்த உலகத் தமிழர் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து தடைசெய்ததின் மூலம், கனடிய அரசாங்கம் தனது ஜனநாயக பற்றுணர்வையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்டியதுடன், இங்கு வாழ்கின்ற 250 ஆயிரம் தமிழ் மக்களை புலிப்பாசிசவாதிகளிடமிருந்து ஓரளவு பாதுகாத்தும் உள்ளது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதற்காக கனடிய அரசாங்கத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”என உலகத் தமிழர் இயக்கத்தை கனடிய அரசாங்கம் தடைசெய்தது குறித்து, ‘நீதிக்கும் சமாதானத்துக்குமான ரொறன்ரோ தமிழர்கள்’என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், “உலகத் தமிழர் இயக்கம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு புலிகளுக்காகவே அவ்வியக்கம் செயல்பட்டு வந்துள்ளது. குறிப்பாக கடின உழைப்பாளிகளாகவும் ஜனநாயக உணர்வுள்ளவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற கனடிய தமிழ் மக்களை, உலகத் தமிழர் இயக்கம் மிரட்டி பணம் பறித்து வன்னியில் உள்ள புலிகளுக்கு அனுப்பி வந்துள்ளது. அத்துடன் புலிகளின் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் கலை நிகழ்ச்சிகளையும் நினைவஞ்சலிக் கூட்டங்களையும் நடாத்தி வந்துள்ளது. அது வெளியிட்டு வந்த ‘உலகத் தமிழர்’என்ற பத்திரிகையை தமிழ் மக்களிடம் பலவந்தமாக விற்பனை செய்து வந்துள்ளது.
உலகத் தமிழர் இயக்கத்தின் வெளிப்படையான நிர்வாகிகளாக சில முதிய தமிழர்களை புலிகள் நியமித்திருந்தாலும், அதன் உண்மையான செயற்பாட்டாளர்களாக வன்னியில் பயிற்சி பெற்ற புலி உறுப்பினர்களே செயல்பட்டு வந்துள்ளனர். உலகத் தமிழர் இயக்கம் செய்து வந்த அடாவடித்தனங்களினால் கனடிய தமிழ் மக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், ‘பூனைக்கு மணி கட்டுவது யார்’என்ற கணக்கில், கனடிய அரசுக்கு அதைத் தெரிவிக்கப் பயந்து கொண்டிருந்தனா.; இருந்தபோதிலும், பல தமிழ்-சிங்கள ஜனநாயக அமைப்புகள் இடையறாமல் செய்துவந்த முயற்சிகளால் இப்பொழுது உலகத் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்டு தமிழர்களின் நெஞ்சில் பால்வார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன்மூலம் மூலம் கனடாவில் புலிகளின் அடாவடித்தனங்கள் முடிந்துவிட்டதாகக் கருதப்பட முடியாது. ஏனெனில் இங்குள்ள தமிழர்களிடம் பணம் பறித்து புலிகளுக்கு வழங்கும் இன்னொரு புலி பினாமி அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தடை ஏதும் இன்றி செயல்பட்டு வருகின்றது. அதையும் கனடிய அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். அதுமாத்திரமின்றி வேறு பல முன்னணி அமைப்புகளையும் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனர். அவை பற்றிய விபரங்களையும் கனடிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்து உதவ வேண்டும்.
இது தவிர நேரடி பணவசூலிப்பிற்கு என்றோ ஒரு நாள் தடைவரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட புலிகள், தாம் தமிழ் மக்களிடம் சூறையாடிய பணத்தில் ஒரு பகுதியை பல்வேறு நபர்களின் பெயர்களில் முதலீடு செய்து பல பெரிய வியாபாரங்களை கனடாவில் ஆரம்பித்து நடாத்தி வருகின்றனர். அவை பற்றியும் கனடிய அரசாஙகம் தீவிர கவனம் செலுத்தி ஆராய வேண்டும். கனடிய அரசாங்கம் அப்பணியை செவ்வனே மேற்கொள்ள தகவல்களைக் கொடுத்து உதவவேண்டியது இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் முக்கியமான கடமையாகும். அப்பொழுதுதான் கனடாவில் புலிகளின் அடாவடித்தனங்களிலிருந்து தமிழ் மக்கள் தப்பிப் பிழைக்க முடியும். கனடாவில் பாசிசப் புலிகளின் நடவடிக்கைகளை முற்றுமுழுதாக ஒடுக்குவதானால், இங்கு வாழ்கின்ற தமிழ்-சிங்கள ஜனநாயக சக்திகள் தமது வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமைப்பட்டு, மக்களை வழிநடாத்திச் செல்வது மிகவும் அவசியமாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment